செவ்வாய், 18 மே, 2021

புலிநகக் கொன்றை - வாசிப்பனுபவம்

சிறுவயதில் பி ஆர் சோப்ரா-வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் "நான் காலம் பேசுகிறேன்" என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்த்துக்கொண்டிருக்கிறது.. நம் கடந்தகாலம், நிகழ்காலம், இனிவரும் எதிர்காலத்தையும்.. அது யாருக்காகவும் நிற்பதில்லை.. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் நாம் என்ன முடிவெடுக்கிறோமோ அதுவே நாம்.. நாம் அதுவாகவே ஆகிறோம்...

ஜெயமோகனின் "குமரித்துறைவியில்" காலமின்மையை உணர்ந்த பிறகு காலம் எவருக்காகவும் நிற்காதென காட்டும் புலிநகக் கொன்றை...

மரணப்படுக்கையில் இருக்கும் பொன்னாப்பாட்டி. அவள் நினைவினூடாக அவளுடைய பரம்பரை, குடும்பம், நிலம், நீச்சு என நீள்கிறது.. இது பொன்னாப்பாட்டியின் குடும்ப வரலாறா எனில், அதுமட்டும் இல்லை. கதையினூடாக தமிழகத்தின் வரலாறும் கூடவே பின்னிப்பிணைந்திருக்கிறது...

சுமார் முதல் நூறு பக்கங்களில் தென்கலை ஐயங்கார் குடும்பத்தை வைத்து நகரும் கதை திடீரென முழுவீச்சுடன் அரசியலுக்குள் நுழைகிறது.. கட்டபொம்மன் முதல் ஊமைத்துரை, ராஜாஜி, வ.உ.சி., பாரதி, வ.வே.சு.ஐயர், வாஞ்சிநாதன், எம்.ஜி.ஆர், தி.மு.க. வரை...

பொன்னப்பட்டியின் கணவன் ராமனின் கொள்ளுத்தாத்தா கேசவ ஐயங்கார் காலத்தில் கட்டபொம்மனை தூக்கிலிடுவது போகிறபோக்கில் ஒரு செய்தியாக வருகிறது. கேசவ ஐயங்கார் மூலமாக அரசியல் குடும்பத்திற்குள் நுழைகிறது. சிறிதுகாலத்திற்குப்பின் பொன்னாப்படியின் தாத்தா சிப்பாய்கலகத்தின் துப்பாக்கிச்சூட்டில் தன உயிரை விடுகிறார்.

பொன்னாப்பாட்டியின் அடுத்த தலைமுறையில் அவரது மகன் நம்மாழ்வார் திலகரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஆயுதபுரட்சி மூலமே வெள்ளையரை விரட்டமுடியுமென உழைக்கிறார். ஆனால் ஆஷ்துரை வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்படுவது அவரது மனதை மாற்றுகிறது, நாடோடியாகி துறவியாகிறார்... அவரது மகன் மதுரகவி காங்கிரஸ் கட்சியில் தொடங்கி கம்யூனிஸ்டாக மாறி தான் நம்பிய கொள்கைக்காக உயிர் துறக்கிறான். அவரது மகன் நம்பி, கம்யூனிசத்தை நம்பி ஏற்றுக்கொண்டதனால் அவனுடைய வாழ்க்கையையும் உயிரையும் இழக்கிறான்.

குடும்பத்தில் இளவயது துர்மரணங்கள் அரசியலோடு கலந்து நடந்துகொண்டே இருக்கின்றன. ஊழ் பலவாறு குடும்பத்தை புரட்டியெடுக்கிறது.

நாவலின் காலம் மிகவும் பெரியது என்பதால் பலவிதமான தகவல்களை சுவாரஸ்யத்தோடு ஆசிரியரால் உள்ளே கொண்டு வரமுடிகிறது. ராஜாஜி, வ.உ.சி., பாரதி, வ.வே.சு.ஐயர், வாஞ்சிநாதன் போன்றோர் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். வ.வே.சு.ஐயர் நடத்தும் பள்ளியில் தனிப் பந்தி போடும் நிகழ்ச்சியும் கதையினூடாக வருகிறது. அதனை ஈவெரா எப்படி அரசியலாக்குகிறார் என்பதையும் விட்டுவைக்கவில்லை.

அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். நம்பி, கண்ணன், திருமலை போன்ற பாத்திரங்களுக்கு நடுவில் பொன்னாப்பாட்டி, உமா, ராதா, ரோசா போன்ற பலமான பெண்களும், நரசிம்மன், ஜீயர், ஜெர்மன் ஐயங்கார் போன்ற துணை கதாபாத்திரங்களும் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

எவ்வளவு கவலைகள்... ஒத்துழையாமை இயக்கம் எப்படி அவனுடைய வக்கீல் தொழிலை எப்படி குலைக்குமென்னும் பட்சியின் கவலை, மகளுக்கு மறுமணம் செய்ய முடியாமல் தவிக்கும் ராமனின் கவலை, பக்கத்துவீட்டு ஐயரை பற்றி பொன்னாவின் கவலை..

பலவிதமான நகைச்சுவைகள்... ஜெர்மன் ஐயங்காரின் சர்வாங்க சவரம், மாணவர்கள் கல்லூரியை ஆஸ்ட்விச்சுடனும், அவரை ஜின்னாவுடனும் ஒப்பிடும்போது அவரின் பதில்...

ஆசிரியரின் வாசிப்பும் பொதுஅறிவு வெளிப்படும் இடங்கள் முக்கியமாக இரண்டு. ஒன்று நாவலில் காட்டப்படும் மேற்கோள்கள். ஷேக்ஸ்பியரிலிருந்து கம்பன் வரை.. மார்க்சிய சிந்தனையாளர்கள் முதல் ரெம்ப்ராண்டின் The Anatomy Lesson of Dr. Nicolaes Tulp ஓவியம் வரை.. பல புத்தகங்களை வாசிக்கத்தூண்டும் மேற்கோள்கள்... இரண்டாவது பல நுண்தகவல்கள்.. எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டநாளில்தான் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஆட்டம் தொடங்கியது, ஆஷ்துரையை  சுட்ட வாஞ்சிநாதன் திருவிதாங்கூர் அரசில் காட்டிலாகாவில் ரேஞ்சராக பணியாற்றிக்கொண்டிருந்தார், என்பன போல... 

இன்னொரு அம்சம்.. வெவ்வேறு காலங்களில் படிக்கப்பட்ட புத்தகங்கள்... தொடக்கத்தில் "குற்றமும் தண்டனையும்", பிறகு கம்பன், பிரபந்தங்கள், ஜி.கே. செஸ்டர்டன், The Mayor of Casterbridge, கிரிக்கெட் பற்றிய புத்தகங்கள்.. இந்த வாழ்க்கை வாசிப்பதற்கே

எந்த ஒரு சித்ததாந்தமும் அடிப்படையில் வன்முறையையே போதிக்கிறது. எந்த ஒரு சித்தாந்தத்தையும் முழுமையாக நம்பக்கூடாது என்னும் கருத்து கதையின் அடிச்சரடாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. நம்மாழ்வாரும் சரி, நம்பியும் சரி, மீண்டும் மீண்டும் தங்கள் சித்தாந்தங்களை மறுபரிசீலனை செய்துகொண்டே இருக்கிறார்கள்... நம்மாழ்வார்-நம்பி உரையாடல் வாழ்க்கையின் நிதர்சங்களை அடிக்கோடிட்டு காட்டுகிறது. கண்ணன் தொடக்கத்தில் அரசியலில் நுழைய நினைத்தாலும் தன் காதலி உமாவின், தங்கை ராதாவின் உந்துதலால் மத்திய அரசின் ஆட்சிப்பணிக்கு செல்கிறான்.

இவற்றிற்கெல்லாம் நடுவில்... புத்தகத்தின் முக்கியமான பேசுபொருள்... காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.. வரலாறு யாருக்காகவும் நிற்பதில்லை.. சில சமயங்களில் நம்மை மீறி சென்றுவிடுகிறது, நம்பியின் கதை போல... சில சமயங்களில் நம்மை வெளியே வைத்து விளையாடுகிறது, நம்மாழ்வாரின் கதை போல... சில சமயங்களில் நம்மை மாற்றி சென்றுவிடுகிறது, உண்டியல் கடை குடும்பத்தை போல... அப்படி காலத்தால், வரலாற்றால் சுழற்றியடிக்கப்பட்ட குடும்பத்தின் கதையே புலிநகக் கொன்றை... 

வியாழன், 22 ஏப்ரல், 2021

குமரித்துறைவி - வாசிப்பனுபவம்

ஒருசில கதைகளை படித்தால் அதில் நாமும் ஒரு கதாபாத்திரமாக வாழ்வதுபோல தோன்றிவிடும். என் மகளின் திருமணத்தை நடத்தும்போது (இப்போது ஐந்தாம் வகுப்புதான்) குமரித்துறைவி படித்தபோது இந்த வாசிப்பு அனுபவம்  Déjà vu ஆக இருக்குமென்பதை இப்போதே உணரமுடிகிறது. நாவல்கள் நிகர்வாழ்க்கை அனுபவத்தை அளிக்குமென்பதை மீண்டும் மிக அழுத்தமாக உணர்ந்த நாள்.. நாவலிலிருந்து வெளிவராமல் அந்த உணர்ச்சிகளின் உச்சநிலையிலேயே கடிதம் எழுதிவிடவேண்டும் என கைகள் பரபரத்தாலும், மனம் நிறைந்து வார்த்தைகள் வரவில்லை.. A Life Time Experience....

வழக்கம்போல நடு இரவில் ஆசானின் தளத்தில் பிற கடிதங்களை படித்து, அவர் பிறந்தநாளன்று அவரின் நீண்டவாழ்வுக்காக இறைவனை பிரார்த்தனை செய்துவிட்டு படுத்துவிட்டேன். இன்று காலை எட்டு மணிக்கு படிக்கத்தொடங்கி ஒரேமூச்சில் முடித்துவிட்டுதான் அலைபேசியை கீழே வைக்க முடிந்தது.. அலையலையாய் எண்ணங்களும் மனவோட்டங்களும்...

எப்போதும் நாவல்கள் ஒருவிதமான சோகத்தையே அப்பிக்கொண்டிருக்கும். மனமும் அந்த சோகத்தில் பங்குகொண்டு கலங்கிக்கொண்டிருக்கும். ஏழாம் உலகம், ஸம்ஸ்கரா, ஊமைச்செந்நாய் போன்ற நாவல்களை படித்தபோது பலமுறை நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். . ஆனால் இன்று முதல்முறையாக நாவல் வாசிக்கும்போது சந்தோஷத்தில் கண்ணீர். என்னுடைய தங்கையின் திருமணத்தின்போது நான் என் அம்மாவை வழியனுப்பும்போது அழக்கூடாது என மிரட்டிவைத்திருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக என் அப்பாவின் கண்களில் கண்ணீர்.. மகள்கள் தந்தையின் வாழ்வில் இருக்கும் இடத்தை உணர்த்திய தருணம்..

வீட்டை கட்டிப்பார்.. கல்யாணம் பண்ணிப்பார் என்னும் சொலவடை பலருக்கும் தெரிந்திருக்கும்.. இந்த "கல்யாணம் பண்ணிப்பார்" என்பது இன்றைய தினங்களின் ஒப்பந்தக்கார்களின் கைகளில் விடப்பட்ட திருமணம் கிடையாது. எல்லாவிதமான சீதனங்களையும், அனைவருக்குமான உடைகளையும், மளிகைகளையும் இன்னபிற பொருட்களையும் நாமே சென்று வாங்கிவந்து, வீட்டில் அவற்றை குழந்தைகளிடமிருந்து காப்பாற்றி அடைகாத்து ஒருமாதகாலமாவது செய்யவேண்டிய வைபவம்.

எங்களில் திருமணம் என்பது பெண்வீட்டாரின் வைபவம்.. மாப்பிளை வீட்டார் வந்து அவர்களுக்கான மிடுக்குடன் எங்களால் மரியாதை செய்விக்கப்பட்டு பெண்ணை கூட்டிச்செல்வார்கள்.. என் அப்பா, அவர் வாழ்க்கையில் மூன்று திருமணங்களை அவரே முன்னின்று நடத்தியிருக்கிறார். அவற்றில் அவருக்கு உதவியாக நான் இருந்திருக்கிறேன்.. எவ்வளவுதான் திட்டமிட்டாலும் ஏதாவது தவறும். சத்தியமான வார்த்தை...

எங்கள் திருமணங்களில் எப்போதும் சில்லறை சச்சரவுகள் உண்டு.. அதுவும் காப்பிக்காக கண்டிப்பாக நடக்கும்.. சூடாக இல்லை, சர்க்கரை சரியாக இல்லை என பலவாறான சச்சரவுகள்.. அதனை இங்கே திவானும் தளவாயும் செய்கிறார்கள்..

இதுவரை நான் எந்தவொரு கல்யாண உற்சவங்களையும் பார்த்ததில்லை.. சிறுவயதில் ஊர்திருவிழாவின்போது விளையாட்டு.. பிள்ளையாரைப்போல.. பிறகு படிப்புக்காகவும் வேலைக்காகவும் வெளியே வந்தபிறகு அவையெல்லாம் கனவாகிப்போனது. அப்பாவிற்கு அனைத்து உறவினர்களையும் அழைத்து எங்கள் ஊரிலேயே ஸ்ரீனிவாச கல்யாணம் செய்யவேண்டுமென ஆசை.. நடந்திருந்தால் கண்டிப்பாக மகாராஜாவைப்போல நான் அவருக்கு தகப்பனாகவும் அவர் ஆதிகேசவனைப்போல எனக்கு மகனாகவும் இருந்து பத்மாவதியை தன் மகளென எண்ணி ஸ்ரீனிவாசனுக்கு திருமணம் செய்து கொடுத்திருப்பார்.. கடைசிவரை நடக்கவில்லை..

திருமணத்தின் விவரணைகளின்போது சிலசமயம் உதயனாகவும், சில சமயங்களில் மஹாராஜாவாகவும் பலசமயங்களில் மகாராஜாவின் பிரஜையாகவும் என்னை உணர்ந்துகொண்டே இருந்தேன். நானும் மகாராஜாவிடமிருந்து ஆசீர்வாதம் வாங்கினேன், ஊட்டுபுறையில் உணவுண்டேன்.. இருபது கல் நடந்து மீண்டும் ஆரல்வாய்மொழி வந்து மீனாம்பிகையை வழியனுப்பினேன்.. அவள் சுந்தரேசருடன் சென்றபோது மகாராஜாவாக நானும் அழுதேன்..

எவ்வளவுக்கு தகவல்கள்.. மகளுக்காக தந்தை அனுப்பும் சீர்வரிசைகளில்.. திருமண சடங்குகளில்.. வரலாற்று மாந்தர்களில்... இவற்றை வரிசைப்படி நினைவில் நிறுத்தவே மறுவாசிப்பு செய்யவேண்டும்..

ஜெ சொன்னதுபோல இந்த குறுநாவலை தொடராக வெளியிட்டிருந்தால் மொத்த அனுபவம் சிதறியிருக்க வாய்ப்புகள் அதிகம்.. நான் என் மகளின் திருமணத்தையும், அதன்பின் ஏற்படும் வெறுமையையும் எண்ணி இப்போதிலிருந்தே கவலைப்பட தொடங்கிவிட்டேன்... பல கவலைகளுடன் இதுவும் சேர்ந்துகொள்கிறது...

இதுவரை ஆரல்வாய்மொழி சென்றதில்லை.. கண்டிப்பாக போகவேண்டும்.. இனிமேல் எப்போது மதுரை மீனாட்சியை நினைத்தாலும் மகாராஜாவும், உதயனும், கங்கம்மாவும், வெங்கப்ப நாயக்கரும், விஜயரங்கய்யரும் கண்டிப்பாக நினைவுக்கு வருவார்கள்..

 மகாராஜா அபினின் போதத்தால் காலத்தை அழித்தாரென்றால் ஜெ சொற்களின் போதத்தால் காலத்தை அழிக்கிறார். அந்த போதத்தில் ஒருதுளியை நமக்கும் அளித்து நம்மையும் காலமின்மையை உணரச்செய்திருக்கிறார்..

திங்கள், 29 மார்ச், 2021

வெக்கை - வாசிப்பனுபவம்

 


 வெக்கை வாங்க

வாழ்க்கையில் இரண்டே வகையான உறவுகள்தான்.. ஓன்று, என்ன நடந்தாலும் உடன் நிற்பவை, மற்றது, சிறிய பிரச்சனையையே காரணம் காட்டி விலகுபவை. என்னுடைய கடுகுபோன்ற சிறிய வாழ்க்கையில் இரண்டையுமே நான் பார்த்திருக்கிறேன். அதே நேரத்தில் மனிதர்களும் இரண்டு வகையே.. என்ன நடந்தாலும் ஏற்றுக்கொண்டு மேலே செல்பவர்கள், எதிர்கொண்டு போராடுபவர்கள். இவ்விரண்டு வகையினரையும் அனைவரும் எதிர்கொண்டிருப்போம்.

இந்த இரண்டு வரிகளை மட்டுமே வைத்துக்கொண்டு பிரமாதமான கதையை எழுதமுடியுமா? இந்த கேள்விக்கான பதில்தான் பூமணி அவர்களின் "வெக்கை" என்னும் நாவல்.

நிலத்திற்காக அண்ணனை கொன்ற வடக்கூரானின் கையை வெட்டப்போய் அவனை கொன்றுவிடுகிறான் செலம்பரம் (சிதம்பரம்). பிறகு மொத்த குடும்பமும் ஓட த்தொடங்குகிறது. செலம்பரமும் அவன் அப்பா பரமசெவம் (பரமசிவம்) ஒரு புறமும், அவனுடைய தங்கையும் தாயும் வேறுபுறமும் வடக்கூரனின் ஆட்களிடமிருந்து தப்பி ஒளிந்து ஓடுகிறன்றனர். இந்த ஓட்டமும் ஒளிதலுமே கதை.

ஒரு பழிவாங்கும் கதையாக இருந்தாலும் முழுவதுமாக பாசத்தால், அன்பினால் கதையை கொண்டுசென்றிருக்கிறார். ஒரு தந்தை தன மகன் மீது வைக்கும் பாசத்தை இதைவிட நுணுக்கமாக கூறுவது கடினம். அம்மா, அப்பா, மாமா, தங்கை, பங்காளிகள் மற்றும் உறவுகள் இவர்களை காப்பாற்ற எடுக்கும் அபாயமான துணிச்சல் ஒன்றே உறவுகளின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கிறது. உறவுகளென்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

புத்தகம் படித்தபிறகும் அசுரன் திரைப்படத்தை பலநாட்கள் பார்க்கவில்லை. ஏனென்றால் பலசமயங்களில் திரைப்படத்தை எடுக்கும்போது கதையில் உள்ள உயிரோட்டம் தவறிவிடும். இங்கு திரைப்படத்தை கதையின் உயிரோட்டத்துடன் எடுத்த இயக்குனர் வெற்றிமாறனை பாராட்டியே ஆகவேண்டும். பலர் இதில் தவறவிட்ட ஒரு முக்கியமான விஷயம், இந்த திரைப்படம் வெக்கை நாவலை மட்டும் மையமாக வைத்து நகரவில்லை, கீழ்வெண்மணியில் நடந்த கொடூரத்தையும் இந்த தலைமுறைக்கு சொல்லியிருக்கிறது.

கதையில் இருந்த பாசம் திரைப்படத்தில் பழிவாங்கலாக தெரிவது எழுத்துக்கும் நிகழ்கலைக்குமான வேறுபாடேயன்றி வேறில்லை.

திங்கள், 23 மார்ச், 2020

ரத்தகாயம் - சிறுகதை

"செருப்பால அடிப்பேண்டா நாயே" என அப்பா உதைக்க போர்வையை வாரிச்சுருட்டி எழுந்து அமர்ந்தேன். நல்லவேளை.. அப்பா நேரில் இல்லை. ஹாஸ்டலில் வெள்ளிக்கிழமை மதியம் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு இனிமேல் தூங்கக்கூடாது எனும் பழைய உறுதிமொழியை மறுபடியும் மனதிற்குள் ஒட்டிக்கொண்டேன். கையில் கடிகாரம் மணி ஆறு எனச்சொன்னது. எதிரில் பார்த்தால் ராஜூ வாயின் ஓரத்தில் வழிய தூங்கிக்கொண்டிருந்தான். ரோனி இன்னும் கல்லூரியிலிருந்து வரவில்லை. ரோனி ஒரு மலையாளத்தான், விளையாட போயிருப்பான். ஹாஸ்டலிலிருந்த மலையாளத்தான்கள் எல்லாரும் பெற்றோர் துபாயிலிருந்து அனுப்பிய பணத்தை செலவுசெய்துகொண்டிருந்தார்கள். நடுநடுவே கொஞ்சம் படிப்பு.

வெளிய ஏதோ பரபரப்புடன் கூடிய கூச்சல்... கதவிலிருந்த கம்பிவலை வழியாக தெரிந்த ரமணியிடம் "என்னடா பண்ணிக்கிட்டுருக்கீங்க" என்றேன்.

"நீயே போய்ப்பாத்துக்கோ, எனக்கு பாத்தவுடன் பக்குன்னு ஆயிடிச்சு.. பயந்து திரும்பிட்டேன்"

"பரவாயில்ல சொல்லுடா, அது வரைக்கும் போகணும்ல, திரும்பவும் தூங்கலாம்ன்னு இருக்குடா"

"அங்க ஈரமாய் ஒத்தக்காலடித்தடம்டா... அதுவும் ரத்தக்கரையோட... வாட்சமேனும் பசங்களும் பாத்துக்கிட்டுருக்காங்க"

இந்தமாதிரி அமானுஷ்யமான விஷயங்களில் பயமிருந்தாலும் ஒரு ஈர்ப்பு இருக்கும். அதுவும் இப்பொழுது தனியாக இல்லையே. அங்கே ஒரு கூட்டமே இருக்கிறது... ராஜூவை உதைத்து எழுப்பி

"டேய் ஏதோ பேய் இருக்கு போல.. வாடா போய் பாக்கலாம்".

"மூடிக்கிட்டு போடா.. உனக்கு பயம், துணைக்கு நான் வரணுமா..."

உதைவாங்கிய கோவம்.

போனவாரந்தான் ஹாஸ்டலுக்கு முன் யாரோ ஒரு பொம்மைக்கு ஆணியெல்லாம் குத்தி தொங்கவிட்டிருந்தார்கள். அந்த பீதி போவதற்குள் இப்படி.

போய்ப்பார்த்தால் வாஷ்பேசின் பக்கத்திலிருந்து பாதி காய்ந்த ஒரு ஒத்தையான வலதுகாலின் தடம்... அந்த ஈரக்காலடியில் ரத்தம்.. அந்த ரத்தத்துடன் கூடிய காலடித்தடம் நாலடிக்கொருமுறை விழுந்திருந்தது. ஈரம் காயத்தொடங்கியிருந்தது. இடதுகாலடிக்கான தடமே இல்லை. காலடித்தடம் எங்கே போகிறது என பார்ப்பதற்குள் வாட்ச்மேன் மணி வாளி தண்ணீரை கொட்டி கெடுத்துவிட்டிருந்தார்.

"இந்தாளுக்கு கண்ணும் தெரியாது காதும் கேக்காது.. போனவாட்டி கம்பிகேட்டை தொறந்து யாரோ பொம்மையை கட்டியிருக்காங்க, அதுவும் கேக்கலை... " யாரோ வாட்ச்மேனை திட்டுவதும், "போனவாட்டி பொம்மையக்கட்டினப்போ நேர்மேல் ரூம்ல இருந்த ரங்கதுரைக்கு ரெண்டுநாள் காய்ச்சல், சாதாரண பொம்மைக்கே காய்ச்சல்னா இந்தவாட்டி.." என உதிரியாக என் காதில் விழுந்தன.

கொஞ்சநேரத்தில் ஹாஸ்டலே அல்லோகலப்பட்டது. பேய் பயத்தில் ஊருக்கு போகவில்லை என சொன்னவர்கள் பலரும் வீட்டிற்கு ஓடினார்கள். அப்பாவிடம் கேட்டதற்கு "பேயெல்லாம் ஒண்ணுமில்லை.. துணிதுவைக்க பணம் செலவுபண்ணிக்கிட்டு இங்க வராத, அம்மா அவ ஒண்ணுவிட்ட அண்ணா பையன் கல்யாணத்துக்கு போறா... இங்கவந்தாலும் நீதான் துவைக்கணும், இதைக்கேக்க எஸ்டீடி போட்டு பணம்வேற தண்டம் " என சொன்னார்.

ரூமுக்கு வந்ததும் ராஜூ "நானும் ஊருக்கு போகலைடா, ரெண்டுநாளும் எப்படியாவது ஒட்டிரலாம்"

ஊருக்கு ஓடிப்போன பயந்தாங்கோழிகளை கழித்துக்கட்டினால் ஒரு இருபதுபேர் மட்டுமே ஹாஸ்டலில் மிச்சம்.

"டேய் மணி ஒம்போதைரையாச்சுடா.. மெஸ் மூடிரும்டா.. அதுக்குள்ள சாப்டுட்டு வரலாம், ரமணி, சக்தி, ஸ்ரீனி எல்லாரும் போய்ட்டாங்க"

மொத்தமாக சேர்த்து இருபதுபேர் ஹாஸ்டலில் இருந்தோம். வெளியே கிளம்பவும் ஹாஸ்டலில் பொதுத்தொலைபேசி அடித்தது. அனில் அம்பானி அப்போது 501 ரூபாய்க்கு மொபைல் தராத காலம்... வீட்டிலிருந்து போன் வந்தால் ஹாஸ்டலில் வாசலில் இருக்கும் இந்த இண்டர்காம்மில் தான் பேசவேண்டும்.

"ரங்கதுரையை கூப்பிட முடியுமா" பெண்குரல். அவன் அம்மா போலிருக்கிறது.

"அவன்  இல்லையே.. அவனோட ரூம் பூட்டியிருக்கு.. "

"மதியமே கிளம்பி ஊருக்கு வரேன்னு சொன்னான்.. இன்னும் காணலை.. ஒருவேளை வராம அங்கேயே  தங்கிட்டானான்னு கேக்கத்தான் போன் பண்ணினேன், அவனப்பாத்தா சொல்லிடு.. நாளைக்கு காலைல மொத வேலையா கடைக்கு போன பண்ண சொல்லு.."

"சொல்லிடறேம்மா.."

ரங்கதுரை சிறந்த கூடைப்பந்து வீரன். அவனுடைய அப்பா ராசிபுரத்தில் கடைவைத்திருக்கிறார். கல்லூரிக்கு  சேர்ந்து இந்த மூன்று மாதங்களில் சில தடவை மட்டுமே பேசியிருந்தாலும் கலகலப்பாக பேசுவான். போனவாரம் காய்ச்சல் வந்ததிலிருந்து ரொம்பவும் அமைதியாகிவிட்டான்.

சாப்பிடும்போதும் வெறும் பேய்க்கதைகள். கூடவே சின்னவயதில் பேய் ஒட்டியதை பார்த்த அனுபவங்களும், பேய்ப்படங்களின் கதைகளும்... அசோக்கிற்கு பிறகு பேய்களைப்பற்றி நிறைய தெரிந்த குமரன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். அவன் ஒய்ஜா போர்டெல்லாம் வைத்து ஏதோ செய்துகொண்டிருப்பான்...

"டேய்.. இந்த மலையாளத்தானுக பம்மிக்கிட்டு சாப்பிட வெளியே போய்ட்டானுங்க.. ஏதோ ஹோட்டல்ல தங்கறானுங்களாம், வாட்ச்மேனை தனியா கவனிச்சிருக்கானுங்க... பயந்து சாகறானுங்க.. அந்த காசை என்கிட்ட குடுத்திருந்தா நானே வழிபண்ணியிருப்பேன்"

மனதில் மெல்ல கிலி ஓடியது.. ராமசாமி இருந்தால் நான் கூட ஏதாவது படத்திற்கு சென்று பேருந்து நிலையம், ரயில் நிலையம் என அவனை இழுத்துக்கொண்டு சுற்றிவிட்டு காலையில் வந்திருப்பேன்... துரோகி.. ஊருக்கு ஓடிவிட்டான்..

"அப்ப இன்னிக்கு நம்ம மட்டுந்தான் ஹாஸ்டல்ல தங்கணுமா?? வாட்ச்மேன் கூட மெஸ்சில தங்கிடுவாண்டா"

"டேய் பயந்தாங்கோழி.. ஏன்டா பயந்து சாகற.. இன்னைக்கு நம்ம ஒய்ஜாபோர்ட் வச்சு பாக்கலாம்.. என்னால எங்க தாத்தா கூட பேசமுடியும்.. யாருக்கு பிரச்சனைன்னு பாத்தா அவரு சொல்லிட்டு போறாரு"

சாப்பிட்டுவிட்டு என் அறைக்கு திரும்பும்போது, மறுபடியும் ரங்கதுரையின் அம்மாவின் போன்..

"அவனை நான் பாக்கலை  அம்மா... வந்திடுவான்.. பயப்படாதீங்க"

"இல்லப்பா, மதியமே கிளம்பறேன்னு சொன்னான், ஒருவேளை காலேஜ் முடிஞ்சதுக்கப்புறம் சாயங்காலம் கிளம்பினாலும் ஒம்போதுமணிக்கெல்லாம் வந்திடுவான், இப்போ மணி பத்தரை.."

"பயப்படாதீங்கம்மா.. பர்ஸ்ட் இயர் அப்படீங்கறதால நாங்களும் வெளில போகக்கூடாது.. ஒருவேளை ஊருக்கு வராமல் படத்துக்கு போயிருந்தால் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துருவான், வந்தா போன் பண்ண சொல்றேன்.."

என் அறைக்கு திரும்பியபோது குமரன் என் அறையையே மாற்றியிருந்தான்.. அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு கும்மிருட்டாக்கி மெழுகுவர்த்தியை ஏற்றி ஏதோ மந்திர அறைபோல் வைத்திருந்தான்.
தரையில் நட்சத்திரத்தை போட்டு ஆங்கில எழுத்துக்களையும் எண்களையும் கிறுக்கிவைத்திருந்தான்.

"ஏண்டா இதுக்கெல்லாம் என் ரூம்தானா கிடைச்சது.. மொதல்லியே எனக்கு வயத்தை கலக்குது"

"அன்னிக்கே ரங்கதுரைக்கு காய்ச்சல் வந்த உடனே எங்க தாத்தா சொன்னாரு... இந்த காவு அவனுக்காக வச்சதுன்னு..., அவன்தான் கேக்கலை"

"அவங்கம்மா கொஞ்சநேரத்துக்கு முன்னாடிதாண்டா பேசினாங்க, ஊருக்கு வரேன்னுட்டு வரலையாம்.."

"அப்போ எங்க தாத்தாவோட பேசறது ரொம்பவும் அவசரம்டா.. அவராலதான் இவனுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லமுடியும்.."

உடனே கண்கலைமூடிக்கொண்டு புரியாத பாஷைகளில் ஏதோ மந்திரங்களை சொல்லத்தொடங்கினான். என்னைத்தவிர அங்கே இருந்த ரமணி, ஸ்ரீனி, பாலா, ராஜூ எல்லாருக்கும் மனதில் படபடப்பு ஓடியது முகத்தில் பயமாக தெரிந்தது.

குமரனின் கை திடீரென மெழுகுவர்த்தியின் சுடரை தொட்டு விலகியது. மற்றொரு கை பக்கத்திலிருந்த ஒருரூபாய் நாணயத்தை எடுத்தது.

குமரன் வித்தியாசமான கீச்சிடும் குரலில் "என்னடா, என்ன வேணும்" என கேட்டவுடன், ராஜூ போர்வையை இறுக்க போர்த்திக்கொண்டு "காலைல நான் உங்களை பாக்குறேன்டா, மயக்கம் போட்டுட்டீங்கன்னா ஹாஸ்பிடல் சேர்க்க நான் மட்டுமாவது இருக்கேன்" என வாக்மேனை மாட்டிக்கொண்டான்.

அந்த குரலில் சொல்லமுடியாத ஒரு அமானுஷ்யத்தன்மை இருந்தது. குமரன் இன்னும் கண்களை மூடிக்கொண்டுதான் இருந்தான். நடுநடுவே குமரன் ஏதோ சில மந்திரங்களை முனகினான். கூடவே அவன் கை ஒய்ஜா போர்டில் நகர்ந்துகொண்டிருந்தது. மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அவன் கை மெதுவாக ரங்கதுரை என்னும் ஆங்கில எழுத்துக்கள் மேல் நகர்ந்தது.

அதே குரலில், "ரங்கதுரைக்கு ரத்த காயம்.. காட்டேரி காவுவாங்க தொடங்கிவிட்டது, இப்போ அவன் ரொம்பபேர் இருக்குற ஒரு இடத்தில் இருக்கான். சுத்தி ஒரே சத்தம், கல்லால் அடிபட்டு ரத்தம் சிந்தியிருக்கான்."

நான், "எங்க தாத்தா அடிபட்டிருக்கு? நாங்க வேணும்னா அவனை பஸ் ஸ்டாண்டிலோ ரயில்வே ஸ்டேஷனிலோ தேடப்போலாமா?"

"குறுக்கில யாரும் பேசக்கூடாது. இங்கேருந்து யாரும் போகக்கூடாது, அப்புறம் இன்னைக்கு நான் திரும்ப இங்க வரவே முடியாது, அதுவுமில்லாம, அவனை எங்கேயெல்லாம் போய்த்தேடுவீங்க"

"போலீஸ்-ல சொன்னா? ரத்தக்காயம்-ன்னு வேற சொல்லறீங்க"

கிரீச்சிடும் குரலில் திடீரென ஒரு பயங்கரம் ஒலிக்கத்தொடங்கியது. "போகாதேன்னு சொல்றேன் புரியல, முட்டாப்பயலே, மூடிக்கிட்டு ஒக்காரு"

யாரோ மெதுவாக கேவும் சத்தம் கேட்டது.. மெல்லிய சிறுநீர் நாற்றம்..

தொலைபேசி திடீரென அலறி யாரும் எடுக்காததால் அடங்கியது...

"எவனாவது வெளில போனீங்க நான் உங்களை காவு வாங்கிடுவேன்.." குரலில் பயங்கரம் இன்னும் கூடியது..

நான் பம்மிக்கொண்டே சுவற்றிலிருந்த முருகனின் படத்தை பார்த்தேன். சம்மந்தமில்லாமல் ரஜினியின் தில்லுமுல்லு திரைப்படம் நினைவுக்கு வந்தது.

மின்சாரமும் போய்விட மொத்த ஹாஸ்டலும் இருட்டில் மூழ்கியது. அமைதி. மையிருட்டு. திடீரென ரோனியின் கடிகாரம் நாள் மாறியதற்கான சத்ததை எழுப்பியது.

அந்த சத்தத்தை கேட்டவுடன் "நீங்க சொல்றதை எப்படி நம்பறது" ஸ்ரீனி தைரியத்தை வலுக்கட்டாயமாக வரவழைத்த குரலில் கேட்டான்.

"அவங்கம்மா வேற ரெண்டுமுறை போன் பண்ணி கேட்டிருக்காங்க, இப்போ வந்தது கூட அவங்களோட போன இருக்கோன்னு சந்தேகமா இருக்கு. நீங்க எடுக்கவிடலை"

"போன்-ல அவங்ககிட்ட என்ன சொன்னாலும் நடந்ததை யாராலும் மாத்தவேமுடியாது, நடந்தது நடந்ததுதான்"

திடீரென குமரன் வேறு குரலில் பேசத்தொடங்கினான்.. ரங்கதுரையின் போலிருந்தது..

"மச்சான் டேய், கல்லுல அடிபட்டுடுச்சுடா, எனக்கு என்ன பண்ணனும்னே தெரியலடா"

மீண்டும் கிரீச்சிடும் குரலில் "எவனோ நம்பிக்கை பத்தி பேசினானே, எங்கடா அவன்"

மூத்திர நாத்தம் அதிகமாக வரத்தொடங்கியது.

திடீரென "செருப்பால அடிப்பேண்டா நாயே" என அப்பா கத்தி உதைத்தார். வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தால், குமரன் என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே ஓடினான். அப்பா பேசியமாதிரியே இருந்ததே என மனதில் எண்ணிக்கொண்டே வலித்த முதுகை தடவிக்கொண்டேன். எதிரே காலண்டரை பார்க்க அது சனிக்கிழமை என சொன்னது. மேலே முருகன் யாமிருக்க பயமேன் என்றார். ராஜூ எழுந்துவிட்டிருந்தான், அவனுடைய தலையணையில் எச்சில் ஊறிக்கிடந்தது. ஒய்ஜா அப்படியே கிடக்க அறைமுழுதும் சிறுநீர் நாற்றத்துடன் வழிந்திருந்தது. இரண்டுபேரின் லுங்கி ஈரமாகிக்கிடந்தது.

எட்டிப்பார்த்தால் ரோனியும் அவனுடைய கூட்டுக்காரனான விகாஸும் வராந்தாவில் வந்துகொண்டிருந்தார்கள். ரோனி அவனிடம் பாண்டிகள் என ஏதோ சொல்ல இருவரும் சிரித்தார்கள்.

என்னிடம் ஆங்கிலத்தில் "ரூமை என்னடா செய்துவைத்திருக்கிறீர்கள், ஒரே நாத்தம்" என கத்த, மனதில் "மவனே நேத்து மட்டும் நீ இருந்திருந்த மூச்சா மட்டுமில்லை கக்கா கூட போயிருப்ப" என நினைத்துக்கொண்டே "இருடா, சுத்தம் செய்யவேண்டும்" என சொன்னேன்.

வாஷ்பேசின் பக்கத்தில் ரங்கதுரை ஏதோ செய்துகொண்டிருந்தான். கொஞ்சம் நிம்மதி...

'டேய் உங்கம்மா நேத்து ரெண்டுமுறை போன் பண்ணினாங்க, ஏண்டா ஊருக்கு போகல, ரொம்ப பயந்துட்டாங்க"

"திடீர்ன்னு ரெண்டு ரெகார்ட் நோட்ஸை திங்கட்கிழமை காட்டணும்னு பிசிக்ஸ் புரபஸர் சொல்லிட்டாரு. நான் கடைக்கு போன்பண்ணி அப்பாகிட்ட சொல்லிட்டேன், அப்பா வீட்டுக்கு போக பன்னெண்டுமணி ஆயிடிச்சாம். அதனால அம்மா பயந்துட்டாங்க."

"அம்மாகிட்ட பேசியாச்சா"

"பேசிட்டேண்டா.. தேங்க்ஸ்டா...

"மச்சான், நேத்து உனக்கு ஏதாவது ரத்தக்காயம் இருந்ததா"

"ஆமாடா", இருந்த கொஞ்சநஞ்ச நிம்மதியும் போய் என் முகம் வெளிற தொடங்கியது.

"நேத்து குமரன் ஏதோ மிமிக்ரி பண்ணப்போய் சிரிச்சுகிட்டே வந்ததில் வலதுகாலில் ஆணி ஏறிடுச்சு, பொலபொலன்னு ரத்தம்... குமரன்தான் கால்கழுவ தண்ணி ஊத்தி தொடச்சிவிட்டு கட்டுப்போட்டான், ஹாஸ்பிடல் கூட்டிகிட்டுபோய் டெட்டனஸ் இன்ஜெக்ஷன் போட்டு அண்ணா வீட்டில விட்டுவந்தான்.. அவனை பாத்தியா.. தேங்க்ஸ் சொல்லணும்டா.. ".

ஆத்திரத்துடன் அவனை தேடி ஓடத்தொடங்க எனது இடதுகாலில் ஆணி ஏறியது. "முருகா" என கத்தவும் காலையில் பார்த்த சிரிப்புடன் குமரன் தோன்றினான்.

வியாழன், 26 டிசம்பர், 2019

உப்புவேலி - வாசிப்பு அனுபவம்

நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது பள்ளியில் காந்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு காந்தியின் வாழ்க்கை பற்றி ஒரு புத்தகத்தை கொடுத்தார்கள். அதை படித்து அதனுடன் வந்த கேள்விகளுக்கு பதில் எழுதி அனுப்பினால் சான்றிதழும் காந்தியின் படத்துடன் உள்ள அஞ்சலட்டையும் தந்தார்கள். அந்த வயதில் என்னை கவர்ந்தது அவருடைய சத்தியம் பற்றிய குறிப்பு. சற்றே வளர்ந்தபோது அஹிம்சை, புலால் உண்ணாமை முதலியன. ஆனால், கல்லூரியின்போது அவரை முழுவதுமாக பிடிக்காமல் போனது. அதுவும் இந்த கிழம் பகத் சிங்கும் நேதாஜியும் சுதந்திரத்திற்கு போராடும்போது கடற்கரையில் போய் உப்பு காய்ச்சுகிறது, எல்லாம் நாட்டின் தலையெழுத்து என்னும் எண்ணம்.

பிறகு, மெல்ல மெல்ல முதிர, இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது ஒருவர் உப்பினை காய்ச்சினால், ஏதோ இருக்கும், அதுவும் நான் மிகவும் விரும்பிய வியாசர் விருந்து புத்தகத்தை எழுதிய ராஜாஜியும், என் ஆதர்சமான காமராஜரும் வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சியிருக்கிறார்கள். ஏதோ இருக்கிறது என தேடும்போது, வழமைகளில் ஒன்றான ஜெயமோகன் அவர்களின் தளத்தில் தேடினேன். அப்போது கிடைத்ததுதான் உப்புவேலி என்னும் புத்தகம்.

புத்தகத்தின் ஆசிரியர் ராய் மாக்ஸம், தேயிலை தோட்டாக்காரர், கலைப்பொருள் கண்காட்சி வைத்திருந்தவர், லண்டன் நூலகத்தில் ஆவணகாப்பாளராக பணிபுரிந்திருக்கிறார். தமிழில் சிறில் அலெக்ஸ் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

தெருவோரம் இருக்கும் ஒரு சிறிய கடையில் இருபத்தைந்து பவுண்டுகளுக்கு வாங்கிய "ஒரு இந்திய அதிகாரியின் புலம்பல்களை நியாபகங்களும்" என்ற புத்தகத்தில் இருந்த அடிக்குறிப்பை வைத்து ஒரு மாபெரும் வேலியை தேடத்தொடங்குகிறார். முதலில் புத்தகங்களிலும் ஆவணங்களிலும், வரைபடங்களிலும்... அதற்காக அவர் கடும் உழைப்பினை அளித்துள்ளார், நம் நாட்டின் வரலாற்றாளர்கள் பலரும் (பலரும் என்ன, அனைவரும்) தவறவிட்ட ஒன்றினைப்பற்றி..

ராபர்ட் கிளைவ் அடித்த கொள்ளை, அவர் இங்கிலாந்து பாராளுமன்றத்தின் "பெரியவர்களை" லஞ்சம் மூலம் தன்பக்கம் வைத்துக்கொள்வது, கம்பெனி முகலாய மன்னரை பெயரளவில் வைத்து பொம்மை ஆட்சி நடத்தியது என வரலாற்று நிகழ்ச்சிகளுடன் புத்தகம் துவங்குகிறது. தனக்கும் தன நண்பர்களுக்குமான 'பிரத்யேகமான கம்பெனி'யை நிறுவி கொள்ளையை மேலும் வலுப்படுத்துகிறார். இங்கிலாந்தில் அவரது சொத்துமதிப்பு கடும் விமர்சனத்திற்குள்ளாகிறது. வயிற்றுவலியால் அவதிப்பட்டு 49வது வயதில் தற்கொலை என முடிகிறது அவரது வாழ்க்கை. திரும்பிப்பார்த்தால் 32வது வயதில் பெரும் பணக்காரரான ஒருவர் பதினேழு ஆண்டுகளில் இறந்துவிடுகிறார்.

இன்றும் ஆங்கிலேயர்களால் 'இந்தியாவின் கிளைவ்' (Clive of India) என அழைக்கப்படும் ஒருவர் தனிநபராக சேர்த்த செல்வமே இவ்வளவு என்றால், மொத்த கம்பெனி, இங்கிலாந்து அரசு, நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. மற்றொரு உதாரணமாக கிளைவின் சகஊழியர் வருடத்திற்கு நான்கு லட்ச ருபாய் வீதம் உப்பு வரியையும் சேர்த்து அறுவது லட்சரூபாயை தன நாட்டிற்கு கொண்டுசெல்கிறார். இங்கிலாந்தின் தனிநபர்களும், கம்பெனியும் இங்கிருந்து கொண்டுசென்ற பணத்தை இங்கிலாந்தில் செலவு செய்கின்றனர், இங்கே ஏற்பட்டிருக்கவேண்டிய வேலைவாய்ப்புகள் வெளிநாட்டில் உருவாயின.

உப்பின் வரி எவ்வாறெல்லாம் விதிக்கலாம், ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தின் அளவு, கால்நடைகளுக்கு உப்பின் அவசியம், அந்த காலகட்டத்தில் ஏழை இந்திய குடும்பத்தின் சராசரி வருமானம், என பல விவாதங்கள் கம்பெனிக்குள் நடக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான தங்கள் ஒரு குடும்பத்தின் உப்புக்கான செலவு அக்குடும்பத்தின் இரண்டுமாத சம்பளத்திற்கு சமானம்  என்பதே.

கம்பெனியின் வருமானத்தை பெருமளவு பாதித்த எல்லைக்கு அப்பாலிருந்து கொண்டுவரப்பட்ட உப்பை கட்டுக்குள் கொண்டுவரவே இந்த உப்புவேலியினை அமைக்க முடிவாகிறது.

கஸ்டம்ஸ் என்னும் வார்த்தையின் கஷ்டம், பல்வேறு வார்த்தைகளின் கலப்பில் புதர்வேலி பற்றி தேடுதல் என ஆராய்ச்சியை ராய் தொடர்கிறார். சில நண்பர்களின் உதவி மற்றும் பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி Royal Geographical Soceity-யில் அவருக்கு வரைபடம் கிடைக்கிறது.

ஆங்கிலேயரின் வார்த்தைகளிலேயே அந்த புதர்வேலி எவ்வளவு பெரிய அபத்தம் என கூறுகிறார். சுங்கத்துறையில் வேலைசெய்த உள்ளூர் அதிகாரிகளுக்கு சம்பளம் எதுவும் தராததால் வாழ்வாதாரத்திற்கு, அரசிடம் கட்டுப்பாடில்லாத வழிகளுக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். மிரட்டல், சண்டை, குறைந்த காலத்தில் அதிகமாக பணம் சுருட்டுதல் என பல சீர்கேடான வழிகளுக்கு தள்ளப்படுகிறார்கள். இளநிலை சுங்க அதிகாரிகள் செய்த அட்டூழியங்களை பலநிலைகளில் விளக்குகிறார், ஆனால் ஒருமுறை கூட உப்போ சர்க்கரையோ பிடிபடுவதில்லை எனவும் ஒரு அலுவலர் குறிப்பிடுகிறார்.

வாரிசில்லா கொள்கையினை (Doctrine of Lapse) வைத்து பல சிற்றரசுகளை பறித்துக்கொள்வது போன்ற கம்பெனியின் புதிய சட்டங்களையும், சுங்ககாவலர் ரோந்து செய்யும்போது தன்னுடைய காலடி தவிர மற்ற காலடிகளுக்கு பொறுப்பாக வேண்டும் என்பன போன்ற கடுமையான நடவடிக்கைகளும், 1770ம் ஆண்டின் பஞ்சமும், கம்பெனியின் கடுமையான நிலவரிவசூலினால் உழவு செய்தவர்கள் கடத்தல்காரர்கள் ஆனதும் மனதை உலுக்கிவிடுகின்றன.

பிறகு அவருக்கு உதவும் தோழி, தோழியின் மருமகன் சந்தோஷ் அவர்களின் உணவு, குடும்பம் என ஒருபக்கமும், தேடுதல் மறுபக்கமும் என நூல் செல்கிறது. கடைசியில் நகைமுரணாக பர்மத்லைனை காணப்போகும்முன் பிரித்தானியா பிஸ்கெட்டுகளை சாப்பிடுகிறார். கடைசியில் வளர்ச்சிக்காகவும் புதிய சாலைகளுக்காகவும் அழிக்கப்பட்டு மீதமிருக்கும் மேடான இடத்தினை ஒருவர் உப்புவேலியின் மிச்சம் என அவருக்கு காட்டுகிறார்.

வேலிக்காக பயன்பட்ட மரங்கள், அவற்றின் குணங்கள், இந்தியாவில் உப்பினை பயன்படுத்தும் அளவு, உப்புக்குறைபாட்டினால் வரும் உடல்நலக்கேடுகள், பல்வேறு ஆங்கிலேய அதிகாரிகளின் மனநிலை, அவர்கள் வேலைசெய்தவிதம், குற்றபரம்பரைகளின் பின்னணி, என பல தகவல்களை கொண்டுருக்கும் அற்புதமான புத்தகம்.

இந்த புத்தகத்திற்காக ராய் மாக்ஸம் அளித்துள்ள உழைப்பு அளவிடமுடியாதது. ஆனால் கடைசியில், உப்புவேலியின் மிச்சங்களை கண்டபிறகு, அவருக்கு மகிழ்ச்சிக்கு பதிலாக வருத்தமும் சோகமுமே அவரின் மனதை ஆக்கிரமிக்கின்றன.

புத்தகத்தை படித்து முடித்ததும் என் மனது வெறுமையாக இருந்தது. ஒரு சாதாரண உப்பு, சோடியம் குளோரைடு என பள்ளிகளில் நாம் படித்து, அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வது, இந்திய வரலாற்றில் எவ்வளவு முக்கியமான கொள்ளைகளில் இடம்பெற்றிருக்கிறது எனவும், அதே உப்பினால் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்னும் அரையாடை கிழவர் நாட்டு மக்களின் உள்ளத்தையும், வாழ்க்கையையும் எவ்வாறு தொட்டார் எனவும் அறிந்துகொள்ள முடிந்தது.

உப்புவேலி வாங்க

உப்புவேலி ஆங்கில மூலம் - The Great Hedge of India வாங்க

செவ்வாய், 15 அக்டோபர், 2019

குருதிப்புனல் - வாசிப்பனுபவம்

நான் கிராமத்திலேயே வளர்ந்ததாலும் தகப்பனார் அவருடைய வேலையின் பெரும்பகுதியை வருவாய்துறையின் ஆதிதிராவிடர் நலத்துறையில் செய்ததாலும் சாதிவெறி எவ்வாறு ஒரு சமூகத்தை பின்னோக்கி இழுத்துச்செல்கிறது என்பதை உணர்வுபூர்வமாக அறிய பல சந்தர்ப்பங்கள் வாய்த்தன. சிறுவனாக இருந்தபொழுதில் தினமும் பால்வண்டி வந்து பால் நிலையத்தில் கொட்டப்பட்ட பாலினை காலையிலும் மாலையிலும் தருமபுரிக்கு எடுத்துச்செல்லும். ஏதாவது சாதித்தகராறு என்றால் முதலில் தெரிவது இந்த பால்வண்டி வராததே. உடனே பால் வியாபாரிகள் சல்லிசான விலையில் பாலை கேட்பவர்களுக்கு விற்றுவிட்டு சென்றுவிடுவார்கள். எங்கள் வீட்டில் அன்று திரட்டுப்பால் கண்டிப்பாக உண்டு. அந்த திரட்டுப்பாலுக்கு பின்னால் உள்ள வியாபார வன்முறை அப்போது எனக்கு புரிந்ததில்லை. ஆனால் சாதீய வன்முறையின் தாக்கம் வெகுவாக புரிந்தது.

வன்முறை எத்தனை கொடூரமானது என்பதை குருதிப்புனல் மிகவும் விவரணையுடன் படம்பிடித்து காட்டுகிறது. நகரத்தில் படித்து வளர்ந்த ஒருவன் கிராமத்தில் வாழ வந்து அங்கு நடக்கும் சில நிகழ்வுகளால் வன்முறையை கையெடுக்கும் மாற்றமே குருதிப்புனல். ஆசிரியரான இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு புதிய அறிமுகம் எதுவும் தேவைப்படாத நிலையில், நேராக என்னுடைய புரிதல்களுக்கே சென்றுவிடுகிறேன்.

கீழ்வெண்மணியில் 44 தலித்துகள் உயிரோடு எரிக்கப்பட்ட உண்மை சம்பவத்தை சுற்றி கதைக்களம் உள்ளது.

கோபாலும் சிவாவும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். கோபால் நகர வாழ்க்கையின் அர்த்தமின்மையை உணர்ந்து கிராமத்திற்கு வந்துவிடுகிறான். அந்த கிராமம் கீழ்வெண்மணி போன்றே சாதிவெறியினால் காலத்தில் பின்னோக்கிச்சென்றுகொண்டிருக்கின்றது.  கோபாலின் அப்பா ஒரு நாயுடு அம்மா ஒரு பிராம்மண பெண்மணி. அவனைத்தேடி சிவா எனும் நண்பன் அதே கிராமத்திற்கு வருவதிலிருந்து கதை தொடங்குகிறது.

கோபால் தனியனாக இருப்பதால் வடிவேலு நடத்தும் டீக்கடையில் உண்டு ராமையாவின் வீட்டில் தங்கியிருக்கிறான். அதே ஊரில் வசிக்கும் நிலச்சுவான்தாரர் கண்ணையா நாயுடு. தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தக்கூடாது என கூட்டுசேரும் மிராசுதாரர்களுக்கும் நிலச்சுவான்தாரர்களுக்கும் defacto தலைவன். அரசியல் பலமும், பணபலமும், ஆள்பலமும் கொண்டவன். வடிவேலு கண்ணையா நாயுடுவின் வைப்பாட்டி மகன். அவன் டீக்கடை நடத்தும் இடத்தை கண்ணையா அபகரிக்க நினைக்கிறான். ராமைய்யா ஒரு கம்யூனிஸ்ட். கூலி அதிகம் கேட்கும் தொழிலாளர்களுக்கு defacto தலைவர். ராமைய்யா தான் நடத்தும் துவக்கப்பள்ளியை கோபாலிடம் ஒப்படைக்க முயல்கிறார். ஆனால் கோபால், கண்ணையா நடத்தவிடமாட்டான் என ஐயம் கொள்கிறான்.

கண்ணையாவிற்கு ஆண்மை குறைவு. அதனை மறைக்கவும், கெளரவத்தை தக்கவைத்துக்கொள்ளவும் பல வைப்பாட்டிகள் வைத்து ஈடுகட்டுகிறான். வடிவேலுவுக்காகவும் பள்ளிக்கூடத்திற்காகவும் கண்ணையாவை அவனது வீட்டில் சந்திக்கும் கோபால் அவரது ஆண்மைக்குறைவு பற்றி பேச கண்ணையா அவனை ஆள்வைத்து அடிக்கிறான். அதே சமயத்தில் வடிவேலுவும் பாப்பாத்தி என்னும் தலித் பெண்ணும் காணாமல் போகிறார்கள். அந்த தலித் பெண்மணிக்கும் கோபாலுக்கும் தொடர்பு இருப்பதாக கண்ணையா குற்றம் சாட்டுகிறான். இதைப்பற்றி உளவறிய
கோபால் கண்ணையாவின் வைப்பாட்டியான பங்கஜம் என்னும் பெண்வீட்டிற்கு செல்கிறான். பங்கஜத்திற்கு கோபால்மேல் ஏற்கனவே ஒரு கண். அந்தவீட்டில்தான் வடிவேலுவும் பாப்பாத்தியும் அடைக்கப்பட்டிருப்பதாக தெரிந்து நடக்கும் தகராறில் கண்ணையாவின் அடியாள் ஒருவன் சாக பழி ராமைய்யா மீது விழுந்து அவர் கைதாகிறார்.

தகராறு வலுக்க ஒரு தலித் நாயுடுவான கண்ணையாவை அறைந்துவிடுகிறான். பிறகு நாயுடு தன் ஆட்களோடும் காவல்துறையின் பாதுகாப்பிலும் பெண்களும் குழந்தைகளும் நிரம்பியிருக்கும் குடிசைக்கு தீ வைக்கிறான். இறுதியில் கோபால் வன்முறையே வழியென தீர்மானிக்கிறான் என்பதுடன் கதை முடிகிறது.

எனக்கு இந்த நாவலில் தரிசனம் என எதுவும் கிடைக்கவில்லை, ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எழுதிய புத்தகம் என்பதால் ஆவராணா போல தரவுகளின் தொகுப்பாக இல்லாமல் பின்வரும் வழிகளில் கதையை அலசலாம். கண்ணையா ஏன் கொலைவெறி கொண்டான் என்பதற்கு காரணங்கள் எதுவும் கூறவில்லை. அவற்றை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம். கூலிக்காரப்பயலுங்களுக்கு நம்மை எதிர்த்துப்பேச எவ்வளவு தைரியம் என்னும் கோபம், ஒரு கீழ்ஜாதிக்காரன் நம்மளை அறைந்துவிட்டானே என்ற வெறி, அனைத்துக்கும் மேலாக ஆண்மை பற்றி பேசியதாலும் தன்னுடைய வைப்பாட்டியை கவர்ந்ததாலும் வந்த வெறி.

அவன் கூலியாட்களை குழப்பவும், ஒரு "பறையன்" அடிக்கும்போதும் மட்டுமே ஜாதியை இழுக்கிறான். இதற்குமேல் புரட்சி தோற்றுப்போக முக்கியமான காரணம், கோபால் மற்றும் சிவாவின் முதிரா இலட்சியவாதம் மற்றும் அனுபவமின்மை. ராமைய்யா பலநாட்களாக செய்துவந்தவற்றை அனுபவமின்மை காரணமாக தொலைத்துவிடுகின்றனர். ஏதோ குறையுள்ள மனிதனை எல்லாரும் சீண்டினார்கள், அவனுடைய வைப்பாட்டியை ஒருவன் கவர்ந்தான், சீண்டப்பட்டவன் திருப்பியடித்தான் என்ற வகையில் கதை முடிவதை என்னால் ஏற்கமுடியவில்லை. ஆனால் கதை அவ்வாறுதான் முடிகிறது.

அதேசமயத்தில், லௌகீக வாழ்க்கையில், இலக்கிலிருந்து விலகி சிற்றின்பங்களுக்கும் பழிவாங்கும் உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுத்தால் எவ்வாறு பின்னால் தள்ளப்படுவோம் என்பதற்கு கோபால் ஒரு சிறந்த உதாரணம். பங்கஜம் மேல் உள்ள ஈர்ப்புனாலும், அவளை அடைவதன்மூலம் கண்ணையாவை பழிவாங்கலாம் என்னும் நினைப்பினாலும் கோபால் பங்கஜதுடன் படுக்கையை பகிர, ஊரார் முன்னிலையில் அவனுடைய நேர்மையை கண்ணையா மிகவும் சுலபமாக கேள்விக்குரியதாக்கிறான்.

இந்தக்கதை மூலமாகத்தான் எனக்கு கீழ்வெண்மணி சம்பவம் பற்றி தெரியவந்தது. இலக்கியத்தில் கீழ்வெண்மணி பற்றி எழுதிய நூல் என்றவகையில் இது மிகமுக்கியமான நூல்.

இந்த கதையை ஜெயமோகன் தன்னுடைய இரண்டாம் பட்டியலில் சேர்கிறார் - பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள்.

திரட்டுப்பால் மனதில் வரும்போதெல்லாம் அதற்குப்பின் நான் சிறுவயதில் அறிந்த சாதீய வன்முறையும் அடக்குமுறையும் மனதை உறுத்தும். திரட்டுப்பால் சாப்பிடுவது வெகுவாக குறைந்துவிட்டது, இப்புத்தகத்தை படித்தபின், முழுவதும் நிறுத்தலாமா என யோசிக்கிறேன்.

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

கடலுக்கு அப்பால் - வாசிப்பனுபவம்

கல்லூரியில் படிக்கும்போது ஏதோ நாம் பெரிய புரட்சி செய்யபோகிறோம் என்னும் எண்ணம் எல்லாருக்கும் இருக்கும்... அதுவும் நான் கல்லூரியில் இருந்த (கவனம், படிக்கும் அல்ல) சமயத்தில்தான் அஜய் தேவ்கன் நடித்த பகத் சிங் திரைப்படம் வந்து, காந்திக்கு எதிரான மனநிலையில் தூபம் போட்டது. பிறகு சில வருடங்களுக்கு பிறகு ரங்தே பசந்தி.. அதே உணர்ச்சி கொந்தளிப்பு, போராட்ட மனநிலை. அப்போதெல்லாம் பகத் சிங்கும், நேதாஜியும் சுதந்திரம் வாங்கித்தந்து நாட்டின் தலைவர்களாயிருந்தால் நாடு உருப்பட்டிருக்கும் என்னும் எண்ணம். இந்த காந்திதான் நாட்டை உருப்படாமல் ஆக்கிவிட்டார் என்னும் மனநிலை. அதோடு கண்ணில்படும் பெண்களெல்லாம் நம்மையே பார்ப்பதுபோல ஒரு தோற்றம். சரிதானே, பெண்களுக்கு புரட்சியாளர்கள்மேல் ஈர்ப்பு அதிகமாக இருந்தாகவேண்டுமே...

இந்த காந்தி வெறுப்பு மறைந்து, நிதரிசனம் என்னை அறைய சிலபல ஆண்டுகளும் புத்தகங்களும் தேவைப்பட்டன. அவற்றில் அண்ணா ஹசாரே அவர்களின் போராட்டமும் என் ஆசானாக நான் கருதும்  ஜெயமோகன் அவர்களின் பதிவுகளும், நூல்களும் முக்கிய பங்காற்றின. இந்த புரிதலை இன்னும் தீவிரப்படுத்தும் வகையில் அமைந்தது ப.சிங்காரம் அவர்கள் எழுதிய கடலுக்கு அப்பால் என்னும் நாவல்.

இன்றைய இலக்கிய உலகில், ப.சிங்காரம் அவர்களுக்கு தனியாக அறிமுகம் எதுவும் தேவை இல்லை. என்றாலும், இரண்டே புத்தகங்கள் எழுதியிருந்தாலும் திருக்குறளின் இரண்டடி போல இரண்டும் பொக்கிஷங்கள். அவரின் வார்த்தைகளிலேயே, அந்த இரண்டு பொக்கிஷங்களை பதிப்பிக்க எவ்வளவு பாடுபட்டார் என்பதை சொல்லியிருக்கிறார். உயிருடனிருந்தபோது நாம் கொண்டாடாமல் விட்டு, நாமே அழித்த ஒரு சிறந்த  கதைசொல்லிதான் ப.சிங்காரம் அவர்கள். புலம்பெயர் எழுத்தாளர்களில் அவரே முன்னோடி.

புலம்பெயர் தமிழனான செல்லையாவின் சுதந்திர போராட்டமும், காதல் போராட்டமுமே இந்த கதை.

செல்லையா தன்னுடைய முதலாளியும் வட்டிக்கடைக்காரருமான வானாயீனாவின் மகள் மரகதத்தை விரும்புகிறான். அவளுக்கும் இவன்மேல் கொள்ளை பிரியம். வானாயீனாவுக்கு தொழில் தெரிந்த தன் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவன் மகளை மணப்பதில் ஒப்புதல்.  அவர் மனைவி காமாட்சிக்கோ செல்லையாபோல ஒரு நல்ல மனிதன் மகளை மணப்பதில் மகிழ்ச்சி. இந்த சூழலில் செல்லையா நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்கிறான். நேதாஜியின் மறைவுக்கு பிறகு இந்திய தேசிய ராணுவத்தினர் அனைவரும் தங்களின் பழைய வாழ்க்கைக்கு வருவதை இந்த புத்தகம் சித்தரிக்கிறது.

வானாயீனா செல்லையாவை தன்னுடைய வியாபாரத்தை பெருக்கும் ஒருவனாகவே பார்க்கிறார். அதனால் பழைய வாழ்க்கைக்கு திரும்பும்போது செல்லையாவும் மரகதமும் தங்கள் காதலை இழக்கின்றனர். அவருக்கு அனைத்தும் வியாபாரமாகவே தெரிகிறது. மகளுக்கு நாகலிங்கத்தை திருமணம் செய்ய முடிவெடுக்கும்போது அவரின் வாக்கியமாக "மரகதம் ஊர்ல அவுக ஆத்தாளோட இருந்திட்டு போகுது, அதுவும் இங்கின இருந்தாக்க நாகலிங்கம் பயலுக்கு தொழில்ல புத்தி போகாது". இவருக்கு பணமும் தொழிலும்தான் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே செல்லையாவிடம் "இது பொட்டச்சி தொழிலு. ஒனக்கு இது ஒத்து வராது" என சொல்லும்போது செல்லையாவுடன் நாமும் இவரை நம்மால் புரிந்துகொள்ள முடியாது என்றே மனம் சொல்கிறது.

காமாட்சி ஊரை சுற்றிப்பார்க்க வந்து போரின் காரணமாக அங்கே மாட்டிக்கொள்கிறாள். மகள் பக்கமும் நிற்கமுடியாமல் கணவரையும் எதிர்க்க முடியாமல் திணறும்போதும், மகளுக்காக கண்ணீர் விடும்போதும் செல்லையாவிடம் பாசம் காட்டும்போதும், மன்னிப்புக் கேட்கும்போதும் தாயின் மனதை மிகச்சிறப்பாக உணர்த்துகிறாள். தன மகன் உயிரோடு இருந்தால் அவனும் பட்டாளத்துக்குத்தான் போயிருப்பான் என கணவனிடம் கூறும்போதும், செல்லையா ஜப்பானியரை கொன்றது சரியே என வாதிடும்போதும் புதிய காமாட்சியாக வானாயீனா செட்டியாருக்கே தெரிகிறாள்.

இதில் மாணிக்கம் இரண்டு இராமாயண கதைகளை சொல்கிறான். ஒன்று கனகவல்லி ராமாயணம் மற்றொன்று மின்லிங் ராமாயணம். இரண்டிலும் ஜப்பானிய மேஜர் இச்சியாமா வருகிறான். போரின் பின்விளைவுகளில் ஒன்றான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதை மிகவும் சாதாரணமாக கதையின் ஓட்டத்தில் மாணிக்கம் சொல்கிறான். இராமாயண சீதைக்கும் இந்த சீதைகளுக்குமான ஒப்பீடு நம்மை கலங்கடிக்கிறது. பெண்தெய்வங்களை நாம் வணங்கத்தான் முடியுமே தவிர திருமணம் செய்துகொள்ள முடியாதென்பதை செல்லையாவிற்கு அறிவுறுத்தும் இடம், இலக்கியத்தின்மூலம் மாணிக்கம் எவ்வாறு வாழ்க்கையை, வாழ்க்கையின் தரிசனத்தை புரிந்துகொண்டிருக்கிறான் என்பதை தெளிவாக காட்டுகிறது.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு மரகதம் உண்டு. ஆனால் அவள் நேரில் வரும்போது கண்டுகொள்ளும் ஊழின் தருணம் வாய்ப்பதென்பது நம் எவரின் கையிலும் இல்லை. தன்னுடைய பெற்றோரை விடமுடியாமல், செல்லையாவை நினைத்து காதலில் உருகுவதும், பிரிவின்போது அவன் பெயரிட்ட கைக்குட்டையை பரிசாக கொடுப்பதும் பிறக்கும் பெண்ணிற்கு மரகதம் என்று பெயரிட்டு மடியில் அமர்த்தி கொஞ்ச சொல்வதும், எக்காலத்திலும் பெண்கள் காதலனை, மனதில் அமர்ந்தவனை மறக்கமாட்டார்கள் என்பதை தெளிவாக்குகிறது.

கதையின் நாயகனாகிய செல்லையாவிற்குத்தான் எவ்வளவு பிரச்சனைகள், தர்மசங்கடங்கள்!! பழைய வாழ்க்கைக்கு திரும்பமுயலும்போது, முதலாளியின் கோபம், அதனால் காதலியின் பிரிவு. போராட்டத்தின் தலைவர் மறைந்ததால் புதிய வழிகளனைத்தும் மூடிக்கொள்ள முதலாளியிடம் செல்ல தயக்கம். கர்னல் கரிமுடீனிடம் தளவாடங்களுக்காக பேரம் பேசும்போது அவன் காட்டும் நெஞ்சுரம் நம்மை மலைக்கவைக்கிறது. பிறகு சிம்பாங் திகா பாலத்தை கைப்பற்றும் தைரியம், போர்வெறி முதலியன நம்மை அப்படியே கதைக்குள் இழுத்துக்கொள்கின்றன. அவன் மரகதத்திடம் பேசும் பகுதியை எவ்வளவுமுறை படித்தேன் என்று எனக்கே  தெரியவில்லை. ஆனால் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் கண்கள் கலங்கின.

இவற்றினூடாகத்தான்,கதையின் ஆசிரியர் இந்திய தேசிய ராணுவத்தினை, அதன் பற்றாக்குறைகளை, சீன-ஜப்பானிய உறவை, தமிழர்களை, பலகோணங்களில் பலருடைய பார்வையில் வெளிப்படுத்தப்படுகிறார். நேதாஜியின் மறைவு பல குழப்பங்களை உண்டாக்கி இந்திய தேசிய ராணுவத்தையே கலைத்துவிடுகிறது. போர் முடிந்தபின், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் பலர் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைக்கின்றனர். ஒருபக்கம் பழிவாங்கும் ஆங்கிலேய பட்டாளம், , மறுபக்கம் உலக அளவில் துப்பாக்கியை தாழ்த்திவிட்டாலும் உரிய கட்டளைகள் வராமல் தடுமாறும் ஜப்பானிய படைகள்... இருவரிடமும் தப்பித்து "சட்டை மாற்றும்" இந்திய தேசிய ராணுவவீரர்கள், அவர்களில் பலரை ஏற்கும் தோட்டவேலையாட்கள் என பரவுகிறது.

இந்த கதையின் அடியில் ஓடும் மென்சோகம் அனைவரும் தமிழகம் திரும்ப எண்ணுவதே. இன்ஸ்பெக்டர் குப்புசாமியின் பாட்டியின் "ஆத்த கண்டியா, அழகர கண்டியா" என்னும் வசவின் மூலமாக அனைத்தையுமே உணர்த்துகிறார். வானாயீனா குடும்பம் தினமும் கப்பலுக்காக விசாரிப்பதும் காத்திருப்பவர்களின் எண்ண ஓட்டங்களும், மனதை பிசைந்து கலங்கடிக்கின்றன.

போராட்டம் நீர்த்துப்போனபின்னர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் பலரின் நிலைமையை சிறப்பாக உணர்த்துகிறது. ப.சிங்காரம் அவர்களின் வார்த்தைகள் மற்றொரு நாவலான புயலிலே ஒரு தோணியின் முன்னுரையில் உள்ளது. அதில் கூறுவதுபோல இந்த கதாபாத்திரங்கள் அவர் நேரில் பார்த்து வடித்தவை என உணரலாம். நெல்சன் ஆஸ்திரேலியா படிக்க செல்கிறான், மேஜர் சபுராவை சுடும் ராஜதுரை மதுவுக்கு அடிமையாகிறான், கே.கே.ரேசன் பாங்காக் நகரில் காலம்தள்ளுகிறான், இவர்களுடன் செல்லையா காதலை தொலைத்துவிட்டு நிற்கிறான்.

இறுதியாக நேதாஜியின்  அல்லது பகத் சிங்கின் தேசபக்தியினை கடுகளவுகூட விமர்சிக்கும் தகுதி எனக்கு கிடையாது. அவர்களைப்பற்றி குறைவான அல்லது தவறான மதிப்பீடுகளை கொண்டவனல்லை நான். ஆனால், அவர்களின் வழி இந்திய சுதந்திரத்திற்கானது அல்ல என்பது குறித்து எனக்கு வேறு கருத்து இல்லை. நேதாஜியோ பகத் சிங்கோ இந்தியாவின் சுதந்திரத்தை வாங்கியிருந்தால், பெரும்பாலும் ராணுவ ஆட்சியோ, சர்வாதிகார ஆட்சியோ மட்டுமே இந்தியாவில் இருந்திருக்கும். நேதாஜியின் வழியாக இந்தியா இங்கிலாந்துக்கு பதிலாக ஜப்பானுக்கு அடிமைசேவகம் புரிந்திருக்கும். ஆனால், இந்திய தேசிய ராணுவம் நேதாஜியின் மறைவுக்கு பின்னர் சிதறுவது போல நேதாஜி சுதந்திரம் வாங்கியிருந்தால் இந்திய தேசமே சிதறிப்போயிருக்கும். முதிரா இலட்சியவாதமே இவற்றில் தெள்ளென தெரிவது. ஆயுதம் மூலம் பெறும் எந்த உரிமையும் நிலைத்து நிற்க முடிவதில்லை.

காந்திய வழியாக பெற்ற சுதந்திரமே நமக்கு இப்போதுள்ள ஜனநாயக அரசாங்கத்தை அமைத்து, பல்வேறு உரிமைகளை அளித்து நாடு இப்போதுள்ள நிலையினை அடைய உதவியது.

இந்த வரலாற்று தரிசனமே எனக்கு இந்த புத்தகம் மூலமாக கிடைத்தது. 

புலிநகக் கொன்றை - வாசிப்பனுபவம்

சிறுவயதில் பி ஆர் சோப்ரா-வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் "நான் காலம் பேசுகிறேன்" என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்...