செவ்வாய், 15 அக்டோபர், 2019

குருதிப்புனல் - வாசிப்பனுபவம்

நான் கிராமத்திலேயே வளர்ந்ததாலும் தகப்பனார் அவருடைய வேலையின் பெரும்பகுதியை வருவாய்துறையின் ஆதிதிராவிடர் நலத்துறையில் செய்ததாலும் சாதிவெறி எவ்வாறு ஒரு சமூகத்தை பின்னோக்கி இழுத்துச்செல்கிறது என்பதை உணர்வுபூர்வமாக அறிய பல சந்தர்ப்பங்கள் வாய்த்தன. சிறுவனாக இருந்தபொழுதில் தினமும் பால்வண்டி வந்து பால் நிலையத்தில் கொட்டப்பட்ட பாலினை காலையிலும் மாலையிலும் தருமபுரிக்கு எடுத்துச்செல்லும். ஏதாவது சாதித்தகராறு என்றால் முதலில் தெரிவது இந்த பால்வண்டி வராததே. உடனே பால் வியாபாரிகள் சல்லிசான விலையில் பாலை கேட்பவர்களுக்கு விற்றுவிட்டு சென்றுவிடுவார்கள். எங்கள் வீட்டில் அன்று திரட்டுப்பால் கண்டிப்பாக உண்டு. அந்த திரட்டுப்பாலுக்கு பின்னால் உள்ள வியாபார வன்முறை அப்போது எனக்கு புரிந்ததில்லை. ஆனால் சாதீய வன்முறையின் தாக்கம் வெகுவாக புரிந்தது.

வன்முறை எத்தனை கொடூரமானது என்பதை குருதிப்புனல் மிகவும் விவரணையுடன் படம்பிடித்து காட்டுகிறது. நகரத்தில் படித்து வளர்ந்த ஒருவன் கிராமத்தில் வாழ வந்து அங்கு நடக்கும் சில நிகழ்வுகளால் வன்முறையை கையெடுக்கும் மாற்றமே குருதிப்புனல். ஆசிரியரான இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு புதிய அறிமுகம் எதுவும் தேவைப்படாத நிலையில், நேராக என்னுடைய புரிதல்களுக்கே சென்றுவிடுகிறேன்.

கீழ்வெண்மணியில் 44 தலித்துகள் உயிரோடு எரிக்கப்பட்ட உண்மை சம்பவத்தை சுற்றி கதைக்களம் உள்ளது.

கோபாலும் சிவாவும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். கோபால் நகர வாழ்க்கையின் அர்த்தமின்மையை உணர்ந்து கிராமத்திற்கு வந்துவிடுகிறான். அந்த கிராமம் கீழ்வெண்மணி போன்றே சாதிவெறியினால் காலத்தில் பின்னோக்கிச்சென்றுகொண்டிருக்கின்றது.  கோபாலின் அப்பா ஒரு நாயுடு அம்மா ஒரு பிராம்மண பெண்மணி. அவனைத்தேடி சிவா எனும் நண்பன் அதே கிராமத்திற்கு வருவதிலிருந்து கதை தொடங்குகிறது.

கோபால் தனியனாக இருப்பதால் வடிவேலு நடத்தும் டீக்கடையில் உண்டு ராமையாவின் வீட்டில் தங்கியிருக்கிறான். அதே ஊரில் வசிக்கும் நிலச்சுவான்தாரர் கண்ணையா நாயுடு. தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தக்கூடாது என கூட்டுசேரும் மிராசுதாரர்களுக்கும் நிலச்சுவான்தாரர்களுக்கும் defacto தலைவன். அரசியல் பலமும், பணபலமும், ஆள்பலமும் கொண்டவன். வடிவேலு கண்ணையா நாயுடுவின் வைப்பாட்டி மகன். அவன் டீக்கடை நடத்தும் இடத்தை கண்ணையா அபகரிக்க நினைக்கிறான். ராமைய்யா ஒரு கம்யூனிஸ்ட். கூலி அதிகம் கேட்கும் தொழிலாளர்களுக்கு defacto தலைவர். ராமைய்யா தான் நடத்தும் துவக்கப்பள்ளியை கோபாலிடம் ஒப்படைக்க முயல்கிறார். ஆனால் கோபால், கண்ணையா நடத்தவிடமாட்டான் என ஐயம் கொள்கிறான்.

கண்ணையாவிற்கு ஆண்மை குறைவு. அதனை மறைக்கவும், கெளரவத்தை தக்கவைத்துக்கொள்ளவும் பல வைப்பாட்டிகள் வைத்து ஈடுகட்டுகிறான். வடிவேலுவுக்காகவும் பள்ளிக்கூடத்திற்காகவும் கண்ணையாவை அவனது வீட்டில் சந்திக்கும் கோபால் அவரது ஆண்மைக்குறைவு பற்றி பேச கண்ணையா அவனை ஆள்வைத்து அடிக்கிறான். அதே சமயத்தில் வடிவேலுவும் பாப்பாத்தி என்னும் தலித் பெண்ணும் காணாமல் போகிறார்கள். அந்த தலித் பெண்மணிக்கும் கோபாலுக்கும் தொடர்பு இருப்பதாக கண்ணையா குற்றம் சாட்டுகிறான். இதைப்பற்றி உளவறிய
கோபால் கண்ணையாவின் வைப்பாட்டியான பங்கஜம் என்னும் பெண்வீட்டிற்கு செல்கிறான். பங்கஜத்திற்கு கோபால்மேல் ஏற்கனவே ஒரு கண். அந்தவீட்டில்தான் வடிவேலுவும் பாப்பாத்தியும் அடைக்கப்பட்டிருப்பதாக தெரிந்து நடக்கும் தகராறில் கண்ணையாவின் அடியாள் ஒருவன் சாக பழி ராமைய்யா மீது விழுந்து அவர் கைதாகிறார்.

தகராறு வலுக்க ஒரு தலித் நாயுடுவான கண்ணையாவை அறைந்துவிடுகிறான். பிறகு நாயுடு தன் ஆட்களோடும் காவல்துறையின் பாதுகாப்பிலும் பெண்களும் குழந்தைகளும் நிரம்பியிருக்கும் குடிசைக்கு தீ வைக்கிறான். இறுதியில் கோபால் வன்முறையே வழியென தீர்மானிக்கிறான் என்பதுடன் கதை முடிகிறது.

எனக்கு இந்த நாவலில் தரிசனம் என எதுவும் கிடைக்கவில்லை, ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எழுதிய புத்தகம் என்பதால் ஆவராணா போல தரவுகளின் தொகுப்பாக இல்லாமல் பின்வரும் வழிகளில் கதையை அலசலாம். கண்ணையா ஏன் கொலைவெறி கொண்டான் என்பதற்கு காரணங்கள் எதுவும் கூறவில்லை. அவற்றை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம். கூலிக்காரப்பயலுங்களுக்கு நம்மை எதிர்த்துப்பேச எவ்வளவு தைரியம் என்னும் கோபம், ஒரு கீழ்ஜாதிக்காரன் நம்மளை அறைந்துவிட்டானே என்ற வெறி, அனைத்துக்கும் மேலாக ஆண்மை பற்றி பேசியதாலும் தன்னுடைய வைப்பாட்டியை கவர்ந்ததாலும் வந்த வெறி.

அவன் கூலியாட்களை குழப்பவும், ஒரு "பறையன்" அடிக்கும்போதும் மட்டுமே ஜாதியை இழுக்கிறான். இதற்குமேல் புரட்சி தோற்றுப்போக முக்கியமான காரணம், கோபால் மற்றும் சிவாவின் முதிரா இலட்சியவாதம் மற்றும் அனுபவமின்மை. ராமைய்யா பலநாட்களாக செய்துவந்தவற்றை அனுபவமின்மை காரணமாக தொலைத்துவிடுகின்றனர். ஏதோ குறையுள்ள மனிதனை எல்லாரும் சீண்டினார்கள், அவனுடைய வைப்பாட்டியை ஒருவன் கவர்ந்தான், சீண்டப்பட்டவன் திருப்பியடித்தான் என்ற வகையில் கதை முடிவதை என்னால் ஏற்கமுடியவில்லை. ஆனால் கதை அவ்வாறுதான் முடிகிறது.

அதேசமயத்தில், லௌகீக வாழ்க்கையில், இலக்கிலிருந்து விலகி சிற்றின்பங்களுக்கும் பழிவாங்கும் உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுத்தால் எவ்வாறு பின்னால் தள்ளப்படுவோம் என்பதற்கு கோபால் ஒரு சிறந்த உதாரணம். பங்கஜம் மேல் உள்ள ஈர்ப்புனாலும், அவளை அடைவதன்மூலம் கண்ணையாவை பழிவாங்கலாம் என்னும் நினைப்பினாலும் கோபால் பங்கஜதுடன் படுக்கையை பகிர, ஊரார் முன்னிலையில் அவனுடைய நேர்மையை கண்ணையா மிகவும் சுலபமாக கேள்விக்குரியதாக்கிறான்.

இந்தக்கதை மூலமாகத்தான் எனக்கு கீழ்வெண்மணி சம்பவம் பற்றி தெரியவந்தது. இலக்கியத்தில் கீழ்வெண்மணி பற்றி எழுதிய நூல் என்றவகையில் இது மிகமுக்கியமான நூல்.

இந்த கதையை ஜெயமோகன் தன்னுடைய இரண்டாம் பட்டியலில் சேர்கிறார் - பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள்.

திரட்டுப்பால் மனதில் வரும்போதெல்லாம் அதற்குப்பின் நான் சிறுவயதில் அறிந்த சாதீய வன்முறையும் அடக்குமுறையும் மனதை உறுத்தும். திரட்டுப்பால் சாப்பிடுவது வெகுவாக குறைந்துவிட்டது, இப்புத்தகத்தை படித்தபின், முழுவதும் நிறுத்தலாமா என யோசிக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

புலிநகக் கொன்றை - வாசிப்பனுபவம்

சிறுவயதில் பி ஆர் சோப்ரா-வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் "நான் காலம் பேசுகிறேன்" என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்...