வியாழன், 26 டிசம்பர், 2019

உப்புவேலி - வாசிப்பு அனுபவம்

நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது பள்ளியில் காந்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு காந்தியின் வாழ்க்கை பற்றி ஒரு புத்தகத்தை கொடுத்தார்கள். அதை படித்து அதனுடன் வந்த கேள்விகளுக்கு பதில் எழுதி அனுப்பினால் சான்றிதழும் காந்தியின் படத்துடன் உள்ள அஞ்சலட்டையும் தந்தார்கள். அந்த வயதில் என்னை கவர்ந்தது அவருடைய சத்தியம் பற்றிய குறிப்பு. சற்றே வளர்ந்தபோது அஹிம்சை, புலால் உண்ணாமை முதலியன. ஆனால், கல்லூரியின்போது அவரை முழுவதுமாக பிடிக்காமல் போனது. அதுவும் இந்த கிழம் பகத் சிங்கும் நேதாஜியும் சுதந்திரத்திற்கு போராடும்போது கடற்கரையில் போய் உப்பு காய்ச்சுகிறது, எல்லாம் நாட்டின் தலையெழுத்து என்னும் எண்ணம்.

பிறகு, மெல்ல மெல்ல முதிர, இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது ஒருவர் உப்பினை காய்ச்சினால், ஏதோ இருக்கும், அதுவும் நான் மிகவும் விரும்பிய வியாசர் விருந்து புத்தகத்தை எழுதிய ராஜாஜியும், என் ஆதர்சமான காமராஜரும் வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சியிருக்கிறார்கள். ஏதோ இருக்கிறது என தேடும்போது, வழமைகளில் ஒன்றான ஜெயமோகன் அவர்களின் தளத்தில் தேடினேன். அப்போது கிடைத்ததுதான் உப்புவேலி என்னும் புத்தகம்.

புத்தகத்தின் ஆசிரியர் ராய் மாக்ஸம், தேயிலை தோட்டாக்காரர், கலைப்பொருள் கண்காட்சி வைத்திருந்தவர், லண்டன் நூலகத்தில் ஆவணகாப்பாளராக பணிபுரிந்திருக்கிறார். தமிழில் சிறில் அலெக்ஸ் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

தெருவோரம் இருக்கும் ஒரு சிறிய கடையில் இருபத்தைந்து பவுண்டுகளுக்கு வாங்கிய "ஒரு இந்திய அதிகாரியின் புலம்பல்களை நியாபகங்களும்" என்ற புத்தகத்தில் இருந்த அடிக்குறிப்பை வைத்து ஒரு மாபெரும் வேலியை தேடத்தொடங்குகிறார். முதலில் புத்தகங்களிலும் ஆவணங்களிலும், வரைபடங்களிலும்... அதற்காக அவர் கடும் உழைப்பினை அளித்துள்ளார், நம் நாட்டின் வரலாற்றாளர்கள் பலரும் (பலரும் என்ன, அனைவரும்) தவறவிட்ட ஒன்றினைப்பற்றி..

ராபர்ட் கிளைவ் அடித்த கொள்ளை, அவர் இங்கிலாந்து பாராளுமன்றத்தின் "பெரியவர்களை" லஞ்சம் மூலம் தன்பக்கம் வைத்துக்கொள்வது, கம்பெனி முகலாய மன்னரை பெயரளவில் வைத்து பொம்மை ஆட்சி நடத்தியது என வரலாற்று நிகழ்ச்சிகளுடன் புத்தகம் துவங்குகிறது. தனக்கும் தன நண்பர்களுக்குமான 'பிரத்யேகமான கம்பெனி'யை நிறுவி கொள்ளையை மேலும் வலுப்படுத்துகிறார். இங்கிலாந்தில் அவரது சொத்துமதிப்பு கடும் விமர்சனத்திற்குள்ளாகிறது. வயிற்றுவலியால் அவதிப்பட்டு 49வது வயதில் தற்கொலை என முடிகிறது அவரது வாழ்க்கை. திரும்பிப்பார்த்தால் 32வது வயதில் பெரும் பணக்காரரான ஒருவர் பதினேழு ஆண்டுகளில் இறந்துவிடுகிறார்.

இன்றும் ஆங்கிலேயர்களால் 'இந்தியாவின் கிளைவ்' (Clive of India) என அழைக்கப்படும் ஒருவர் தனிநபராக சேர்த்த செல்வமே இவ்வளவு என்றால், மொத்த கம்பெனி, இங்கிலாந்து அரசு, நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. மற்றொரு உதாரணமாக கிளைவின் சகஊழியர் வருடத்திற்கு நான்கு லட்ச ருபாய் வீதம் உப்பு வரியையும் சேர்த்து அறுவது லட்சரூபாயை தன நாட்டிற்கு கொண்டுசெல்கிறார். இங்கிலாந்தின் தனிநபர்களும், கம்பெனியும் இங்கிருந்து கொண்டுசென்ற பணத்தை இங்கிலாந்தில் செலவு செய்கின்றனர், இங்கே ஏற்பட்டிருக்கவேண்டிய வேலைவாய்ப்புகள் வெளிநாட்டில் உருவாயின.

உப்பின் வரி எவ்வாறெல்லாம் விதிக்கலாம், ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தின் அளவு, கால்நடைகளுக்கு உப்பின் அவசியம், அந்த காலகட்டத்தில் ஏழை இந்திய குடும்பத்தின் சராசரி வருமானம், என பல விவாதங்கள் கம்பெனிக்குள் நடக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான தங்கள் ஒரு குடும்பத்தின் உப்புக்கான செலவு அக்குடும்பத்தின் இரண்டுமாத சம்பளத்திற்கு சமானம்  என்பதே.

கம்பெனியின் வருமானத்தை பெருமளவு பாதித்த எல்லைக்கு அப்பாலிருந்து கொண்டுவரப்பட்ட உப்பை கட்டுக்குள் கொண்டுவரவே இந்த உப்புவேலியினை அமைக்க முடிவாகிறது.

கஸ்டம்ஸ் என்னும் வார்த்தையின் கஷ்டம், பல்வேறு வார்த்தைகளின் கலப்பில் புதர்வேலி பற்றி தேடுதல் என ஆராய்ச்சியை ராய் தொடர்கிறார். சில நண்பர்களின் உதவி மற்றும் பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி Royal Geographical Soceity-யில் அவருக்கு வரைபடம் கிடைக்கிறது.

ஆங்கிலேயரின் வார்த்தைகளிலேயே அந்த புதர்வேலி எவ்வளவு பெரிய அபத்தம் என கூறுகிறார். சுங்கத்துறையில் வேலைசெய்த உள்ளூர் அதிகாரிகளுக்கு சம்பளம் எதுவும் தராததால் வாழ்வாதாரத்திற்கு, அரசிடம் கட்டுப்பாடில்லாத வழிகளுக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். மிரட்டல், சண்டை, குறைந்த காலத்தில் அதிகமாக பணம் சுருட்டுதல் என பல சீர்கேடான வழிகளுக்கு தள்ளப்படுகிறார்கள். இளநிலை சுங்க அதிகாரிகள் செய்த அட்டூழியங்களை பலநிலைகளில் விளக்குகிறார், ஆனால் ஒருமுறை கூட உப்போ சர்க்கரையோ பிடிபடுவதில்லை எனவும் ஒரு அலுவலர் குறிப்பிடுகிறார்.

வாரிசில்லா கொள்கையினை (Doctrine of Lapse) வைத்து பல சிற்றரசுகளை பறித்துக்கொள்வது போன்ற கம்பெனியின் புதிய சட்டங்களையும், சுங்ககாவலர் ரோந்து செய்யும்போது தன்னுடைய காலடி தவிர மற்ற காலடிகளுக்கு பொறுப்பாக வேண்டும் என்பன போன்ற கடுமையான நடவடிக்கைகளும், 1770ம் ஆண்டின் பஞ்சமும், கம்பெனியின் கடுமையான நிலவரிவசூலினால் உழவு செய்தவர்கள் கடத்தல்காரர்கள் ஆனதும் மனதை உலுக்கிவிடுகின்றன.

பிறகு அவருக்கு உதவும் தோழி, தோழியின் மருமகன் சந்தோஷ் அவர்களின் உணவு, குடும்பம் என ஒருபக்கமும், தேடுதல் மறுபக்கமும் என நூல் செல்கிறது. கடைசியில் நகைமுரணாக பர்மத்லைனை காணப்போகும்முன் பிரித்தானியா பிஸ்கெட்டுகளை சாப்பிடுகிறார். கடைசியில் வளர்ச்சிக்காகவும் புதிய சாலைகளுக்காகவும் அழிக்கப்பட்டு மீதமிருக்கும் மேடான இடத்தினை ஒருவர் உப்புவேலியின் மிச்சம் என அவருக்கு காட்டுகிறார்.

வேலிக்காக பயன்பட்ட மரங்கள், அவற்றின் குணங்கள், இந்தியாவில் உப்பினை பயன்படுத்தும் அளவு, உப்புக்குறைபாட்டினால் வரும் உடல்நலக்கேடுகள், பல்வேறு ஆங்கிலேய அதிகாரிகளின் மனநிலை, அவர்கள் வேலைசெய்தவிதம், குற்றபரம்பரைகளின் பின்னணி, என பல தகவல்களை கொண்டுருக்கும் அற்புதமான புத்தகம்.

இந்த புத்தகத்திற்காக ராய் மாக்ஸம் அளித்துள்ள உழைப்பு அளவிடமுடியாதது. ஆனால் கடைசியில், உப்புவேலியின் மிச்சங்களை கண்டபிறகு, அவருக்கு மகிழ்ச்சிக்கு பதிலாக வருத்தமும் சோகமுமே அவரின் மனதை ஆக்கிரமிக்கின்றன.

புத்தகத்தை படித்து முடித்ததும் என் மனது வெறுமையாக இருந்தது. ஒரு சாதாரண உப்பு, சோடியம் குளோரைடு என பள்ளிகளில் நாம் படித்து, அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வது, இந்திய வரலாற்றில் எவ்வளவு முக்கியமான கொள்ளைகளில் இடம்பெற்றிருக்கிறது எனவும், அதே உப்பினால் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்னும் அரையாடை கிழவர் நாட்டு மக்களின் உள்ளத்தையும், வாழ்க்கையையும் எவ்வாறு தொட்டார் எனவும் அறிந்துகொள்ள முடிந்தது.

உப்புவேலி வாங்க

உப்புவேலி ஆங்கில மூலம் - The Great Hedge of India வாங்க

செவ்வாய், 15 அக்டோபர், 2019

குருதிப்புனல் - வாசிப்பனுபவம்

நான் கிராமத்திலேயே வளர்ந்ததாலும் தகப்பனார் அவருடைய வேலையின் பெரும்பகுதியை வருவாய்துறையின் ஆதிதிராவிடர் நலத்துறையில் செய்ததாலும் சாதிவெறி எவ்வாறு ஒரு சமூகத்தை பின்னோக்கி இழுத்துச்செல்கிறது என்பதை உணர்வுபூர்வமாக அறிய பல சந்தர்ப்பங்கள் வாய்த்தன. சிறுவனாக இருந்தபொழுதில் தினமும் பால்வண்டி வந்து பால் நிலையத்தில் கொட்டப்பட்ட பாலினை காலையிலும் மாலையிலும் தருமபுரிக்கு எடுத்துச்செல்லும். ஏதாவது சாதித்தகராறு என்றால் முதலில் தெரிவது இந்த பால்வண்டி வராததே. உடனே பால் வியாபாரிகள் சல்லிசான விலையில் பாலை கேட்பவர்களுக்கு விற்றுவிட்டு சென்றுவிடுவார்கள். எங்கள் வீட்டில் அன்று திரட்டுப்பால் கண்டிப்பாக உண்டு. அந்த திரட்டுப்பாலுக்கு பின்னால் உள்ள வியாபார வன்முறை அப்போது எனக்கு புரிந்ததில்லை. ஆனால் சாதீய வன்முறையின் தாக்கம் வெகுவாக புரிந்தது.

வன்முறை எத்தனை கொடூரமானது என்பதை குருதிப்புனல் மிகவும் விவரணையுடன் படம்பிடித்து காட்டுகிறது. நகரத்தில் படித்து வளர்ந்த ஒருவன் கிராமத்தில் வாழ வந்து அங்கு நடக்கும் சில நிகழ்வுகளால் வன்முறையை கையெடுக்கும் மாற்றமே குருதிப்புனல். ஆசிரியரான இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு புதிய அறிமுகம் எதுவும் தேவைப்படாத நிலையில், நேராக என்னுடைய புரிதல்களுக்கே சென்றுவிடுகிறேன்.

கீழ்வெண்மணியில் 44 தலித்துகள் உயிரோடு எரிக்கப்பட்ட உண்மை சம்பவத்தை சுற்றி கதைக்களம் உள்ளது.

கோபாலும் சிவாவும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். கோபால் நகர வாழ்க்கையின் அர்த்தமின்மையை உணர்ந்து கிராமத்திற்கு வந்துவிடுகிறான். அந்த கிராமம் கீழ்வெண்மணி போன்றே சாதிவெறியினால் காலத்தில் பின்னோக்கிச்சென்றுகொண்டிருக்கின்றது.  கோபாலின் அப்பா ஒரு நாயுடு அம்மா ஒரு பிராம்மண பெண்மணி. அவனைத்தேடி சிவா எனும் நண்பன் அதே கிராமத்திற்கு வருவதிலிருந்து கதை தொடங்குகிறது.

கோபால் தனியனாக இருப்பதால் வடிவேலு நடத்தும் டீக்கடையில் உண்டு ராமையாவின் வீட்டில் தங்கியிருக்கிறான். அதே ஊரில் வசிக்கும் நிலச்சுவான்தாரர் கண்ணையா நாயுடு. தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தக்கூடாது என கூட்டுசேரும் மிராசுதாரர்களுக்கும் நிலச்சுவான்தாரர்களுக்கும் defacto தலைவன். அரசியல் பலமும், பணபலமும், ஆள்பலமும் கொண்டவன். வடிவேலு கண்ணையா நாயுடுவின் வைப்பாட்டி மகன். அவன் டீக்கடை நடத்தும் இடத்தை கண்ணையா அபகரிக்க நினைக்கிறான். ராமைய்யா ஒரு கம்யூனிஸ்ட். கூலி அதிகம் கேட்கும் தொழிலாளர்களுக்கு defacto தலைவர். ராமைய்யா தான் நடத்தும் துவக்கப்பள்ளியை கோபாலிடம் ஒப்படைக்க முயல்கிறார். ஆனால் கோபால், கண்ணையா நடத்தவிடமாட்டான் என ஐயம் கொள்கிறான்.

கண்ணையாவிற்கு ஆண்மை குறைவு. அதனை மறைக்கவும், கெளரவத்தை தக்கவைத்துக்கொள்ளவும் பல வைப்பாட்டிகள் வைத்து ஈடுகட்டுகிறான். வடிவேலுவுக்காகவும் பள்ளிக்கூடத்திற்காகவும் கண்ணையாவை அவனது வீட்டில் சந்திக்கும் கோபால் அவரது ஆண்மைக்குறைவு பற்றி பேச கண்ணையா அவனை ஆள்வைத்து அடிக்கிறான். அதே சமயத்தில் வடிவேலுவும் பாப்பாத்தி என்னும் தலித் பெண்ணும் காணாமல் போகிறார்கள். அந்த தலித் பெண்மணிக்கும் கோபாலுக்கும் தொடர்பு இருப்பதாக கண்ணையா குற்றம் சாட்டுகிறான். இதைப்பற்றி உளவறிய
கோபால் கண்ணையாவின் வைப்பாட்டியான பங்கஜம் என்னும் பெண்வீட்டிற்கு செல்கிறான். பங்கஜத்திற்கு கோபால்மேல் ஏற்கனவே ஒரு கண். அந்தவீட்டில்தான் வடிவேலுவும் பாப்பாத்தியும் அடைக்கப்பட்டிருப்பதாக தெரிந்து நடக்கும் தகராறில் கண்ணையாவின் அடியாள் ஒருவன் சாக பழி ராமைய்யா மீது விழுந்து அவர் கைதாகிறார்.

தகராறு வலுக்க ஒரு தலித் நாயுடுவான கண்ணையாவை அறைந்துவிடுகிறான். பிறகு நாயுடு தன் ஆட்களோடும் காவல்துறையின் பாதுகாப்பிலும் பெண்களும் குழந்தைகளும் நிரம்பியிருக்கும் குடிசைக்கு தீ வைக்கிறான். இறுதியில் கோபால் வன்முறையே வழியென தீர்மானிக்கிறான் என்பதுடன் கதை முடிகிறது.

எனக்கு இந்த நாவலில் தரிசனம் என எதுவும் கிடைக்கவில்லை, ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எழுதிய புத்தகம் என்பதால் ஆவராணா போல தரவுகளின் தொகுப்பாக இல்லாமல் பின்வரும் வழிகளில் கதையை அலசலாம். கண்ணையா ஏன் கொலைவெறி கொண்டான் என்பதற்கு காரணங்கள் எதுவும் கூறவில்லை. அவற்றை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம். கூலிக்காரப்பயலுங்களுக்கு நம்மை எதிர்த்துப்பேச எவ்வளவு தைரியம் என்னும் கோபம், ஒரு கீழ்ஜாதிக்காரன் நம்மளை அறைந்துவிட்டானே என்ற வெறி, அனைத்துக்கும் மேலாக ஆண்மை பற்றி பேசியதாலும் தன்னுடைய வைப்பாட்டியை கவர்ந்ததாலும் வந்த வெறி.

அவன் கூலியாட்களை குழப்பவும், ஒரு "பறையன்" அடிக்கும்போதும் மட்டுமே ஜாதியை இழுக்கிறான். இதற்குமேல் புரட்சி தோற்றுப்போக முக்கியமான காரணம், கோபால் மற்றும் சிவாவின் முதிரா இலட்சியவாதம் மற்றும் அனுபவமின்மை. ராமைய்யா பலநாட்களாக செய்துவந்தவற்றை அனுபவமின்மை காரணமாக தொலைத்துவிடுகின்றனர். ஏதோ குறையுள்ள மனிதனை எல்லாரும் சீண்டினார்கள், அவனுடைய வைப்பாட்டியை ஒருவன் கவர்ந்தான், சீண்டப்பட்டவன் திருப்பியடித்தான் என்ற வகையில் கதை முடிவதை என்னால் ஏற்கமுடியவில்லை. ஆனால் கதை அவ்வாறுதான் முடிகிறது.

அதேசமயத்தில், லௌகீக வாழ்க்கையில், இலக்கிலிருந்து விலகி சிற்றின்பங்களுக்கும் பழிவாங்கும் உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுத்தால் எவ்வாறு பின்னால் தள்ளப்படுவோம் என்பதற்கு கோபால் ஒரு சிறந்த உதாரணம். பங்கஜம் மேல் உள்ள ஈர்ப்புனாலும், அவளை அடைவதன்மூலம் கண்ணையாவை பழிவாங்கலாம் என்னும் நினைப்பினாலும் கோபால் பங்கஜதுடன் படுக்கையை பகிர, ஊரார் முன்னிலையில் அவனுடைய நேர்மையை கண்ணையா மிகவும் சுலபமாக கேள்விக்குரியதாக்கிறான்.

இந்தக்கதை மூலமாகத்தான் எனக்கு கீழ்வெண்மணி சம்பவம் பற்றி தெரியவந்தது. இலக்கியத்தில் கீழ்வெண்மணி பற்றி எழுதிய நூல் என்றவகையில் இது மிகமுக்கியமான நூல்.

இந்த கதையை ஜெயமோகன் தன்னுடைய இரண்டாம் பட்டியலில் சேர்கிறார் - பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள்.

திரட்டுப்பால் மனதில் வரும்போதெல்லாம் அதற்குப்பின் நான் சிறுவயதில் அறிந்த சாதீய வன்முறையும் அடக்குமுறையும் மனதை உறுத்தும். திரட்டுப்பால் சாப்பிடுவது வெகுவாக குறைந்துவிட்டது, இப்புத்தகத்தை படித்தபின், முழுவதும் நிறுத்தலாமா என யோசிக்கிறேன்.

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

கடலுக்கு அப்பால் - வாசிப்பனுபவம்

கல்லூரியில் படிக்கும்போது ஏதோ நாம் பெரிய புரட்சி செய்யபோகிறோம் என்னும் எண்ணம் எல்லாருக்கும் இருக்கும்... அதுவும் நான் கல்லூரியில் இருந்த (கவனம், படிக்கும் அல்ல) சமயத்தில்தான் அஜய் தேவ்கன் நடித்த பகத் சிங் திரைப்படம் வந்து, காந்திக்கு எதிரான மனநிலையில் தூபம் போட்டது. பிறகு சில வருடங்களுக்கு பிறகு ரங்தே பசந்தி.. அதே உணர்ச்சி கொந்தளிப்பு, போராட்ட மனநிலை. அப்போதெல்லாம் பகத் சிங்கும், நேதாஜியும் சுதந்திரம் வாங்கித்தந்து நாட்டின் தலைவர்களாயிருந்தால் நாடு உருப்பட்டிருக்கும் என்னும் எண்ணம். இந்த காந்திதான் நாட்டை உருப்படாமல் ஆக்கிவிட்டார் என்னும் மனநிலை. அதோடு கண்ணில்படும் பெண்களெல்லாம் நம்மையே பார்ப்பதுபோல ஒரு தோற்றம். சரிதானே, பெண்களுக்கு புரட்சியாளர்கள்மேல் ஈர்ப்பு அதிகமாக இருந்தாகவேண்டுமே...

இந்த காந்தி வெறுப்பு மறைந்து, நிதரிசனம் என்னை அறைய சிலபல ஆண்டுகளும் புத்தகங்களும் தேவைப்பட்டன. அவற்றில் அண்ணா ஹசாரே அவர்களின் போராட்டமும் என் ஆசானாக நான் கருதும்  ஜெயமோகன் அவர்களின் பதிவுகளும், நூல்களும் முக்கிய பங்காற்றின. இந்த புரிதலை இன்னும் தீவிரப்படுத்தும் வகையில் அமைந்தது ப.சிங்காரம் அவர்கள் எழுதிய கடலுக்கு அப்பால் என்னும் நாவல்.

இன்றைய இலக்கிய உலகில், ப.சிங்காரம் அவர்களுக்கு தனியாக அறிமுகம் எதுவும் தேவை இல்லை. என்றாலும், இரண்டே புத்தகங்கள் எழுதியிருந்தாலும் திருக்குறளின் இரண்டடி போல இரண்டும் பொக்கிஷங்கள். அவரின் வார்த்தைகளிலேயே, அந்த இரண்டு பொக்கிஷங்களை பதிப்பிக்க எவ்வளவு பாடுபட்டார் என்பதை சொல்லியிருக்கிறார். உயிருடனிருந்தபோது நாம் கொண்டாடாமல் விட்டு, நாமே அழித்த ஒரு சிறந்த  கதைசொல்லிதான் ப.சிங்காரம் அவர்கள். புலம்பெயர் எழுத்தாளர்களில் அவரே முன்னோடி.

புலம்பெயர் தமிழனான செல்லையாவின் சுதந்திர போராட்டமும், காதல் போராட்டமுமே இந்த கதை.

செல்லையா தன்னுடைய முதலாளியும் வட்டிக்கடைக்காரருமான வானாயீனாவின் மகள் மரகதத்தை விரும்புகிறான். அவளுக்கும் இவன்மேல் கொள்ளை பிரியம். வானாயீனாவுக்கு தொழில் தெரிந்த தன் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவன் மகளை மணப்பதில் ஒப்புதல்.  அவர் மனைவி காமாட்சிக்கோ செல்லையாபோல ஒரு நல்ல மனிதன் மகளை மணப்பதில் மகிழ்ச்சி. இந்த சூழலில் செல்லையா நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்கிறான். நேதாஜியின் மறைவுக்கு பிறகு இந்திய தேசிய ராணுவத்தினர் அனைவரும் தங்களின் பழைய வாழ்க்கைக்கு வருவதை இந்த புத்தகம் சித்தரிக்கிறது.

வானாயீனா செல்லையாவை தன்னுடைய வியாபாரத்தை பெருக்கும் ஒருவனாகவே பார்க்கிறார். அதனால் பழைய வாழ்க்கைக்கு திரும்பும்போது செல்லையாவும் மரகதமும் தங்கள் காதலை இழக்கின்றனர். அவருக்கு அனைத்தும் வியாபாரமாகவே தெரிகிறது. மகளுக்கு நாகலிங்கத்தை திருமணம் செய்ய முடிவெடுக்கும்போது அவரின் வாக்கியமாக "மரகதம் ஊர்ல அவுக ஆத்தாளோட இருந்திட்டு போகுது, அதுவும் இங்கின இருந்தாக்க நாகலிங்கம் பயலுக்கு தொழில்ல புத்தி போகாது". இவருக்கு பணமும் தொழிலும்தான் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே செல்லையாவிடம் "இது பொட்டச்சி தொழிலு. ஒனக்கு இது ஒத்து வராது" என சொல்லும்போது செல்லையாவுடன் நாமும் இவரை நம்மால் புரிந்துகொள்ள முடியாது என்றே மனம் சொல்கிறது.

காமாட்சி ஊரை சுற்றிப்பார்க்க வந்து போரின் காரணமாக அங்கே மாட்டிக்கொள்கிறாள். மகள் பக்கமும் நிற்கமுடியாமல் கணவரையும் எதிர்க்க முடியாமல் திணறும்போதும், மகளுக்காக கண்ணீர் விடும்போதும் செல்லையாவிடம் பாசம் காட்டும்போதும், மன்னிப்புக் கேட்கும்போதும் தாயின் மனதை மிகச்சிறப்பாக உணர்த்துகிறாள். தன மகன் உயிரோடு இருந்தால் அவனும் பட்டாளத்துக்குத்தான் போயிருப்பான் என கணவனிடம் கூறும்போதும், செல்லையா ஜப்பானியரை கொன்றது சரியே என வாதிடும்போதும் புதிய காமாட்சியாக வானாயீனா செட்டியாருக்கே தெரிகிறாள்.

இதில் மாணிக்கம் இரண்டு இராமாயண கதைகளை சொல்கிறான். ஒன்று கனகவல்லி ராமாயணம் மற்றொன்று மின்லிங் ராமாயணம். இரண்டிலும் ஜப்பானிய மேஜர் இச்சியாமா வருகிறான். போரின் பின்விளைவுகளில் ஒன்றான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதை மிகவும் சாதாரணமாக கதையின் ஓட்டத்தில் மாணிக்கம் சொல்கிறான். இராமாயண சீதைக்கும் இந்த சீதைகளுக்குமான ஒப்பீடு நம்மை கலங்கடிக்கிறது. பெண்தெய்வங்களை நாம் வணங்கத்தான் முடியுமே தவிர திருமணம் செய்துகொள்ள முடியாதென்பதை செல்லையாவிற்கு அறிவுறுத்தும் இடம், இலக்கியத்தின்மூலம் மாணிக்கம் எவ்வாறு வாழ்க்கையை, வாழ்க்கையின் தரிசனத்தை புரிந்துகொண்டிருக்கிறான் என்பதை தெளிவாக காட்டுகிறது.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு மரகதம் உண்டு. ஆனால் அவள் நேரில் வரும்போது கண்டுகொள்ளும் ஊழின் தருணம் வாய்ப்பதென்பது நம் எவரின் கையிலும் இல்லை. தன்னுடைய பெற்றோரை விடமுடியாமல், செல்லையாவை நினைத்து காதலில் உருகுவதும், பிரிவின்போது அவன் பெயரிட்ட கைக்குட்டையை பரிசாக கொடுப்பதும் பிறக்கும் பெண்ணிற்கு மரகதம் என்று பெயரிட்டு மடியில் அமர்த்தி கொஞ்ச சொல்வதும், எக்காலத்திலும் பெண்கள் காதலனை, மனதில் அமர்ந்தவனை மறக்கமாட்டார்கள் என்பதை தெளிவாக்குகிறது.

கதையின் நாயகனாகிய செல்லையாவிற்குத்தான் எவ்வளவு பிரச்சனைகள், தர்மசங்கடங்கள்!! பழைய வாழ்க்கைக்கு திரும்பமுயலும்போது, முதலாளியின் கோபம், அதனால் காதலியின் பிரிவு. போராட்டத்தின் தலைவர் மறைந்ததால் புதிய வழிகளனைத்தும் மூடிக்கொள்ள முதலாளியிடம் செல்ல தயக்கம். கர்னல் கரிமுடீனிடம் தளவாடங்களுக்காக பேரம் பேசும்போது அவன் காட்டும் நெஞ்சுரம் நம்மை மலைக்கவைக்கிறது. பிறகு சிம்பாங் திகா பாலத்தை கைப்பற்றும் தைரியம், போர்வெறி முதலியன நம்மை அப்படியே கதைக்குள் இழுத்துக்கொள்கின்றன. அவன் மரகதத்திடம் பேசும் பகுதியை எவ்வளவுமுறை படித்தேன் என்று எனக்கே  தெரியவில்லை. ஆனால் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் கண்கள் கலங்கின.

இவற்றினூடாகத்தான்,கதையின் ஆசிரியர் இந்திய தேசிய ராணுவத்தினை, அதன் பற்றாக்குறைகளை, சீன-ஜப்பானிய உறவை, தமிழர்களை, பலகோணங்களில் பலருடைய பார்வையில் வெளிப்படுத்தப்படுகிறார். நேதாஜியின் மறைவு பல குழப்பங்களை உண்டாக்கி இந்திய தேசிய ராணுவத்தையே கலைத்துவிடுகிறது. போர் முடிந்தபின், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் பலர் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைக்கின்றனர். ஒருபக்கம் பழிவாங்கும் ஆங்கிலேய பட்டாளம், , மறுபக்கம் உலக அளவில் துப்பாக்கியை தாழ்த்திவிட்டாலும் உரிய கட்டளைகள் வராமல் தடுமாறும் ஜப்பானிய படைகள்... இருவரிடமும் தப்பித்து "சட்டை மாற்றும்" இந்திய தேசிய ராணுவவீரர்கள், அவர்களில் பலரை ஏற்கும் தோட்டவேலையாட்கள் என பரவுகிறது.

இந்த கதையின் அடியில் ஓடும் மென்சோகம் அனைவரும் தமிழகம் திரும்ப எண்ணுவதே. இன்ஸ்பெக்டர் குப்புசாமியின் பாட்டியின் "ஆத்த கண்டியா, அழகர கண்டியா" என்னும் வசவின் மூலமாக அனைத்தையுமே உணர்த்துகிறார். வானாயீனா குடும்பம் தினமும் கப்பலுக்காக விசாரிப்பதும் காத்திருப்பவர்களின் எண்ண ஓட்டங்களும், மனதை பிசைந்து கலங்கடிக்கின்றன.

போராட்டம் நீர்த்துப்போனபின்னர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் பலரின் நிலைமையை சிறப்பாக உணர்த்துகிறது. ப.சிங்காரம் அவர்களின் வார்த்தைகள் மற்றொரு நாவலான புயலிலே ஒரு தோணியின் முன்னுரையில் உள்ளது. அதில் கூறுவதுபோல இந்த கதாபாத்திரங்கள் அவர் நேரில் பார்த்து வடித்தவை என உணரலாம். நெல்சன் ஆஸ்திரேலியா படிக்க செல்கிறான், மேஜர் சபுராவை சுடும் ராஜதுரை மதுவுக்கு அடிமையாகிறான், கே.கே.ரேசன் பாங்காக் நகரில் காலம்தள்ளுகிறான், இவர்களுடன் செல்லையா காதலை தொலைத்துவிட்டு நிற்கிறான்.

இறுதியாக நேதாஜியின்  அல்லது பகத் சிங்கின் தேசபக்தியினை கடுகளவுகூட விமர்சிக்கும் தகுதி எனக்கு கிடையாது. அவர்களைப்பற்றி குறைவான அல்லது தவறான மதிப்பீடுகளை கொண்டவனல்லை நான். ஆனால், அவர்களின் வழி இந்திய சுதந்திரத்திற்கானது அல்ல என்பது குறித்து எனக்கு வேறு கருத்து இல்லை. நேதாஜியோ பகத் சிங்கோ இந்தியாவின் சுதந்திரத்தை வாங்கியிருந்தால், பெரும்பாலும் ராணுவ ஆட்சியோ, சர்வாதிகார ஆட்சியோ மட்டுமே இந்தியாவில் இருந்திருக்கும். நேதாஜியின் வழியாக இந்தியா இங்கிலாந்துக்கு பதிலாக ஜப்பானுக்கு அடிமைசேவகம் புரிந்திருக்கும். ஆனால், இந்திய தேசிய ராணுவம் நேதாஜியின் மறைவுக்கு பின்னர் சிதறுவது போல நேதாஜி சுதந்திரம் வாங்கியிருந்தால் இந்திய தேசமே சிதறிப்போயிருக்கும். முதிரா இலட்சியவாதமே இவற்றில் தெள்ளென தெரிவது. ஆயுதம் மூலம் பெறும் எந்த உரிமையும் நிலைத்து நிற்க முடிவதில்லை.

காந்திய வழியாக பெற்ற சுதந்திரமே நமக்கு இப்போதுள்ள ஜனநாயக அரசாங்கத்தை அமைத்து, பல்வேறு உரிமைகளை அளித்து நாடு இப்போதுள்ள நிலையினை அடைய உதவியது.

இந்த வரலாற்று தரிசனமே எனக்கு இந்த புத்தகம் மூலமாக கிடைத்தது. 

திங்கள், 2 செப்டம்பர், 2019

அம்புப்படுக்கை - ஒரு வாசிப்பனுபவம்

அம்புப்படுக்கை என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பீஷ்மரின் கதாபாத்திரமே. வயதில் மூத்தவரென்பதால் அவர்தான் முதலில் இறக்கவேண்டும்.. ஆனால், தன பேரன், கொள்ளுபேரன்களின் இறப்பைக்கண்டு பிறகு அம்புபடுக்கையில் இருந்து யுதிஷ்டிரனுக்கு அறிவுரைகளையும்  சஹஸ்ரநாமத்தையும் கூறிவிட்டு பிறகு தந்தையின் ஆசியின்படி தனக்கு உகந்த நேரத்தில் உயிரை விடுகிறார்.

இந்த தலைப்பில் சிறுகதை தொகுப்பு என்றதும் என்னுடைய மஹாபாரத ஆர்வம் காரணமாக அனைத்தும் பாரத கதைகளாக இருக்குமென நினைத்து ஒரு கடையில் புரட்ட  ஆர்வம் குறைந்து வாங்காமல் வைத்துவிட்டேன் (படிக்காமல் விட்டதற்கு எவ்வளவு  சொல்லவேண்டியிருக்கிறது).

பிறகு விஷ்ணுபுரம் குழுமம் நடத்திய ஈரோடு சிறுகதை முகாமில் சுனீல் கிருஷ்ணன் இரண்டு அமர்வுகளை நடத்துகிறார் என்றதும்கூட படிக்கவில்லை. அவர் சிபாரிசு செய்த கதைகளை படித்துவிட்டு ஈரோடு அரங்கில் கலந்துகொண்டேன். அங்கே சென்றபிறகுதான் நான் செய்த தவறு உறைத்தது. நான் என்னுடைய ஆசான் என கருதும் ஜெயமோகன் (நான்தான் சொல்லிக்கொள்கிறேன், அவர் என்ன நினைக்கிறார் என தெரியவில்லை) ஒரு எழுத்தாளரை பார்க்குமுன் அவருடன் பேசும்முன் அவர் எழுதிய கதைகளை படித்திருக்கவேண்டும் இல்லையென்றால், அவரை நாம் அவமதிக்கிறோம் என்றே அர்த்தம் என பல இடங்களில் பலவாறு எழுதியிருக்கிறார். இதை மனதில் கொண்டு நான் சுனீல் கிருஷ்ணன் அருகில் கூட செல்லவில்லை.

பிறகு, சென்னை திரும்பும் வழியிலேயே கிண்டிலில் அம்புப்படுக்கை சிறுகதை தொகுப்பை தரவிறக்கம் செய்து வழியிலேயே படித்து முடித்தேன்.

அ) வாசுதேவன் : அப்போது நான் டெல்லியில் இருந்தேன், திடீரென என் ஒரு வயது மகளுக்கு தொடர்வயிற்றுப்போக்கு. பெரிய அனுபவமெதுவும் இல்லையென்பதால் நானும் மனைவியும் களேபரம் செய்துவிட்டோம். என் வீட்டிலும் மனைவி வீட்டிலும் மனைவியையும் குழந்தையையும் உடனடியாக ஊருக்கு அனுப்பச்சொல்லி கட்டாயம், தினமும் 8-10 தொலைபேசி அழைப்புகள். பணமில்லாததால் விமானத்தில் அனுப்ப முடியாது, தொடர்வண்டியில் அனுப்பினால் இரண்டு நாள் ஆகும். இன்னசெய்வது என யோசித்திக்கொண்டிருக்கும்போது கூட வேலைசெய்யும் வயதில் மூத்த நண்பரொருவர் சொன்னார், "அங்கெல்லாம் அனுப்பாதே, ஒரு குழந்தையை (எந்த வயதானாலும் பிள்ளைகள் பெற்றோருக்கு குழந்தைகளே) மனம் சலிக்காமல் பார்த்துக்கொள்ள பெற்றோரால் மட்டுமே முடியும், இவற்றை சொன்னால் மனம் சங்கடப்படும், ஆனால் உண்மை இதுதான். நீங்களே குழந்தையை பார்த்துக்கொள்ளுங்கள்" என்றார். நான் என் மகளை அனுப்பாமல், உடன்வைத்து நானும் மனைவியும் பார்த்துக்கொண்டோம். அதேநேரத்தில், இது நடந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு ஒரு அறுவைசிகிச்சை நடந்தபோது என் பெற்றோரும் மனைவிக்கு டெங்கு வந்தபோது அவருடைய தாயாரும் வந்து கவனித்துக்கொண்டபோது இதை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. இப்போதும் மகளுக்கு உடல் நலமில்லையெனில் நாங்களே பார்த்துக்கொள்கிறோம். இந்த கதையை படித்தவுடன், எனக்கு என்னுடைய புரிதல்கள் மிகவும் சரியென தோன்றிய தருணங்கள்... என்னால் மறக்க முடியாது. வாசுதேவனை அவனுடைய பெற்றோர் அவன் அப்படியே இருக்கட்டும், நாங்கள் இருக்கும்வரை பார்த்துக்கொள்கிறோம் என சொல்வது, இதே உணர்வினால் மட்டுமே.

ஆ) பேசும்பூனை : இந்தக்கதையின் கரு ஒரு சமகால பிரச்னையை அலசுகிறது. Talking Tom என்னும் செயலி வந்தபுதிதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பைத்தியமாக அடித்தது. அதேபோல சிலபல செயலிகள் மூலம் விளையாட்டு என சொல்லி மூளைக்கு ஏற்றப்பட்டு கைபேசியின் பயன்பாட்டை அதீதமாக வளரச்செய்து மூளையின் செயல்பாட்டையும், சிந்திக்கும் திறனையும் குறைக்கச்செய்து தங்கள் இலாபத்தை அதிகப்படுத்திக்கொண்டன. இதனால் உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களை மிகவும் சிறப்பாக சொல்கிறது. அந்த பிரச்சனை இப்போது ALEXA என்னும் புதிய செயலி மற்றும் மின்னணு இயந்திரம் மூலம் மேலும் வளரப்போகிறது. இப்போதே ALEXA-வும், SIRI-யும் அதுவாக பேசுவதையெல்லாம் பதிவுசெய்து இணையதளத்தில் ஏற்றம் செய்கின்றன என்னும் செய்திகள் பரவலாக வருகின்றன. நமக்கென எந்தவொரு அந்தரங்கத்தையும் வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையை இந்த சாதனங்கள் ஏற்படுத்தியுள்ளன. இதையும் வைத்து பேசும் கைபேசி என்னும் பேசும்பூனை-2.0 வர வாய்ப்பு உள்ளது.

இ) கூண்டு : இதுவும் ஒரு சமகால பிரச்னையை அணுகி அலசும் கதை. ஒரு தவறு நிகழ்கிறது எனில், அதை தட்டிக்கேட்காத, அதை உணராத ஒவ்வொருவரும் அந்த தவறுக்கு பொறுப்பாகிறார்கள் என்பதே நான் புரிந்துகொண்ட தரிசனம். இந்தியன் திரைப்படத்தில், சேனாபதியின் வார்த்தைகளில், "பண்றது தப்புன்னே தெரியாத அளவுக்கு உங்களுக்கு இலஞ்சம் பழகிப்போயிருக்கு" என்னும் வாக்கியம். நாம் ஒரு தவறு செய்தோமென்றால், உடனே பார்ப்பது வேறுயாராவது அதே தவறை செய்து தப்பித்திருக்கிறார்களா என்பதே. எவரும் நம்மை விலக்கவில்லையென்றால், அந்த தவறை நாம் செய்ய தயக்கமிருப்பதில்லை. யாரையும் எந்தத்தருணத்திலும் ஏமாற்றாத ஒருவன் இருப்பனெனில் அவனை கூண்டுக்கு வெளியே தனித்து இருக்கும் ஒருவன் என நாம் பரிதாபப்படுகிறோம், பிழைக்கத்தெரியாதவன் என்று சொல்லி எள்ளி நகையாடுகிறோம். ஆனால் கூண்டுக்குள் இருப்பது நாமே என நமக்கு உறைப்பதே இல்லை.

ஈ) பொன்முகத்தை பார்ப்பதற்கும் போதைமுத்தம் பெறுவதற்கும் : கிராமத்திலிருந்து ஒரு சிறுவன் பொறியியல் படித்துவிட்டு சென்னையிலோ, பெங்களூரிலோ பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறான். பிறகு வாழ்க்கையின் அடுத்தகட்டமான திருமணம், குழந்தைகள் என்பன தொடரும். குழந்தைகள் பிறந்தபிறகுதான் முக்கியமான பிரச்சனை தொடங்கும். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும்பட்சத்தில் தாத்தா-பாட்டி இருவரும் பேரன்-பேத்தியை பார்த்துக்கொள்ள கிராமத்திலிருந்து தங்களுக்கு சிறிதும் பழக்கமில்லாத அடுக்குமாடி கட்டடத்திற்கு வருவார்கள். அவர்களின் அவஸ்தையை சொல்வதே இந்த கதை. நேரடியாக இதிலும் எனக்கு அனுபவம் உண்டு. டெல்லியிலிருந்தபோது ஒவ்வொரு வருடமும் என் பெற்றோர் இரண்டு மாதங்கள் அங்கே வருவார்கள். புரியாத மொழி, அறியாத கலாச்சாரம் என அவர்களின் அவஸ்தையையும், நண்பர்கள் இல்லாமல் பேசவும் ஆளில்லாமல் அவர்களின் கஷ்டத்தையும் பார்த்து சென்னை வர கிடைத்த முதல் வாய்ப்பையே தவறவிடாமல் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கே ஒருமுறை டெல்லியில் இருந்தபோது என் பாட்டிக்கு உடல்நலமில்லாமல் போய்விட நானும் வெளிநாட்டில் இருக்க என் பெற்றோருக்கு விமானத்தில் சென்னை திரும்பவேண்டிய சந்தர்ப்பம். மிகவும் கஷ்டப்பட்டதாக அம்மா சொல்ல நான் அங்கே வெளிநாட்டில் அழுதுகொண்டிருந்தேன். இவ்வாறு பேரப்பிள்ளைகளுடன் இருப்பதற்காக இவர்கள்படும் அவஸ்தை கொஞ்சநஞ்சமில்லை.

உ) அம்புப்படுக்கை : நாம் பலநேரங்களில் மருத்துவரிடமிருந்து மருந்தைத்தவிர நம்பிக்கையையும் ஆறுதலையும் கூடத்தான். மருத்துவரின் எல்லாம் நல்லபடியா ஆயிடும், ஒண்ணும் கவலைப்படாதீங்க என்னும் வாக்கியத்திற்கு நிகரான இன்னொரு ஊக்கமூட்டும் வாக்கியத்தை கண்டுபிடிப்பது கடினம். இந்த கதையில் ஆனாரூனா செட்டியாருக்கு அடுத்தவருக்கு சொல்ல பலவிபிஹமான சாகசங்கள் நிறைந்த கதைகள் உண்டு. அவற்றில் நேதாஜியும், வெள்ளையரும், ஜப்பானியரும் வருவார்கள். ஆனால் அவர் எதிர்பார்ப்பது அவர் பலகாலமாக நம்பும் ஒரு வைத்தியரின் வார்த்தைகளையே. ஆனால் அவர் இல்லாததால் அவருடைய வாரிசிடமிருந்து. அவனும் ஒருவரை நோயிலிருந்து விடுவிப்பதென்பது நோயை குணப்படுத்துவது மட்டுமில்லை என்று நன்றாக அறிந்திருக்கிறான். எங்களூரான தருமபுரியில் ஒரு மருத்துவர் ஊட்டும் நம்பிக்கையானது அதீதமானது. அவரால் இன்னும் வாழ்வோர் ஏராளம். அதேநேரத்தில், வயதானவர்கள் சென்றால், நம்பிக்கையூட்டுவதோடு இந்த வயது வந்தால், இந்தமாதிரி பிரச்சனையெல்லாம் வரும், அதற்காக மனதை தயார் செய்து அனுப்புவார். பீஷ்மர் அம்புபடுக்கையின் வலியை பொறுத்துக்கொண்டு வாழ்வதைப்போல வாழ வழிசொல்வார்.

ஊ) ஆரோகணம் : போர் முடிந்துவிட்டது, அஸ்வமேதம் முடிந்துவிட்டது. பிள்ளைகளை இழந்து பேரனான பரிக்ஷித்திற்கு பட்டம் சூட்டிவிட்டு நாடுநீங்கி பாண்டவர்கள் மலையேறி செல்கிறார்கள். ஒவ்வொருவராக விழ தன்னை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்த நாயுடன் யுதிஷ்டிரர் எனப்படும் தருமர் நடந்துகொண்டே இருக்கிறார். அந்த நாயின் பொருட்டு சொர்க்கத்தையே மறுக்கும்போது அந்த நாயானது தருமதேவதையாக மாறுகிறது. அதுதான் அவர் அதுநாள்வரை கட்டிக்காப்பாற்றிவந்த அறம், தருமம். அதேபோல காந்தியும் யாருமில்லாதபோதும் தனியாக பலமுறை நடந்தார், எதன்பொருட்டும் அவர் தன்னுடைய கொள்கைகளையோ கருத்துக்களையோ மாற்றிக்கொள்ளவில்லை. அதுவே அவருடைய அறம். இந்த புனைவில் இவ்விரண்டுபேரும் இணைகிறார்கள். கதையில் சேர்ந்து நடக்கிறார்கள். காந்தியும் மக்களுக்காக நிஜஉலகின் சுவர்க்கத்தை விட்டதுபோல மேலுலகின் சுவர்க்கத்தையும் விட்டிருப்பார் என்பது தெள்ளத்தெளிவு.

எ) குருதிச்சோறு : நாட்டார் தெய்வங்களை குறித்த பல படைப்புகள் உள்ளன. அந்த நாட்டார் தெய்வங்கள் எந்தப்புள்ளியில் எவ்வாறு வைதீக வழிபாட்டு முறைக்குள் சேர்ந்துகொள்கின்றன என்பதே இந்த கதையின் கதைக்களம். இதில் பாலாயியே மனதில் ஆறாவடுவென மனதில் நிற்கிறாள். சபரியும் சுடலையும் அவரவர் புரிதலுக்கு ஏற்றவாறு தெய்வங்களை அறிகின்றனர். அன்னரக்ஷாம்பிகையோ, பாற்கடலில் ஆதிசேஷனின் மீது துயிலும் நாராயணனோ, பாலாயியோ, அன்னபூரணியோ எவர்மூலமாகவும் என்னுடைய தரிசனம் என்பது இருப்பதை உடனுள்ளோருடன் பகிர்ந்துண் என்பதே.

ஏ) திமிங்கலம் : எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பலர் பலவிதமாக எழுதியுள்ளனர். அவற்றில் ஒரு சாத்தியத்தை இந்த கதை கூறுகிறது. வளர்ப்புப்பிராணிகளை கொல்வதும், வயோதிகர்களை தற்கொலைக்கு தூண்டுவதும் முதியோர் இல்லங்கள் மலிந்துள்ள இந்தக்காலகட்டத்தில் நடக்க வாய்ப்புகள் இல்லையெனினும் எதிர்காலத்தில் நுகர்வுலகத்தில் நடக்க வாய்ப்புக்கள் அதிகமென தோன்றுகிறது.

மற்ற இரண்டுகதைகளான காளிங்க நர்த்தனமும் 2016ம் கதைகளாக சிறப்பாக இருந்தபோதிலும் எனக்கான புரிதல்களை தரவில்லை. ஜார்ஜ் ஆரவெல்லின் 1984 கதையை படித்தால் பிடிகிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஒருமுறை ஜெயமோகன் கூறியதுபோல காளிங்க நர்த்தனம் கதையை மீள்வாசிப்பு செய்தால் அதிலுள்ள படிமங்களெனும் கதவுகள் எனக்காக திறக்கலாம்.


புதன், 7 ஆகஸ்ட், 2019

ஆவரணா மத உணர்வுகளை பாதிக்கும் புத்தகமா?? - ஒரு வாசிப்பு அனுபவம்

நான் பள்ளிக்கூடத்தில் படித்த (!!) வரலாறாகட்டும் அல்லது இப்போது ஊடகங்கள் கூறும் வரலாறாகட்டும், நிஜத்திலிருந்து வெகுதொலைவில் உள்ளவை என்பதை உணர்த்திய பல புத்தகங்கள் உண்டு. அவற்றில் நான் முதலில் படித்தது மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள். ஒரு ஏழாம் வகுப்பு பள்ளி மாணவனுக்கும் (நான் அந்த புத்தகம் வெளிவந்தபோது ஏழாம் வகுப்பில் தான் இருந்தேன்) புரியும்படி எழுதியது மாபெரும் வெற்றி. பேசாமல் இதனை பள்ளி பாடநூலாக வைக்கலாம். டெல்லி சுல்தான்கள், கில்ஜிகள், லோடி பரம்பரை கடைசியாக மொகலாயர்கள் என மிகவும் சுவாரசியமான எழுத்தின் மூலம் இந்த புத்தகம் இருந்தது. ஆனால் இன்றைய விக்கிப்பீடியா யுகத்தில் இந்த புத்தகம் இளையோருக்கு எவ்வளவு பிடிக்கும் என சொல்வது கடினம்.

வளர்ந்த பிறகு வரலாற்றினை நமக்கு மீள் அறிமுகம் செய்திவைக்கும் எழுத்துக்களாக பல புனைவுகள் உள்ளன. ஜெயமோகனின் வெள்ளை யானை, இன்றைய காந்தி, ராய் மாக்ஸம் எழுதிய உப்புவேலி, முதலிய அவற்றில் சில (இந்த வாசிப்பனுபவங்களை இன்னும் எழுதவேண்டும்). இந்த வரிசையில் என்னுடைய வாசிப்பின் புதிய வாசலை திறந்தது ஆவரணா.

புத்தகத்தின் ஆசிரியரான எஸ் எல் பைரப்பாவிற்கு அறிமுகம் ஏதும் தேவை இல்லை. நான் ஆங்கில மொழிபெயர்ப்பை வாசித்தேன்.

முற்போக்குவாதியான கதையின் நாயகி ஒரு இந்துவாக பிறந்து காந்தியவாதியான தன் தந்தையின் எதிர்ப்பை மீறி மதம் மாறி திருமணம் செய்துகொள்கிறாள். அவளுடைய திருமண வாழ்வு அவள் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. இருவரும் நாடக, திரைப்பட துறையில் வேலை செய்பவர்கள். அவள் கணவன் வெளியில் முற்போக்குவாதியாகவும் வீட்டில் ஒரு மதநம்பிக்கையுள்ளவனாகவும் இருக்கிறான். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர்கள் தனிக்குடித்தனம் செல்ல அவர்கள் மகன் பெரும்பாலும் தாத்தா பாட்டியிடம் வளர்கிறான்.

இந்த நிலையில் சில வருடங்களுக்கு பிறகு கதாநாயகியின் அப்பா காலமாகிவிட, அவள் தன கிராமத்திற்கு செல்கிறாள். அங்கே அவளுடைய அப்பாவின் நூலகத்தை பார்க்கிறாள். அவர் படித்த புத்தகங்களையும் அவருடைய உழைப்பையும் பார்த்து தான் ஒன்றும் படிக்காமலே பல திரைக்கதைகளை எழுதியதை நினைத்து மனம் வெட்கி கூனி குறுகுகிறாள். அவற்றை தன் வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி, அவற்றை படித்து ஒரு வரலாற்று நாவலை எழுதுகிறாள். மத உணர்வுகளை புண்படுத்துவதாக அந்த புதினம் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு அவள் கைது செய்யப்படுவதுடன் கதையை முடிக்கிறார் எஸ் எல் பைரப்பா.


அந்த புதினத்தின் கதைக்களம் ஒளரங்கசீப் காலத்தில் நடந்த மதங்கள், மதமாற்றங்கள் பற்றியது. ராஜஸ்தானிய இந்து அரசகுடும்பத்தினர்களும், அவர்களின் அரசகுல பெண்மணிகளும் போருக்கு பிறகு எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், கப்பம் எவ்வாறு வசூலிக்கப்படுகிறது, படைகளும் அதன் தலைவர்களும் (ஆயிரத்தவர்கள், பத்தாயிரத்தவர்கள், முதலியர்) எவ்வாறு நடந்துகொள்கிறார்கள், திப்புசுல்தானின் அரசியல், என கதாநாயகியின் புதினம் விரிகிறது. காசி விஸ்வநாதர் ஆலயம் எவ்வாறு இடிக்கப்பட்டது என்பதை கதாநாயகியின் புதினத்தில் வாயிலாக, ஆசிரியர் விவரணை செயகிறார். இந்திய வரலாற்றில் மராத்தாக்கள் இல்லாமல் மொகலாயர்களிடமிருந்து ஆங்கிலேயருக்கும் பிறகு சுதந்திர இந்தியாவிற்கும் வாரணாசி வந்திருந்தால், இன்றைய வாரணாசியை நாம் கண்டிருக்க முடியாது. இந்த ஒரே ஒரு வரியை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை.

இவற்றினிடையே கதாநாயகிக்கும் பேராசிரியர் சாஸ்திரிக்குமான உறவு, அவருடைய குடும்பம், கதாநாயகியின் கணவனின் இரண்டாம் திருமணம் என பல்வேறு பாத்திரங்களின் உள்நிலையை விவரிக்கிறது இந்த புத்தகம்.

 என்னுடைய பார்வையில் மொகலாயர்களுடனான இந்து சிற்றரசர்களின் போர் விளைவுகளை வீழ்ந்தவர்களின் கோணத்தில் இந்த புத்தகம் கூறுகிறது.

இந்த புத்தகம் மத உணர்வுகளை புண்படுத்துமா என்றால், விஸ்வரூபம் கமல் பாணியில் 'ஆமாம்' மற்றும் 'இல்லை' என்பேன். நமக்கு முன்னாள் வைக்கப்படும் வரலாறு உண்மையா பொய்யா என உணர இந்த புத்தகத்தை படிக்கலாம். இந்த புரிதல் இல்லாமல் படித்தால் கண்டிப்பாக மதஉணர்வுகள் பாதிக்கப்படும்.

நான் என்னுடைய நண்பர்களிடையே இந்த புத்தகத்தில் கூறியவற்றை பேச எத்தனித்தேன். ஒரு சாரார் இந்த புத்தகம் மிகவும் சரியான தகவல்களை கொண்டிருக்கிறது என்றனர். மற்றொரு சாரார், இது சரி கிடையாது. எங்கள் மதம் குறித்து தவறான தகவல்களை தருகிறது என்கின்றனர். நான் மதுராவுக்கும் காசிக்கும் சென்றுள்ளேன். அங்கு உள்ள நிலைமையை பார்த்தால், புத்தகம் உண்மை என்பது தெளிவாக தெரியும். அதற்காக இப்போதுள்ள தலைமுறையினரை குற்றவாளிகள் என கூறுவது சற்றும் பொருந்தாது.

ஆனால் இந்த புத்தகத்தை ஒரு அரசியல் கட்சியினர் தூக்கிப்பிடித்து மற்றவரை தாக்குவது முற்றிலும் தவறான நடவடிக்கை. ஜெயமோகன் அவர்கள், இந்த புத்தகம்  இலக்கியம் அல்ல என ஒருமுறை எழுதியிருந்தார்  விளக்கியுள்ளார். இது பருவம், ஒரு குடும்பம் சிதைகிறது போல இலக்கியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், பைரப்பா அவர்கள் கூறியது போல இதுவரை எந்த ஒரு விமர்சகரும் இந்த புத்தகத்தில் வரும் தகவல்களை தவறு என கூறவில்லை.

இந்த புத்தகத்தில் பிரச்சார நெடி உள்ளதா எனில் சற்று தூக்கலாகவே உள்ளது. ஆனால், அதையும் மீறி நம் வரலாற்றினை நாம் உணர இது ஒரு முக்கியமான புத்தகம். இதுவே இந்த புத்தகத்தின் வெற்றி என கூறலாம்.

சனி, 6 ஜூலை, 2019

ஏழாம் உலகம் - வாசிப்பு அனுபவம்

நான் கடவுள் திரைப்படம் பார்த்தபோது என்னுடைய மனத்தை உலுக்கியது அதில் வரும் பிச்சைக்காரர்களின் வாழ்க்கை. தங்களுடைய கஷ்டத்தை நகைச்சுவை மூலம் கரைத்து எப்படி வாழ்கிறார்கள் என்பது ஒரு பெரிய படிப்பினை.

ஆனால் ஏழாம் உலகமோ இன்னும் நுணுக்கமாக ஒவ்வொரு உருப்படியையும் அலசி ஆராய்ந்து புதிய படிப்பினையை தருகிறது. இதில் வரும் பண்டாரம் நான் கடவுள் திரைப்படத்தில் வரும் தாண்டவன் இல்லை. பண்டாரமும் ஒரு மனிதன்தான். தாண்டவன் கொடூரமானவன், அவனுக்கு உருப்படிகளித்தில் அன்பு, பரிவு என்பதே கிடையாது. ஆனால், பண்டாரமோ உருப்படிகள் ஆத்மா இல்லாத ஜீவன்கள் என சிறிது பரிவும், அவர்களிடமே ஆலோசனையும் கேட்கிறார். அவர்களும் அவர் மகளின் நிலையை கேட்டு வருத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு பண்டாரத்தின்மேல் கோபமே இருப்பதில்லை. இப்போதுகூட தாண்டவனை "அவன், இவன்" என ஏகவசனத்தில் அழைக்கும் மனது, பண்டாரத்தை அவ்வாறு அழைக்க மறுக்கிறது.

இது உருப்படிகளை மட்டும் கொண்டு உருவாக்கிய கதை இல்லை. தாய், தந்தை, கணவன், மனைவி, நண்பன், என எல்லாவிதமான உறவுகளுக்குள் இருக்கும் நுணுக்கமும், அதற்கு மேலாக வியாபாரிகள், அடியாட்கள், திருடர்கள் என விரிந்து, காவல்துறை, கம்யூனிஸ்ட், பூசாரி என தொழில் செய்பவர்களையும் சேர்த்து பின்னிய கதை.

முத்தம்மையும், தொரப்பனும், ரஜினிகாந்தும் அம்மா, அப்பா மற்றும் மகன் என்னும் உறவுக்கு புதிய அடையாளம் தந்துவிடுகிறார்கள். மகனை தொட எத்தனிக்கும் தொரப்பனும் அவனுடைய மனப்போராட்டங்களும் இந்த புத்தகத்தை படிக்கும் ஒவ்வொரு தந்தையையும் கலங்கடிக்கும். இந்த புத்தகத்தை படித்தபிறகு ஒரேமுறை "சிலையெடுத்தான் சின்னப்பெண்ணுக்கு" பாடலை கேட்டேன்.. அடுத்த கணம் ஒரு பெண்ணின் தந்தையாக மனம் பதறுவதை உணர முடிந்தது. அதேபோல் போத்திவேலு பண்டாரம், தன மகளுக்கு வளையல் செய்து தரும்போது, அவருடைய சந்தோஷத்தை மிகவும் அணுக்கமாக உணரமுடிந்தது.

அதேபோல விதம்விதமாக அம்மாக்களும் ஏழாம் உலகத்தில் இருக்கின்றனர். அவற்றில் முதல் இடம் முத்தம்மைக்கே. அவள் ரஜினிகாந்தை கொஞ்சுவதும், அவன் வெயிலில் அவதிப்படும்போது இவள் அழுவதும், எந்த நிலையிலும் தாய்ப்பாசத்திற்கு மேலாக ஒன்று இல்லையென காட்டியது. "வேய் கடிச்சான்னு சொன்னா காக்கிலோ கறிய எடுத்து போடுவா" என்னும்போது அவளுடைய பிள்ளைப்பாசம் மெருகேறி தெரிகின்றது. இவள் ஒருபக்கமென்றால் ஏக்கியம்மை மறுபக்கம். தங்களுடைய சக்தியையும் மீறி "ஒண்ணேகால் லெட்சமுண்ணா அப்பிடி நாங்க குடுக்கம். கலியாணம் தேதி மாறப்பிடாது" என் சொல்லுவதாகட்டும் "சும்மா கெடக்கேளா? நானும் எனக்க பிள்ளையளும் கயிறில தொங்கணுமா?" என கேட்பதாகட்டும், தன்னுடைய மகளின் வாழ்க்கை பாழாகக்கூடாது என்பதில் அவள் கொண்டுள்ள உறுதி எந்த தாய்க்கும் உள்ளது.

பவ்வேறு குணங்களையுடைய கணவன்-மனைவிகளையும் நமக்கு காட்ட ஜெயமோகன் தவறவில்லை. ஒருபக்கம் போத்திவேலு பண்டாரமும் ஏக்கியம்மையும் என்றால் மறுபக்கம் மாதவபெருமாளும் எருக்கும். ஒரு உருப்படியான தன்னை மருத்துவமனையிலிருந்து திருடும் பொருட்டு கட்டிய தாலியை எண்ணி "அவுக சாப்பிட்டாகளோ என்னவோ" என்றும் "அவிகளுக்கு என்னண்ணு தெரியல்ல. நான் செத்துப் போயிருவேன்" என அனைத்தும்போதும் கணவனின்மேல் தனக்குள்ள பாசத்தை பார்க்க முடிகிறது. ஆனால் ஏக்கியம்மையின் உறவு வேறுவகை. கணவன் பல நாட்களுக்கு பிறகு விஸ்கியை குடிக்கும்போது "சரி படுங்கோ. இல்லைண்ணா பாட்டும் கூத்தும் எளகி வரும் " என உல்லாசமாக கூறுவதிலாகட்டும், "ரெண்டு தோசய கெட்டிக் குடுக்கட்டுமா கையில" என கேட்கும் அக்கறையாகட்டும், லௌகீக வாழ்க்கையின் மனைவியை கண்முன் நிறுத்துக்கறாள்.

நட்பு என்பது நாம் வீழ்ந்து கிடக்கும்போது ஊன்றுகோலாய் இருப்பது. போத்திக்கும் பண்டாரத்துக்கும் உள்ளது அவ்வகை உறவே. பண்டாரத்தின் இரண்டாம் மகள் நகையுடன் ஓடிப்போனபிறகு முதல்மகளின் கல்யாணத்தை முன்னின்று நடத்துவதிலும், அந்த பெண்ணின் வருங்கால மாமியாரை வண்டிமலையை வைத்து "தட்டுவதற்கு" ஆலோசனை கூறுவதிலும் ஒரு நண்பனாக தன் கடமையை செவ்வனே ஆற்றுகிறார் போத்தி.

இதற்கு பிறகு, சிறிய கதாபாத்திரங்களான பழனியில் பண்டாரத்தின் பணத்தை திருட அவரை தொடரும் திருடனும், காவல்நிலையத்தில் பசும் ஒவ்வொரு காவலர்களும், அவைகளின் குணாதிசயத்தை நம்முள் நிரப்பிவிடுகிறார்கள். கொச்சன் பொதுவுடைமை பற்றி கூறுவதும், உருப்படிகளை "சகாவு" என விளிப்பதும், பின் தொடரும் நிழலின் குரலை நினைக்கவைத்தன. சில பக்கங்களிலேயே வரும் பண்டாரத்தின் சம்பந்தியம்மாள் பல்வேறு கெட்டவார்த்தைகளை மனதில் உண்டாக்குகிறாள். எப்போதும் வாக்கில் விஷத்தை வைத்திருக்கும் பக்கத்துவீட்டு உண்ணியம்மை ஆச்சி, அடியாட்களாக வரும் மாதவப்பெருமாள், தேவரான வண்டிமலை அனைத்தும் வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கும் கச்சிதமான பாத்திரங்கள்.

மேற்கூறிய அனைத்து உணர்ச்சிகளின் மேல்தான் மனித வாழ்க்கையின் அவலத்தை ஜெயமோகன் "உருப்படிகள்" மூலமாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார். குருவி மற்றும் ராமப்பன் உறவும், "இங்க லா வேற, புரோசீஜர் வேற" என பேசும்  அகமதுவின் அறிவும், குய்யனின் பசியும், அவர்களிடையே ஓடும் மெல்லிய நகைச்சுவையும், மாங்காண்டிசாமியின் புன்னகையும் நம்மை மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி விடுகின்றன. இந்த கதையில் சற்றேனும் ஆறுதலுடன் இருப்பவர்கள் என்றால் இந்த 'உருப்படிகள்'தான். இழக்க ஒன்றுமே இல்லை, அகமதுவின் வார்த்தைகளில் "பயப்பிடப்படாது மாமா. நாம இனி ஆரை பயப்பிடனும்?" என்பதில் அவைகள் இனி இழக்க ஒன்றுமே இல்லை என்பது தெள்ளென தெரிகிறது.

இதைவிட நம்முடைய முகத்தில் யாராவது காரி உமிழமுடியுமா என்றால் முடியாது என்றே தோன்றுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் "நாம கோயிலுக்கு வெளில பிச்சையெடுக்கிறோம், அவங்க உள்ளார எடுக்கிறாங்க" என கூறும்போது அசலில் நாமே உருப்படிகள் என்னும் நிதரிசனம் நம்மை அறைகிறது. புத்தகத்திலும் உலகிலும் நடக்கும் குரூரத்திற்கும் நாற்றமடிக்கும் வாழ்க்கைக்கும் காரணம் நம்முடைய பேராசை, மனிதத்தன்மையற்ற குணம் என்னும்போது மனம் வெட்கி கூனி குறுகிக்கொள்கிறது. இந்த புத்தகத்தை படித்துவிட்டு நம் மனதில் மனிதம் ஊறவில்லையென்றால் மல்லாந்து படுத்து மேல்நோக்கி காரிஉமிழ்வது போலத்தான்.

கடைசியாக இந்த கதையில் இருக்கும் குரூரம்.. மனிதர்களை உருப்படிகளாக நடத்தும் தன்மை, பணத்தை காலில் இருக்கும் வெட்டுகாயத்திற்குள் மறைத்து வைப்பது, விலைமாதாகிப்போன பெண்ணை தகப்பன் சென்று தூரத்திலிருந்து பார்ப்பது, முதுகெலும்பு உடைந்த பெண்ணை காவலர்களே வன்புணர்ச்சி செய்வது  என உடலை கூசவைக்கிறது. கல்யாண சாப்பாட்டை எதிர்பார்த்து உருப்படிகள் ஏமாறும் தருணத்தின் குரூரம் எவராலும் தாங்கமுடியாத ஒன்று. உச்சமாக முத்தம்மை "ஒத்தவிரலு"என அலறும்போது மனம் பதைக்கிறது. ஆனால், ஒன்றுமே செய்யமுடியாது, ஒருவேளை பண்டாரத்திற்கே அது முத்தம்மையின் மகன் என தெரிந்திருந்தால் அவர் விட்டிருப்பாரா என்ன?

என்னுடைய தரிசனம்: கலியுகத்தில் ஒவ்வெரு மனிதனுக்குள்ளும் ஒரு நல்லவனும் கெட்டவனும் இருக்கின்றார்கள். சந்தர்ப்பமே அவன் நல்லவனா கெட்டவனா என காட்டுகிறது. கதையில் உள்ள குரூரம் மேலோட்டமானது, புறவயமானது. ஆனால் கதையின் அடியில் முழுக்க முழுக்க ஓடும் ஒரே உணர்ச்சி மனிதம், மனிதத்தன்மை, மனிதனின் வாழ்க்கை குறித்த உணர்ச்சி.

அடிக்குறிப்பு: இப்பதிவில் பல இடங்களில் உருப்படிகள் என்னும் வார்த்தையை உபயோகித்தது தவறு   உணர்ந்தாலும், புத்தகத்தை படித்ததின் தொடர்ச்சியாக எழுதியதால் வந்த தாக்கமே அன்றி வேறு இல்லை.

ஞாயிறு, 30 ஜூன், 2019

ஆச்சரியம் என்னும் கிரகம் - வாசிப்பு அனுபவம்

ஆச்சரியம் என்னும் கிரகம் - நான் இதுவரை படித்ததில் சிறந்த சிறார் இலக்கியங்களில் ஒன்று.

 சாஹித்திய அகாதெமியின் பதிப்பாக வந்துள்ள இந்த தொகுப்பில் ஐந்து சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் இப்போது அதிகமாக இருக்கும் சுயநலமிக்க பேராசை, வளர்ச்சிக்கு பின்னால் ஓடுதல் மற்றும் மிகவும் மெலிந்துவரும் சகமனித உணர்வு போன்றவற்றின் பின்விளைவுகளை குழந்தைகளுக்கும் புரியுமாறு எழுதியுள்ளார் ஜப்பானிய எழுத்தாளரான ஷின்ஜி தாஜிமா.

முதல்கதையில் மனிதனாக மாறிவிட்ட கோன் என்னும் நரி, எப்படி இக்கால மனிதனின் குணமான இயந்திரத்தனத்தை கொண்டு தன் நரி இனத்தின் அழிவை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை ஆராய்கிறது. பொருளாதார வசதிக்காக வெளியூரிலும் வெளிநாடுகளிலும் வேலை செய்துகொண்டு ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ பெற்றோரை பார்க்க செல்லும் இக்கால இளைஞர்களின் தவிப்பை தத்ரூபமாக காட்டுகிறார்.

இரண்டாவது கதையில் நம் மனம் எப்படி மாற்றங்களை எதிர்கொள்ளவேண்டும் என்பதை இரு செடிகள் விதைகளிருந்து வெளிவருவதை குறியீட்டாக கொண்டு விளக்குகிறார்.

மூன்றாவது, புத்தகத்தில் தலைப்பான ஆச்சரியம் என்னும் கிரகம். இந்த கதையில் மனித இனம் வளர்ச்சிக்காக இயற்கையின் வரங்களை எவ்வாறெல்லாம் சுரண்டுகின்றன, அதனால் இந்த உலகமே எவ்வாறு அழிவின் பாதையில் செல்கிறது போன்ற இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் தேவையான விஷயங்களை விவாதிக்கிறது.

நான்காவது கதை மனிதர்களுக்குள் இருக்கும் போட்டிமனப்பான்மையை, அதனால் ஏற்படும் பாதிப்புகளை கூறுகிறது.

கடைசி கதை இயற்கை வளங்களை அழிப்பதனால் விளையும் வறட்சியை படம் பிடிக்கிறது.

இந்த ஐந்து கதைகளும் குழந்தைகளுக்கு இந்த நூற்றாண்டில் நடந்துகொண்டிருக்கும் நுகர்வு கலாச்சாரமும், அதன் விளைவுகளான  சுயநலமும், பேராசையும், மனிதாபிமான உணர்வுகளும் அதன் நேர்மறை எதிர்மறை பாதிப்புகளும் மிக சிறந்த அறிமுகமாக அமையும். மனிதன் என்னும் மிருகம் பிற உயிரினங்களை எவ்வாறு சுரண்டுகிறது, இரக்கம், உலகியல் குறித்த தரிசனம், முதலியவை குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் ஒரு புதிய வாசலை திறக்கும்.

சனி, 20 ஏப்ரல், 2019

சிறுவயது விளையாட்டுக்கள்

பள்ளிப்பருவத்தில் எங்களுடைய விளையாட்டு என்பது ஒன்று சேர்ந்து விளையாடும் அனுபவமாவே இருந்தது. ஆண்-பெண் பேதமின்றி அனைவரும் தெருவிலேயே விளையாடுவோம். பெண்கள் ஒருபுறம் ஐந்தாங்கல், ஸ்கிப்பிங் என விளையாட, நாங்கள் மட்டைப்பந்து, கபடி, என விளையாடுவோம். சில சமயங்களில் பையன்களும் பெண்களும் சேர்ந்து கோ-கோ விளையாடுவோம். இவற்றையெல்லாம்விட குதூகலமான விளையாட்டுக்கள் இரண்டு உண்டு. அவை இரண்டும் பையன்களுக்கானவை என வரையறை செய்யப்பட்டிருந்தன.

ஒன்று ஒருவிதமான பந்து விளையாட்டு. பையன்கள் இரு அணிகளாக பிரிந்து நிற்க வேண்டும். ஏழு தட்டையான கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைக்கவேண்டும். ஒரு அணியின் "வீரன்" பந்தால் அந்த கற்களை சரிக்க அந்த அணி பையன்கள் கற்களை ஒன்றன் மீது ஒன்றாக ஏழு கற்களையும் அடுக்கவேண்டும். மற்ற அணியின் பையன்கள் அதை தடுக்கவேண்டும். எப்படியென்றால் அந்த பந்தால் கற்களை அடுக்கும் அணி பையன்கள் மீது பந்தை வீசி துரத்தவேண்டும். வேகமாக அடி வாங்கி வாங்கி, முதுகு முழுவதும் சிகப்பான அனுபவங்கள் பலருக்கு உண்டு. நானே ஒருமுறை என் முதுகை சிவக்கவைத்த ஒருவனை பழிவாங்க கையில் பந்துடன் ஊர் முழுவதும் துரத்தியிருக்கிறேன். விளையாட்டு முடிந்தபிறகு கோவில் குளத்தில் குளித்து வீடுதிரும்புவோம். குளிக்கும்போதே அடுத்தவன் முதுகை பழுக்கவைத்ததை பெருமையாக பேசி கோபதாபவெறுப்புகளை அங்கேயே விட்டுவிட்டு அடுத்தநாள் விளையாட்டை தொடங்குவோம்.

இரண்டாவது விளையாட்டு கண்ணாமூச்சி, அதுவும் இரவின் இருட்டில். ஊர் தேர்திருவிழா கோடை விடுமுறையின்போது வரும். சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து பலர் தங்களுடைய தாத்தா-பாட்டி வீட்டிற்கு வருவார்கள். அந்த நாட்களில் தினமும் கோவில் ஊர்வலமும், பிறகு பிரசாத விநியோகமும் இருக்கும். அனைத்து பையன்களும் இந்த சமயங்களில் வேட்டியிலேயே இருக்கவேண்டும். இரவு உணவுண்டபின் சுமார் ஒன்பது மணிக்கு விளையாட்டு தொடங்கும். தெருவிலுள்ள அனைத்து திண்ணைகளில் ஒளிந்துகொள்ளலாம். தேடுபவன் நூறுவரை எண்ணிவிட்டு வரும்போது அனைவரும் வேட்டியால் முகத்தை மூடிக்கொண்டு அவனை துரத்துவோம். அடையாளம் கண்டுபிடிக்காவிட்டால் மீண்டும் எண்ணவேண்டியதுதான் இது இரவு பன்னிரண்டு ஒருமணிவரை நீளும். ஒருநாள் இரவுமுழுதும் கண்டுபிடிக்க முடியாமல் மீண்டும் அடுத்தநாள் இரவும் அழுதுகொண்டே எண்ணதொடங்கும் பலநாட்களை நாங்கள் பார்த்துள்ளோம். கிராமமென்பதால் எங்களூரில் பழைய திரைப்படமே வெளியிடப்படும். விளையாடி முடித்தபின்னர் நகரத்து பையன்கள் கூறும் புதிய திரைப்பட கதைகளை கேட்டவாறு கோவிலிலேயே படுத்து உறங்குவோம்.

இந்தமாதிரி நட்பு என்பது எதையும் எதிர்பாராமல், தங்களை விளையாட்டிற்கே கொடுத்து அடுத்தவர்களை காப்பாற்றி விளையாடுபவை. அவற்றின் மூலம் எங்கள் சுயநலத்திலிருந்து வெளியேற எங்களில் பலரால் முடிந்தது. சிலசமயங்களில் பெரியவர்கள் யாரேனும் இருந்தால் மஹாபாரதமோ ராமாயணமோ கூறுவார்கள். இவற்றின் மூலம் முன்னோர் பட்ட கஷ்டங்களையும் துயரங்களையும், எங்கள் சொகுசான வாழ்க்கை குறித்தும் ஒப்பிட்டு அறிந்துகொள்ள முடிந்தது.

நேற்று என் மகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. வழக்கம்போல விடுமுறையை பாதி அம்மா பக்க பாட்டி வீட்டிலும் மீதியை அப்பா பக்க பாட்டி வீட்டிலும் கழிக்க கிளம்பினாள். ஆனால் அங்கே அவளுடன் விளையாட ஒருவர் அல்லது இருவர் மட்டுமே உள்ளனர். எங்கள் ஊரில் பக்கத்துவீட்டு சிறுமி, என் மனைவி வீட்டில் என் மனைவியின் அண்ணன் குழந்தைகள் இரண்டுபேர். அங்கேயும் ஓடியாடி விளையாடும் தருணம் வாய்ப்பதில்லை. நினைத்த வீட்டில் சாப்பிட்டு, கிடைக்கும் இடத்தில் நண்பர்களுடன் தூங்கும் இன்பம் முற்றிலும் வேறானது. சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் சில குழந்தைகள் உள்ளன. ஆனால் ஓடியாடி, இருப்பதை பகிர்ந்து விளையாடும் விளையாட்டுக்கள் முற்றிலும் இல்லை. இதனால் சுயநலமும் அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுக்காத தன்மையும் வளர்ந்து முற்றிலும் வேறு குழந்தைகளாக உருவாகிறார்கள்.

இவற்றிற்கு நகரத்தில் வாழும் பெரும்பாலான படித்த பெற்றோர்களின் குறுகிய மனஓட்டமே காரணம். குழந்தைகளை எந்த சமூக பொறுப்பும் இல்லாமல், எதைப்பற்றியும் சொல்லிக்கொடுக்காமல் வளர்க்கின்றனர். என் மகள் பள்ளிக்கூடத்தில் நண்பர்களிடம் பேசியதாக கூறும் விஷயங்களே இதற்கு சான்று. ஏதோ சிறிதளவில் வாசிக்கும் பெற்றோர்களால் பரந்த மனப்பான்மையை பெறும் குழந்தைகள் மற்ற குழந்தைகளால் ஏமாளி பட்டம் பெற்று வீட்டில் அழுவதை நான் பார்த்திருக்கிறேன். பள்ளிகளிலும் அறம் பற்றிய, தார்மீகம் பற்றிய வகுப்புகள் இல்லாததால் சரியான வழிகாட்டுதலின்றி குழந்தைகள் தவிக்கின்றன.

இவற்றிலிருந்து குழந்தைகளை, அந்த பிஞ்சு மனங்களை சரியான வாழ்க்கைமுறை நோக்கி செலுத்துவது பெற்றோராகிய நமக்கும், பள்ளிகளுக்கும், இந்த சமூகத்திற்கும் உள்ள முக்கியமான கடமையாகும். இல்லாவிட்டால் மிக மோசமான சுயநலமிக்க ஒரு சமூகத்தையே நம்முடைய குழந்தைகளுக்காக நாம் விட்டுச்செல்கிறோம்.

புதன், 17 ஏப்ரல், 2019

கணநேர எரிச்சல்

எங்கள் கிராமத்தில் நான் மிதிவண்டி கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போது ஒன்பது வயது. அப்போதெல்லாம் எல்லார் வீட்டிலும் மிதிவண்டி இருக்காது. அதனால் வாடகை வண்டிதான். பெரிய வண்டி என்றால் ஒரு மணி நேரத்திற்கு 30 பைசா சிறிய வண்டி என்றால் 50 பைசா. ஊரில் இரண்டே கடைகள்தான் வாடகைக்கு மிதிவண்டி கொடுப்பார்கள். இரண்டு கடைகளிலும் ஒவ்வொரு சிறிய வண்டிதான் வைத்திருந்தார்கள். கற்றுக்கொள்பவர்கள் எப்போதும் சிறிய வண்டியை கடை திறந்தவுடன் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். இந்த சந்தர்ப்பங்களில் இரண்டு வழிகளை பின்பற்றலாம்.ஒன்று, வாடகைக்கு எடுத்தவனிடம் கெஞ்சி கூத்தாடி பேரம் பேசி, ஊரை ஒரு சுற்று அல்லது இரண்டு சுற்று வரலாம், அந்த பையனின் பெற்றோர் பார்க்காமல். இல்லையேல் கடை முன் அமர்ந்து காத்திருக்கலாம். நான் இரண்டாவது வழியை தேர்ந்தேடுத்ததே அதிகம். இதற்கு அதீத பொறுமை தேவை. நாம் ஒரு மணிநேரம் காத்திருந்து, வேறு யாராவது கடைக்காரனின் உறவினர் எடுத்து சென்றால் ஒன்றும் செய்யமுடியாது. மறுபடியும் ஒருமணிநேரம் காத்திருக்கவேண்டியதுதான். இதையெல்லாம் மீறி பொறுமையுடன், அந்த கடையின் முன்னரே விளையாடி மூன்று மணிநேரமெல்லாம் காத்திருந்து வண்டி வாடகைக்கு எடுத்திருக்கிறேன்.

இதை இப்போது ஏன் சொல்கிறேன் என்றால், இரண்டு நாட்களுக்கு முன்பு அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்தேன். அகலம் குறைவான தெரு, புதியதாக கோவில் ஒன்று வந்திருப்பதால் இரண்டு பக்கமும் வண்டிகளை நிறுத்தியிருந்தனர். வண்டி மெதுவாக செல்ல பின்னல் ஒருவர் தொடர்ந்து ஒலிப்பானை அழுத்திக்கொண்டேவந்தார். திடீரென ஏதோ தோன்ற நான் வண்டியை நிறுத்திவிட்டு அவரிடம் எரிச்சலுடன் முன்னால் வழி இல்லை என கூறி சத்தம்போட, அவர் கூப்பாடுபோட, ஐந்து நிமிடம் அந்த இடமே மாறிப்போனது. இந்த எரிச்சல் நாள் முழுவதும் கூடவே இருந்து பாடுபடுத்திய பின்னர்தான் சென்றது.

பிறகு இரவு யோசித்தபோது நான் என் வேலையை பார்த்துக்கொண்டு சென்றிருந்தேனென்றல் இவ்வளவு பிரசனையே இல்லை, எரிச்சல் இல்லை. ஒரு சாதாரண மிதிவண்டிக்காக மூன்றுமணிநேரம் காத்திருந்த என் பொறுமை எங்கே, ஏன் இவ்வாறு அடிக்கடி எரிச்சல் வருகிறது. நான் வண்டியிலிருந்து தலையை நீட்டி "இரண்டு நிமிடம்" என்று சொல்லியிருக்கலாம், ஒன்றுமே சொல்லாமல்கூட சென்றிருக்கலாம். அந்த கணநேர எதிர்வினை என்னுடைய முழுநாளையும் வீணாக்கியது.

அந்த மனிதரும் முழுநாளும் என்போலவே இருந்திருப்பார் என்றால் கணநேர எதிர்வினையின் எதிர்மறை பாதிப்பு, குற்றவுணர்ச்சி என என் மனம் சோர்ந்துபோனது. இனிமேல் யாரிடமும் அனாவசியமாக சத்தம்போட்டு பேசுவதில்லை என நினைத்திருக்கிறேன். இதில் முக்கியமென நான் நினைப்பது எதுவென்றால், அந்த கணநேர எரிச்சலை தாண்டினால் போதும், அதற்கே பொறுமையின் அவசியம் அதிகம்.மெதுவாக என்னுடைய பொறுமையை மீட்டெடுக்கவேண்டும்.

திங்கள், 15 ஏப்ரல், 2019

அறம் வரிசை கதைகள் - வாசிப்பு, மீள்வாசிப்பு

பள்ளி பருவத்தில் என்னுடைய வாசிப்பு தொடங்கிய காலத்தில் ராஜேஷ்குமார்களும் பட்டுக்கோட்டை பிரபாகர்களும் அவர்களுடைய கதைகள் மூலம் என்னை பல நாட்கள் என் பெற்றோர்களிடம் திட்டும் அடியும் வாங்கி தந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் நான் உருப்படியாக பலமுறை வாசித்து மீள்வாசிப்பு செய்து கற்றுக்கொண்டது ராஜாஜியின் வியாசர் விருந்து.

கல்லூரியிலும் சரியான தேடுதலும் வழிகாட்டுதலும் இல்லாததால் சில வார இதழ்களும் துப்பறியும் கதைகளும் படித்து நேரத்தை வீணடித்தேன். பிறகு என் நண்பன் ராமசாமி மூலம் கல்கியும் சாண்டில்யனும் அறிமுகம் ஆயினர். பிறகு சுஜாதா. அப்போது எல்லாரையும் போல இலக்கியம் என்பது இவையே என கிடந்தேன். இவற்றினால் நடந்த ஒரே நன்மை, என்னுடைய வாசிப்பு வேகத்தை கூட்டியது மட்டுமே.

வேலைக்கு புனே சென்று பிறகு வாசிப்பு அறவே நின்றுபோனது. பிறகு மீண்டும் வாசிப்பை தொடங்க நான்கு  ஆண்டுகள் ஆனது. தொடங்கியபோது முற்றிலும் புதிய இடத்தில தொடங்கினேன். தொடங்கிய இடம் ஜெவின் இணையத்தளம்.

சில கதைகள் மற்றும் பதிவுகள் படித்தபின் தொடங்கியதுதான் அறம் சிறுகதைகள். முதல்முறை படிக்க நான் எடுத்துக்கொண்டது 180 நிமிடங்கள். ஆனால் அவை ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் நீங்கவில்லை.

செட்டியாரின் மனைவியும், கெத்தேல் சாஹிப்பும், வணங்கான் நாடாரும் என்னை முழுவதுமாக உள்ளிழுத்துக்கொண்டனர். கீதையின் சாராம்சமான கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதை யானை டாக்டர் தவிர யாரும் இவ்வளவு எளிதாக கூற முடியாது. இந்நாள்வரை மனம் நெகிழாமல், கண் கலங்காமல் நூறு நாற்காலிகள் கதையை நான் படித்தது கிடையாது.

எந்த ஒரு அறத்தையும் உணர்ச்சிகள் வழியாக கூறினால் அதன் நேர்மறை பாதிப்பு பல நாட்கள் இருக்கும். பாதிப்பு இருக்கும்வரை நம் மனது அதை பற்றி யோசித்து யோசித்து கருத்தை தொகுத்துக்கொள்ளும்.
எப்போதெல்லாம் மனோதைரியம் குன்றி, தன்னம்பிக்கையற்று இருந்திருக்கிறேனோ அப்போதெல்லாம் நான் வணங்கானையும், அதீத வெறுப்பு பெருகும் காலங்களில் நூறு நாற்காலிகளையும் படிக்க வைத்து மீள்வாசிப்பு செய்யவைத்தது. அலுவலகத்தில் ஏதோ ஒரு பெரிய காரியம் செய்து பிறர் அதை கவனிக்காமல் போனால் யானை டாக்டர் மனதில் வராமல் போனதில்லை.

இப்போது அதே கதைகளை என் எட்டு வயது  மகளுக்கு சொல்லும்போது அவைகளே முற்றிலும் வேறொரு தரிசனத்தை தந்தன. குழந்தையின் பார்வையில் அறம் என்பது சரி அல்லது தவறு என்னும் இருமைக்குள் அடங்கிவிடும். அதை மீறி பரந்த விசாலமான பார்வைக்கு அறம் சிறுகதைகள் மிகவும் தகுந்தவை. முதல்முறை செட்டியாரின் மனைவி தார்ச்சாலையில் அமர்ந்து அவளை தூக்கியபோது சேலையுடன் தோலும் கிழிந்தது என சொல்ல என்னுடைய மகள் கண் கலங்கி, அடுத்தவர்களை எப்போதும் நான் ஏமாற்றமாட்டேன் என சொன்னது என் தரிசனங்களுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

ஜெவின் கதைகளுள் அறம் சிறுகதை தொகுப்பு மிகவும் முக்கியமான இடத்தை பிடித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

திங்கள், 1 ஏப்ரல், 2019

ஈரோடு விவாத பட்டறை

கற்றலின் இனிமை தகுதியானவர்களிடம் கற்பது...

சிலமுறை சென்னை வெண்முரசு விவாதங்களில் கலந்துகொண்டிருந்தாலும் ஒரே நாளில் தொடர்ந்து  நான்கு அமர்வுகளில் கலந்துகொள்வது இதுவே எனக்கு முதல்முறை. தீவிரம், விவாதங்களில் நகைச்சுவை, சக வாசகர்கள் என அனைத்துமே கடந்த இரண்டு நாட்களை மேலும் இனிமை கொண்டதாக ஆக்கிவிட்டன.

சனிக்கிழமை அதிகாலை ரயில்நிலையத்தில் மலைச்சாமியையும் ராகேஷையும் சந்தித்ததில் தொடங்கியது என் முதல் இலக்கிய சந்திப்பு. எதிரில் வந்த ஆட்டோவில் தத்வமஸி என எழுதியிருக்க அதற்கு கீழே ஆட்டோ யூனியன் பெயரை பார்த்தவுடன் கண்டிப்பாக ஆட்டோ ஓட்டுநர் நல்ல வாசகராக இருப்பார் என உரையாடல் தொடங்கியது. அது, பிற எழுத்தாளர்களிடம் சென்றுகொண்டிருக்க ராஜ்மஹால் வந்ததும் அப்படியே நின்றது. காரணம், முன்கதவு திறந்திருக்கிறதா இல்லையா என்ற அடுத்த விவாதம் தொடங்கியதுதான்.

ராஜகோபாலன் முதல் அமர்வின்போது தம்முடைய உரையை மனம் எப்படி சிந்திக்கிறது, மொழியின் பயன்பாடுகள், "பாதிப்பு" என்ற வார்த்தை எப்படி பாதிப்படைகிறது என சுவாரசியமாக நடத்திச்சென்றார். விவாதத்தின் குறிக்கோள் அறிதலும் பகிர்தலுமே அன்றி வேறில்லை என அவர் சொன்னதை இந்த அமர்வின் ஆப்தவாக்கியமாக உணர்ந்தேன்.

செந்தில் கேள்விகளின் வகைகள், கேள்வி ஏன் எழுப்புகிறோம், என இரண்டாம் அமர்வை நன்றாக தொகுத்து வழங்கினார். இந்த அமர்வில் தெரிந்த விஷயங்களை தேவையான அளவே சொல்லுங்கள் என்பது என் அடுத்த ஆப்தவாக்கியமாக அமைந்தது.

ஜெயமோகன் அவர்களின் உரை மதியத்தில் ஆரம்பித்தது. எடுத்தவுடன் மூன்று சொற்களை விளக்கிய பின் உடனடி தேர்வு என சூடுபிடித்தது. பிறகு விவாதம், விவாதகருத்து, சுபக்ஷம், பரபக்ஷம் என கூரிய கலைச்சொற்களால் ஜெ வகுப்பை முன்னெடுத்து சென்றார். சற்றே கண் சொருக ஆரம்பித்ததும் அடுத்த கேள்வி-பதில் என அனைவரையும் உடனே உச்சகட்ட விழிப்புநிலைக்கு செல்லவைத்தார். விவாதத்தில் வாதம் (argument) செய்ய தொடங்கினால் நாம் எதிரியாகவே மாறிவிடுவோம் என்பது நான் கண்ட மூன்றாவது ஆப்தவாக்கியம்.

நான்காவது அமர்வாக இரு தலைப்புகளில் விவாதம் செய்யவைத்து தவறுகளை உடனடியாக சொல்லி புரிய வைத்தது முதல் மூன்று அமர்வுகளில் கற்றவற்றை தொகுக்க வைத்தது. என்னால் இரண்டுமுறை மட்டுமே பேசமுடிந்தது. அப்போது கூட ஏதாவது சொல்லி ஜெவிடம் திட்டு வாங்கக்கூடாது என்ற பதட்டத்தை உள்ளடக்கியே பேசினேன். கடைசியில் ராஜகோபாலன் என்னுடைய பெயரை சொல்லி இவர் பதட்டப்படாமல் சொல்லவேண்டியதை சொன்னார் என்னும்போது "என்னுடைய கஷ்டம் உமக்கு எங்கே ஐயா தெரிய போகிறது" என மனதில் தோன்றிய எண்ணத்தை தடுக்க முடியவில்லை.

மறுநாள் காலையில் ஐந்தாவது அமர்வில், பிழையான தருக்கம் என்பது என்ன என தொடங்கி, மேலை தத்துவங்களில் எவற்றையெல்லாம் பிழை என வகைப்படுத்துவர் என்பவற்றை கூறி உரையை கொண்டு சென்று, மறுபடியும் தேர்வு வைத்து சரியான பதில்களை கூறியவர்களுக்கு பரிசு கொடுத்தார் ஜெ .

கடைசி அமர்வில், இந்திய ஞானமரபின் தரிசனங்களையும் அவற்றின் மூல ஆசிரியர்களை பற்றியும் அறிமுகம் தந்து, அவற்றில் ஒன்றான நியாய தரிசனத்திற்குள் இட்டுச்சென்றார் ஜெ. நியாய தருக்கம் என்றால் என்ன, அவற்றின் பகுதிகள், ஷோடச ஸ்தானம் என கடைசி அமர்வு நிகழ்ந்தது. இந்த முறை தேர்வில், என்னுடைய அனைத்து பதில்களும் சரியாக இருக்க ஜெ புத்தக கொடுப்பார் என எதிர்பார்த்து நின்றபோது, சரியான பதில்களை பலர் எழுதியிருந்ததால் அவர் மனதில் மட்டுமே இடம் கொடுப்பேன் என கூறி எல்லாரையும் சிரிக்கவைத்தார். எந்த ஒரு தத்துவத்தையும் ஒரு படமாக, சித்திரமாக நினைவில் வைத்துக்கொள்ளுதல் அவற்றை மறக்க முடியாததாக ஆக்கும் என ஜெ கூறியது இந்த அமர்வு மற்றும் மொத்த இரண்டு நாட்களின் ஆப்தவாக்கியமாக மனதில் நின்றது.

ஞாயிறு காலை இளையராஜாவுடனான ஜெவின் விவாதம் மற்றும் அமர்வுகள் முடிந்த பிறகு அனைவருடன் ஜெ பேசியது முதலியவற்றில் முழுமையாக பங்கேற்காததால் அவைற்றை என்னால் தொகுத்துக்கொள்ள முடியவில்லை.
கடைசியில், என் மகளுக்காக வாங்கிய வெள்ளி நிலம் புத்தகத்தில் கையெழுத்து வாங்கி வணங்கி ஜெவிடம் விடை பெற்றேன்.

செவிக்கு உணவில்லாதபோது வயிற்றுக்கு "சிறிது" ஈயப்படும் என்ற கருத்தை திருக்குறளோடு அமைப்பாளர்கள் நிறுத்திவிட்டதால், நல்ல சுவையான உணவை உண்ணும்போது கிடைத்த அனுபவமும் இனிமையாக அமைந்தது. உணவின் சுவை ஜாஜா "காலையில்  பொங்கலை போடாதீர்கள் என்று சொன்னால் கேட்கமாட்டேன் என்கிறார்கள்" என்று கூறியதில் பிரத்யக்ஷமாக தெரிந்தது.

மீண்டும் மலைச்சாமி மற்றும் ராகேஷுடன் பேருந்து பிடித்து ஜெவின் அறம் பற்றி பேசி, சென்னைக்கு செல்லும் பேருந்தை விட இருந்தேன். நல்லவேளையாக ராகேஷ் நினைவுலகிற்கு வந்து கிளம்பச்சொன்னார்.
இந்த இரண்டு நாட்களின் இனிமைகளை அசைபோட்டவாறு சென்னை வந்துசேர்ந்தேன்.

முதல் பதிவு

நான் எப்போதும் சிந்திப்பதை எழுதும்போது மேலும் கூரிய சொற்களால் தொகுத்துக்கொள்கிறேன்... அந்த தொகுத்தல் வழியாக பிறரிடம் விவாதிக்க முடியும் என தோன்றியது...

கற்றலும் பகிர்தலுமே விவாதத்தின் ஒரே குறிக்கோள் என உணர்ந்தவுடன் அதே உணர்வெழுச்சியுடன் தொடங்கியதே இந்த வலைப்பூக்கள்...

புலிநகக் கொன்றை - வாசிப்பனுபவம்

சிறுவயதில் பி ஆர் சோப்ரா-வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் "நான் காலம் பேசுகிறேன்" என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்...