சனி, 20 ஏப்ரல், 2019

சிறுவயது விளையாட்டுக்கள்

பள்ளிப்பருவத்தில் எங்களுடைய விளையாட்டு என்பது ஒன்று சேர்ந்து விளையாடும் அனுபவமாவே இருந்தது. ஆண்-பெண் பேதமின்றி அனைவரும் தெருவிலேயே விளையாடுவோம். பெண்கள் ஒருபுறம் ஐந்தாங்கல், ஸ்கிப்பிங் என விளையாட, நாங்கள் மட்டைப்பந்து, கபடி, என விளையாடுவோம். சில சமயங்களில் பையன்களும் பெண்களும் சேர்ந்து கோ-கோ விளையாடுவோம். இவற்றையெல்லாம்விட குதூகலமான விளையாட்டுக்கள் இரண்டு உண்டு. அவை இரண்டும் பையன்களுக்கானவை என வரையறை செய்யப்பட்டிருந்தன.

ஒன்று ஒருவிதமான பந்து விளையாட்டு. பையன்கள் இரு அணிகளாக பிரிந்து நிற்க வேண்டும். ஏழு தட்டையான கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைக்கவேண்டும். ஒரு அணியின் "வீரன்" பந்தால் அந்த கற்களை சரிக்க அந்த அணி பையன்கள் கற்களை ஒன்றன் மீது ஒன்றாக ஏழு கற்களையும் அடுக்கவேண்டும். மற்ற அணியின் பையன்கள் அதை தடுக்கவேண்டும். எப்படியென்றால் அந்த பந்தால் கற்களை அடுக்கும் அணி பையன்கள் மீது பந்தை வீசி துரத்தவேண்டும். வேகமாக அடி வாங்கி வாங்கி, முதுகு முழுவதும் சிகப்பான அனுபவங்கள் பலருக்கு உண்டு. நானே ஒருமுறை என் முதுகை சிவக்கவைத்த ஒருவனை பழிவாங்க கையில் பந்துடன் ஊர் முழுவதும் துரத்தியிருக்கிறேன். விளையாட்டு முடிந்தபிறகு கோவில் குளத்தில் குளித்து வீடுதிரும்புவோம். குளிக்கும்போதே அடுத்தவன் முதுகை பழுக்கவைத்ததை பெருமையாக பேசி கோபதாபவெறுப்புகளை அங்கேயே விட்டுவிட்டு அடுத்தநாள் விளையாட்டை தொடங்குவோம்.

இரண்டாவது விளையாட்டு கண்ணாமூச்சி, அதுவும் இரவின் இருட்டில். ஊர் தேர்திருவிழா கோடை விடுமுறையின்போது வரும். சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து பலர் தங்களுடைய தாத்தா-பாட்டி வீட்டிற்கு வருவார்கள். அந்த நாட்களில் தினமும் கோவில் ஊர்வலமும், பிறகு பிரசாத விநியோகமும் இருக்கும். அனைத்து பையன்களும் இந்த சமயங்களில் வேட்டியிலேயே இருக்கவேண்டும். இரவு உணவுண்டபின் சுமார் ஒன்பது மணிக்கு விளையாட்டு தொடங்கும். தெருவிலுள்ள அனைத்து திண்ணைகளில் ஒளிந்துகொள்ளலாம். தேடுபவன் நூறுவரை எண்ணிவிட்டு வரும்போது அனைவரும் வேட்டியால் முகத்தை மூடிக்கொண்டு அவனை துரத்துவோம். அடையாளம் கண்டுபிடிக்காவிட்டால் மீண்டும் எண்ணவேண்டியதுதான் இது இரவு பன்னிரண்டு ஒருமணிவரை நீளும். ஒருநாள் இரவுமுழுதும் கண்டுபிடிக்க முடியாமல் மீண்டும் அடுத்தநாள் இரவும் அழுதுகொண்டே எண்ணதொடங்கும் பலநாட்களை நாங்கள் பார்த்துள்ளோம். கிராமமென்பதால் எங்களூரில் பழைய திரைப்படமே வெளியிடப்படும். விளையாடி முடித்தபின்னர் நகரத்து பையன்கள் கூறும் புதிய திரைப்பட கதைகளை கேட்டவாறு கோவிலிலேயே படுத்து உறங்குவோம்.

இந்தமாதிரி நட்பு என்பது எதையும் எதிர்பாராமல், தங்களை விளையாட்டிற்கே கொடுத்து அடுத்தவர்களை காப்பாற்றி விளையாடுபவை. அவற்றின் மூலம் எங்கள் சுயநலத்திலிருந்து வெளியேற எங்களில் பலரால் முடிந்தது. சிலசமயங்களில் பெரியவர்கள் யாரேனும் இருந்தால் மஹாபாரதமோ ராமாயணமோ கூறுவார்கள். இவற்றின் மூலம் முன்னோர் பட்ட கஷ்டங்களையும் துயரங்களையும், எங்கள் சொகுசான வாழ்க்கை குறித்தும் ஒப்பிட்டு அறிந்துகொள்ள முடிந்தது.

நேற்று என் மகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. வழக்கம்போல விடுமுறையை பாதி அம்மா பக்க பாட்டி வீட்டிலும் மீதியை அப்பா பக்க பாட்டி வீட்டிலும் கழிக்க கிளம்பினாள். ஆனால் அங்கே அவளுடன் விளையாட ஒருவர் அல்லது இருவர் மட்டுமே உள்ளனர். எங்கள் ஊரில் பக்கத்துவீட்டு சிறுமி, என் மனைவி வீட்டில் என் மனைவியின் அண்ணன் குழந்தைகள் இரண்டுபேர். அங்கேயும் ஓடியாடி விளையாடும் தருணம் வாய்ப்பதில்லை. நினைத்த வீட்டில் சாப்பிட்டு, கிடைக்கும் இடத்தில் நண்பர்களுடன் தூங்கும் இன்பம் முற்றிலும் வேறானது. சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் சில குழந்தைகள் உள்ளன. ஆனால் ஓடியாடி, இருப்பதை பகிர்ந்து விளையாடும் விளையாட்டுக்கள் முற்றிலும் இல்லை. இதனால் சுயநலமும் அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுக்காத தன்மையும் வளர்ந்து முற்றிலும் வேறு குழந்தைகளாக உருவாகிறார்கள்.

இவற்றிற்கு நகரத்தில் வாழும் பெரும்பாலான படித்த பெற்றோர்களின் குறுகிய மனஓட்டமே காரணம். குழந்தைகளை எந்த சமூக பொறுப்பும் இல்லாமல், எதைப்பற்றியும் சொல்லிக்கொடுக்காமல் வளர்க்கின்றனர். என் மகள் பள்ளிக்கூடத்தில் நண்பர்களிடம் பேசியதாக கூறும் விஷயங்களே இதற்கு சான்று. ஏதோ சிறிதளவில் வாசிக்கும் பெற்றோர்களால் பரந்த மனப்பான்மையை பெறும் குழந்தைகள் மற்ற குழந்தைகளால் ஏமாளி பட்டம் பெற்று வீட்டில் அழுவதை நான் பார்த்திருக்கிறேன். பள்ளிகளிலும் அறம் பற்றிய, தார்மீகம் பற்றிய வகுப்புகள் இல்லாததால் சரியான வழிகாட்டுதலின்றி குழந்தைகள் தவிக்கின்றன.

இவற்றிலிருந்து குழந்தைகளை, அந்த பிஞ்சு மனங்களை சரியான வாழ்க்கைமுறை நோக்கி செலுத்துவது பெற்றோராகிய நமக்கும், பள்ளிகளுக்கும், இந்த சமூகத்திற்கும் உள்ள முக்கியமான கடமையாகும். இல்லாவிட்டால் மிக மோசமான சுயநலமிக்க ஒரு சமூகத்தையே நம்முடைய குழந்தைகளுக்காக நாம் விட்டுச்செல்கிறோம்.

புதன், 17 ஏப்ரல், 2019

கணநேர எரிச்சல்

எங்கள் கிராமத்தில் நான் மிதிவண்டி கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போது ஒன்பது வயது. அப்போதெல்லாம் எல்லார் வீட்டிலும் மிதிவண்டி இருக்காது. அதனால் வாடகை வண்டிதான். பெரிய வண்டி என்றால் ஒரு மணி நேரத்திற்கு 30 பைசா சிறிய வண்டி என்றால் 50 பைசா. ஊரில் இரண்டே கடைகள்தான் வாடகைக்கு மிதிவண்டி கொடுப்பார்கள். இரண்டு கடைகளிலும் ஒவ்வொரு சிறிய வண்டிதான் வைத்திருந்தார்கள். கற்றுக்கொள்பவர்கள் எப்போதும் சிறிய வண்டியை கடை திறந்தவுடன் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். இந்த சந்தர்ப்பங்களில் இரண்டு வழிகளை பின்பற்றலாம்.ஒன்று, வாடகைக்கு எடுத்தவனிடம் கெஞ்சி கூத்தாடி பேரம் பேசி, ஊரை ஒரு சுற்று அல்லது இரண்டு சுற்று வரலாம், அந்த பையனின் பெற்றோர் பார்க்காமல். இல்லையேல் கடை முன் அமர்ந்து காத்திருக்கலாம். நான் இரண்டாவது வழியை தேர்ந்தேடுத்ததே அதிகம். இதற்கு அதீத பொறுமை தேவை. நாம் ஒரு மணிநேரம் காத்திருந்து, வேறு யாராவது கடைக்காரனின் உறவினர் எடுத்து சென்றால் ஒன்றும் செய்யமுடியாது. மறுபடியும் ஒருமணிநேரம் காத்திருக்கவேண்டியதுதான். இதையெல்லாம் மீறி பொறுமையுடன், அந்த கடையின் முன்னரே விளையாடி மூன்று மணிநேரமெல்லாம் காத்திருந்து வண்டி வாடகைக்கு எடுத்திருக்கிறேன்.

இதை இப்போது ஏன் சொல்கிறேன் என்றால், இரண்டு நாட்களுக்கு முன்பு அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்தேன். அகலம் குறைவான தெரு, புதியதாக கோவில் ஒன்று வந்திருப்பதால் இரண்டு பக்கமும் வண்டிகளை நிறுத்தியிருந்தனர். வண்டி மெதுவாக செல்ல பின்னல் ஒருவர் தொடர்ந்து ஒலிப்பானை அழுத்திக்கொண்டேவந்தார். திடீரென ஏதோ தோன்ற நான் வண்டியை நிறுத்திவிட்டு அவரிடம் எரிச்சலுடன் முன்னால் வழி இல்லை என கூறி சத்தம்போட, அவர் கூப்பாடுபோட, ஐந்து நிமிடம் அந்த இடமே மாறிப்போனது. இந்த எரிச்சல் நாள் முழுவதும் கூடவே இருந்து பாடுபடுத்திய பின்னர்தான் சென்றது.

பிறகு இரவு யோசித்தபோது நான் என் வேலையை பார்த்துக்கொண்டு சென்றிருந்தேனென்றல் இவ்வளவு பிரசனையே இல்லை, எரிச்சல் இல்லை. ஒரு சாதாரண மிதிவண்டிக்காக மூன்றுமணிநேரம் காத்திருந்த என் பொறுமை எங்கே, ஏன் இவ்வாறு அடிக்கடி எரிச்சல் வருகிறது. நான் வண்டியிலிருந்து தலையை நீட்டி "இரண்டு நிமிடம்" என்று சொல்லியிருக்கலாம், ஒன்றுமே சொல்லாமல்கூட சென்றிருக்கலாம். அந்த கணநேர எதிர்வினை என்னுடைய முழுநாளையும் வீணாக்கியது.

அந்த மனிதரும் முழுநாளும் என்போலவே இருந்திருப்பார் என்றால் கணநேர எதிர்வினையின் எதிர்மறை பாதிப்பு, குற்றவுணர்ச்சி என என் மனம் சோர்ந்துபோனது. இனிமேல் யாரிடமும் அனாவசியமாக சத்தம்போட்டு பேசுவதில்லை என நினைத்திருக்கிறேன். இதில் முக்கியமென நான் நினைப்பது எதுவென்றால், அந்த கணநேர எரிச்சலை தாண்டினால் போதும், அதற்கே பொறுமையின் அவசியம் அதிகம்.மெதுவாக என்னுடைய பொறுமையை மீட்டெடுக்கவேண்டும்.

திங்கள், 15 ஏப்ரல், 2019

அறம் வரிசை கதைகள் - வாசிப்பு, மீள்வாசிப்பு

பள்ளி பருவத்தில் என்னுடைய வாசிப்பு தொடங்கிய காலத்தில் ராஜேஷ்குமார்களும் பட்டுக்கோட்டை பிரபாகர்களும் அவர்களுடைய கதைகள் மூலம் என்னை பல நாட்கள் என் பெற்றோர்களிடம் திட்டும் அடியும் வாங்கி தந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் நான் உருப்படியாக பலமுறை வாசித்து மீள்வாசிப்பு செய்து கற்றுக்கொண்டது ராஜாஜியின் வியாசர் விருந்து.

கல்லூரியிலும் சரியான தேடுதலும் வழிகாட்டுதலும் இல்லாததால் சில வார இதழ்களும் துப்பறியும் கதைகளும் படித்து நேரத்தை வீணடித்தேன். பிறகு என் நண்பன் ராமசாமி மூலம் கல்கியும் சாண்டில்யனும் அறிமுகம் ஆயினர். பிறகு சுஜாதா. அப்போது எல்லாரையும் போல இலக்கியம் என்பது இவையே என கிடந்தேன். இவற்றினால் நடந்த ஒரே நன்மை, என்னுடைய வாசிப்பு வேகத்தை கூட்டியது மட்டுமே.

வேலைக்கு புனே சென்று பிறகு வாசிப்பு அறவே நின்றுபோனது. பிறகு மீண்டும் வாசிப்பை தொடங்க நான்கு  ஆண்டுகள் ஆனது. தொடங்கியபோது முற்றிலும் புதிய இடத்தில தொடங்கினேன். தொடங்கிய இடம் ஜெவின் இணையத்தளம்.

சில கதைகள் மற்றும் பதிவுகள் படித்தபின் தொடங்கியதுதான் அறம் சிறுகதைகள். முதல்முறை படிக்க நான் எடுத்துக்கொண்டது 180 நிமிடங்கள். ஆனால் அவை ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் நீங்கவில்லை.

செட்டியாரின் மனைவியும், கெத்தேல் சாஹிப்பும், வணங்கான் நாடாரும் என்னை முழுவதுமாக உள்ளிழுத்துக்கொண்டனர். கீதையின் சாராம்சமான கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதை யானை டாக்டர் தவிர யாரும் இவ்வளவு எளிதாக கூற முடியாது. இந்நாள்வரை மனம் நெகிழாமல், கண் கலங்காமல் நூறு நாற்காலிகள் கதையை நான் படித்தது கிடையாது.

எந்த ஒரு அறத்தையும் உணர்ச்சிகள் வழியாக கூறினால் அதன் நேர்மறை பாதிப்பு பல நாட்கள் இருக்கும். பாதிப்பு இருக்கும்வரை நம் மனது அதை பற்றி யோசித்து யோசித்து கருத்தை தொகுத்துக்கொள்ளும்.
எப்போதெல்லாம் மனோதைரியம் குன்றி, தன்னம்பிக்கையற்று இருந்திருக்கிறேனோ அப்போதெல்லாம் நான் வணங்கானையும், அதீத வெறுப்பு பெருகும் காலங்களில் நூறு நாற்காலிகளையும் படிக்க வைத்து மீள்வாசிப்பு செய்யவைத்தது. அலுவலகத்தில் ஏதோ ஒரு பெரிய காரியம் செய்து பிறர் அதை கவனிக்காமல் போனால் யானை டாக்டர் மனதில் வராமல் போனதில்லை.

இப்போது அதே கதைகளை என் எட்டு வயது  மகளுக்கு சொல்லும்போது அவைகளே முற்றிலும் வேறொரு தரிசனத்தை தந்தன. குழந்தையின் பார்வையில் அறம் என்பது சரி அல்லது தவறு என்னும் இருமைக்குள் அடங்கிவிடும். அதை மீறி பரந்த விசாலமான பார்வைக்கு அறம் சிறுகதைகள் மிகவும் தகுந்தவை. முதல்முறை செட்டியாரின் மனைவி தார்ச்சாலையில் அமர்ந்து அவளை தூக்கியபோது சேலையுடன் தோலும் கிழிந்தது என சொல்ல என்னுடைய மகள் கண் கலங்கி, அடுத்தவர்களை எப்போதும் நான் ஏமாற்றமாட்டேன் என சொன்னது என் தரிசனங்களுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

ஜெவின் கதைகளுள் அறம் சிறுகதை தொகுப்பு மிகவும் முக்கியமான இடத்தை பிடித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

திங்கள், 1 ஏப்ரல், 2019

ஈரோடு விவாத பட்டறை

கற்றலின் இனிமை தகுதியானவர்களிடம் கற்பது...

சிலமுறை சென்னை வெண்முரசு விவாதங்களில் கலந்துகொண்டிருந்தாலும் ஒரே நாளில் தொடர்ந்து  நான்கு அமர்வுகளில் கலந்துகொள்வது இதுவே எனக்கு முதல்முறை. தீவிரம், விவாதங்களில் நகைச்சுவை, சக வாசகர்கள் என அனைத்துமே கடந்த இரண்டு நாட்களை மேலும் இனிமை கொண்டதாக ஆக்கிவிட்டன.

சனிக்கிழமை அதிகாலை ரயில்நிலையத்தில் மலைச்சாமியையும் ராகேஷையும் சந்தித்ததில் தொடங்கியது என் முதல் இலக்கிய சந்திப்பு. எதிரில் வந்த ஆட்டோவில் தத்வமஸி என எழுதியிருக்க அதற்கு கீழே ஆட்டோ யூனியன் பெயரை பார்த்தவுடன் கண்டிப்பாக ஆட்டோ ஓட்டுநர் நல்ல வாசகராக இருப்பார் என உரையாடல் தொடங்கியது. அது, பிற எழுத்தாளர்களிடம் சென்றுகொண்டிருக்க ராஜ்மஹால் வந்ததும் அப்படியே நின்றது. காரணம், முன்கதவு திறந்திருக்கிறதா இல்லையா என்ற அடுத்த விவாதம் தொடங்கியதுதான்.

ராஜகோபாலன் முதல் அமர்வின்போது தம்முடைய உரையை மனம் எப்படி சிந்திக்கிறது, மொழியின் பயன்பாடுகள், "பாதிப்பு" என்ற வார்த்தை எப்படி பாதிப்படைகிறது என சுவாரசியமாக நடத்திச்சென்றார். விவாதத்தின் குறிக்கோள் அறிதலும் பகிர்தலுமே அன்றி வேறில்லை என அவர் சொன்னதை இந்த அமர்வின் ஆப்தவாக்கியமாக உணர்ந்தேன்.

செந்தில் கேள்விகளின் வகைகள், கேள்வி ஏன் எழுப்புகிறோம், என இரண்டாம் அமர்வை நன்றாக தொகுத்து வழங்கினார். இந்த அமர்வில் தெரிந்த விஷயங்களை தேவையான அளவே சொல்லுங்கள் என்பது என் அடுத்த ஆப்தவாக்கியமாக அமைந்தது.

ஜெயமோகன் அவர்களின் உரை மதியத்தில் ஆரம்பித்தது. எடுத்தவுடன் மூன்று சொற்களை விளக்கிய பின் உடனடி தேர்வு என சூடுபிடித்தது. பிறகு விவாதம், விவாதகருத்து, சுபக்ஷம், பரபக்ஷம் என கூரிய கலைச்சொற்களால் ஜெ வகுப்பை முன்னெடுத்து சென்றார். சற்றே கண் சொருக ஆரம்பித்ததும் அடுத்த கேள்வி-பதில் என அனைவரையும் உடனே உச்சகட்ட விழிப்புநிலைக்கு செல்லவைத்தார். விவாதத்தில் வாதம் (argument) செய்ய தொடங்கினால் நாம் எதிரியாகவே மாறிவிடுவோம் என்பது நான் கண்ட மூன்றாவது ஆப்தவாக்கியம்.

நான்காவது அமர்வாக இரு தலைப்புகளில் விவாதம் செய்யவைத்து தவறுகளை உடனடியாக சொல்லி புரிய வைத்தது முதல் மூன்று அமர்வுகளில் கற்றவற்றை தொகுக்க வைத்தது. என்னால் இரண்டுமுறை மட்டுமே பேசமுடிந்தது. அப்போது கூட ஏதாவது சொல்லி ஜெவிடம் திட்டு வாங்கக்கூடாது என்ற பதட்டத்தை உள்ளடக்கியே பேசினேன். கடைசியில் ராஜகோபாலன் என்னுடைய பெயரை சொல்லி இவர் பதட்டப்படாமல் சொல்லவேண்டியதை சொன்னார் என்னும்போது "என்னுடைய கஷ்டம் உமக்கு எங்கே ஐயா தெரிய போகிறது" என மனதில் தோன்றிய எண்ணத்தை தடுக்க முடியவில்லை.

மறுநாள் காலையில் ஐந்தாவது அமர்வில், பிழையான தருக்கம் என்பது என்ன என தொடங்கி, மேலை தத்துவங்களில் எவற்றையெல்லாம் பிழை என வகைப்படுத்துவர் என்பவற்றை கூறி உரையை கொண்டு சென்று, மறுபடியும் தேர்வு வைத்து சரியான பதில்களை கூறியவர்களுக்கு பரிசு கொடுத்தார் ஜெ .

கடைசி அமர்வில், இந்திய ஞானமரபின் தரிசனங்களையும் அவற்றின் மூல ஆசிரியர்களை பற்றியும் அறிமுகம் தந்து, அவற்றில் ஒன்றான நியாய தரிசனத்திற்குள் இட்டுச்சென்றார் ஜெ. நியாய தருக்கம் என்றால் என்ன, அவற்றின் பகுதிகள், ஷோடச ஸ்தானம் என கடைசி அமர்வு நிகழ்ந்தது. இந்த முறை தேர்வில், என்னுடைய அனைத்து பதில்களும் சரியாக இருக்க ஜெ புத்தக கொடுப்பார் என எதிர்பார்த்து நின்றபோது, சரியான பதில்களை பலர் எழுதியிருந்ததால் அவர் மனதில் மட்டுமே இடம் கொடுப்பேன் என கூறி எல்லாரையும் சிரிக்கவைத்தார். எந்த ஒரு தத்துவத்தையும் ஒரு படமாக, சித்திரமாக நினைவில் வைத்துக்கொள்ளுதல் அவற்றை மறக்க முடியாததாக ஆக்கும் என ஜெ கூறியது இந்த அமர்வு மற்றும் மொத்த இரண்டு நாட்களின் ஆப்தவாக்கியமாக மனதில் நின்றது.

ஞாயிறு காலை இளையராஜாவுடனான ஜெவின் விவாதம் மற்றும் அமர்வுகள் முடிந்த பிறகு அனைவருடன் ஜெ பேசியது முதலியவற்றில் முழுமையாக பங்கேற்காததால் அவைற்றை என்னால் தொகுத்துக்கொள்ள முடியவில்லை.
கடைசியில், என் மகளுக்காக வாங்கிய வெள்ளி நிலம் புத்தகத்தில் கையெழுத்து வாங்கி வணங்கி ஜெவிடம் விடை பெற்றேன்.

செவிக்கு உணவில்லாதபோது வயிற்றுக்கு "சிறிது" ஈயப்படும் என்ற கருத்தை திருக்குறளோடு அமைப்பாளர்கள் நிறுத்திவிட்டதால், நல்ல சுவையான உணவை உண்ணும்போது கிடைத்த அனுபவமும் இனிமையாக அமைந்தது. உணவின் சுவை ஜாஜா "காலையில்  பொங்கலை போடாதீர்கள் என்று சொன்னால் கேட்கமாட்டேன் என்கிறார்கள்" என்று கூறியதில் பிரத்யக்ஷமாக தெரிந்தது.

மீண்டும் மலைச்சாமி மற்றும் ராகேஷுடன் பேருந்து பிடித்து ஜெவின் அறம் பற்றி பேசி, சென்னைக்கு செல்லும் பேருந்தை விட இருந்தேன். நல்லவேளையாக ராகேஷ் நினைவுலகிற்கு வந்து கிளம்பச்சொன்னார்.
இந்த இரண்டு நாட்களின் இனிமைகளை அசைபோட்டவாறு சென்னை வந்துசேர்ந்தேன்.

முதல் பதிவு

நான் எப்போதும் சிந்திப்பதை எழுதும்போது மேலும் கூரிய சொற்களால் தொகுத்துக்கொள்கிறேன்... அந்த தொகுத்தல் வழியாக பிறரிடம் விவாதிக்க முடியும் என தோன்றியது...

கற்றலும் பகிர்தலுமே விவாதத்தின் ஒரே குறிக்கோள் என உணர்ந்தவுடன் அதே உணர்வெழுச்சியுடன் தொடங்கியதே இந்த வலைப்பூக்கள்...

புலிநகக் கொன்றை - வாசிப்பனுபவம்

சிறுவயதில் பி ஆர் சோப்ரா-வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் "நான் காலம் பேசுகிறேன்" என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்...